ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 42: கை நழுவிய தேசிய விருது

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் நேர்மையான அதிகாரிகள் என்று நேர்மையாளர்களால் பாராட்டப்படக் கூடிய அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள்.
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 42: கை நழுவிய தேசிய விருது

சிவாஜி நடித்த "ஊருக்கு ஒரு பிள்ளை' என்ற படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களை சென்ற வாரம் குறிப்பிட்டேன். அதில் மேலும் இரு பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

""முத்துமணிச் சிரிப்பிருக்க - செம்பவள
மோகவண்ண இதழிருக்க
தங்கநிறம் உனக்கிருக்க - சித்திரமே
தங்கநகை உனக்கெதற்கு''
- என்று சிவாஜி பாடுவது போலவும்
""முத்துமணிச் சிரிப்பிருக்க - செம்பவள
மோகவண்ண இதழிருக்க
தங்கநகை எனக்கெதற்கு - எப்பொழுதும்
உங்கள்விழி ரசிப்பதற்கு''

என்று கே.ஆர். விஜயா பாடுவது போலவும் அந்தப் பாடல் வரும்.

""நீயிந்த ஊருக்கொரு பிள்ளையல்லவா
நான் இந்த ராஜாவுக்கு ராணியல்லவா''

என்று ஸ்ரீபிரியாவும் சிவாஜியும் பாடுவதுபோல் ஒரு பாடலும் எழுதினேன்!

அதன் பின்னர், இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் "சிரஞ்சீவி' என்ற படத்தில் சிவாஜிக்காக ஒரு பாடல் எழுதினேன். 

""இந்தப் பாடலை யார் எழுதுவது? என்று சிவாஜி கேட்டார். முத்துலிங்கத்தை வைத்து எழுதுகிறோம் என்று சொல்லியிருக்கிறேன். படத்தின் பெயர் பாட்டில் வரும்படி எழுது'' என்றார் டைரக்டர் சங்கர். இது "இதயக்கனி' படத்தின் வசனகர்த்தாவான ஜெகதீசனின் சொந்தப் படம். இதற்கும் இசை எம்.எஸ்.விசுவநாதன் தான்.
அவர் போட்ட மெட்டுக்கு நான் எழுதிய பாடல்:
""அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக
ஊர்வாழ உழைப்பவன் சிரஞ்சீவி 
தென்பாங்குக் காற்றாக தேவாரப் பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி''
என்று தொடக்கமாகும்.
சரணம் (1)
""வான் வணங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
நதிபோலவே நடக்கின்றவன்
நிலவாகவே தேய்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி''
 சரணம் (2)
""வாய்மணக்கச் சிரிக்கும் மனிதன்
தாய்நிலத்தை உயர்த்தும் தலைவன்
அறிவாலயம் படைக்கின்றவன்
பெரியோர்களைத் துதிக்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி''
இந்தப் பாடல் ஓரளவு பிரபலமானது. இதை டி.எம். செளந்தரராஜன் பாடியிருப்பார்.

இதில் இன்னொரு காதல் பாடலும் எழுதினேன். அது சிவாஜிக்கல்ல. வேறொரு நடிகர், நடிகை பாடுவது போல் இருக்கும்.
""நிலவு வந்து நீராட
நெருங்கி வந்து உறவாட''
என்று ஆரம்பமாகும்.

சிவாஜி நடித்த "ராஜரிஷி' என்ற படத்திற்கும் கே.சங்கர் என்னைப் பாடல் எழுத வைத்தார். இது கதாசிரியர் கலைஞானம் தயாரித்த படம். சொர்ணமுகி ஆடுகின்ற ஒரு நாட்டியப் பாடல். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.

"கருணைக்கடலே வாழ்க' என்ற தொகையறாவுடன் தொடங்கும் அந்தப் பாடல். அரிச்சந்திரனாக சிவாஜி நடிப்பார். அவருடைய தர்பாரில் இந்தப் பாடல் வரும். வாணி ஜெயராம் பாடியிருப்பார்.

கே.சங்கர் இயக்கிய பல படங்களில் நான் எழுதியிருக்கிறேன். ஒருவருக்கு வாக்குக் கொடுத்தால் அதை நிறைவேற்றக் கூடியவர் அவர். பெரிய நடிகர், சின்ன நடிகர் என்று பார்க்க மாட்டார். தன் மனதுக்கு எது சரியென்று படுகிறதோ அதைத் துணிச்சலோடு சொல்லக் கூடியவர்.

அதுபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் நேர்மையான அதிகாரிகள் என்று நேர்மையாளர்களால் பாராட்டப்படக் கூடிய அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள் இருவர். ஒருவர் வெ. இறையன்பு, மற்றொருவர் சகாயம். 

இதில் இறையன்பு எழுத்தாளராகவும் சிறந்த சிந்தனையாளராகவும் சொற்பொழிவாளராகவும் விளங்கக் கூடியவர். இவரது கட்டுரைகளில் இருந்து சில கருத்துக்களை எடுத்து அதைக் கவிதையாக்கி இருக்கிறேன். சகாயமும், இறையன்பும் மிகச்சிறந்த பண்பாளர்கள். சொல்வதைச் செய்யக் கூடியவர்கள். செய்வதையே சொல்லக் கூடியவர்கள்.

நான் சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸை நேரில் இதுவரை சந்தித்ததில்லை. மற்றவர்கள் அவர் புகழைப் பேசக் கேட்டிருக்கிறேன். 

இப்படிப்பட்ட நேர்மையாளர்கள் அரசியலில் எவராவது இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாக வருகிறது.

ஒரு காலத்தில் தொண்டாக இருந்த அரசியல் இன்று தொழிலாக மாறிவிட்டது. வட்டிக்கடை நடத்துவதுபோல் பலர் கட்சிக்கடை நடத்துகிறார்கள். அரசியலின் அடிப்படையே சுயநலமாய் ஆகிவிட்டது. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவர்கள் தாம் இன்று அதிகமாகியிருக்கிறார்கள்.

திரைத்துறையிலும் அப்படிப்பட்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்றாலும் அதில் சொன்னது போல் செய்யக்கூடிய கே.சங்கரைப் போல் சிலர் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இயக்குநர் பி. மாதவன். 

அவரது "பொண்ணுக்குத் தங்க மனசு' என்ற படத்திற்குப் பாடல் எழுதிய நேரத்தில் என் பாட்டு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், ""இனிமேல் என் படத்திற்கு நீங்களும் கண்ணதாசனும் தான் பாடல் எழுதுவீர்கள். உங்கள் இருவரைத் தவிர நான் யாரையும் பயன்படுத்தமாட்டேன். அதுவும் கண்ணதாசன் ஊரில் இல்லாத நேரத்தில் பாடல் எழுத வேண்டியிருந்தால் அல்லது கண்ணதாசன் எழுத முடியாத சூழ்நிலை இருந்தால் தான் உங்களைப் பாடல் எழுத அழைப்பேன்'' என்று கூறினார்.

சொன்னதுபோல் கண்ணதாசன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது "என் கேள்விக்கென்ன பதில்' என்ற படத்திற்குப் பாடல் எழுத வேண்டியிருந்ததால் என்னை எழுத வைத்தார். ""கண்ணதாசன் இல்லாததால்தான் உங்களை அழைத்தோம்'' என்றும் கூறினார். சொன்னதைப் போல் செய்யக் கூடியவர் அவர் என்பதை அப்போது அறிந்து கொண்டேன். அவர் உண்மையான மனிதர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அந்தப் படத்தின் கதை வசனகர்த்தா- பாலமுருகன். ரஜினிகாந்த் நடித்த படம் அது. மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதன்தான் அந்தப் படத்தின் இசையமைப்பாளர். 

பள்ளிக்கூட ஆண்டு விழாவில் மாணவர்கள் பாடுவதுபோல் அந்தப் பாடல் அமைய வேண்டும், ஒற்றுமையையும், நாட்டுப்பற்றையும் ஜாதி, மத பேதம் யாரும் பார்க்கக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று டைரக்டர் மாதவன் காட்சியை விளக்கினார்.
அதற்கேற்ப நான் எழுதிய பாடல் இதுதான்:

""ஒரே வானம் ஒரே பூமி ஒரே சாமிதான்
நாம் - ஒரே குலம் ஒரே இனம் ஒரே ஜாதிதான்
ஒரே ரத்தம்தான் - உயிரும்
ஒரே உயிருதான்''
இதுதான் பல்லவி.
சரணம் (1)

""தெற்கு வடக்கு வேறுபாடு திசையில் இருக்கலாம் - ஒரு
தேசமக்கள் வேறுபட்டால் அமைதி நிலைக்குமோ - அன்று
இனவெறியை மதவெறியை மறந்து சென்றீரே - அதை
மறந்ததாலே சுதந்திரத்தை வாங்கிக் கொண்டீரே - இன்று 
உங்களுக்குள் ஜாதி பேதச் சண்டை வருவதோ - ராம
ராஜியத்தில் ரத்த கங்கை பொங்கிப் பாயவதோ''
சரணம் (2)

ஒருவன்: மேடையிலே ஜாதிகளை ஒழிப்பேன் என்பவர்கள் -
தங்கள் பெயரின் பின்னே ஜாதிப் பேரைப் போட்டுக் கொள்வதேன்
மற்றொருவர் : இது ஆதியிலே வந்துவிட்ட பழக்கம் தானய்யா
அறிந்து கொண்டு திருந்தி வாழ்ந்தால் பேதம் ஏதய்யா
ஒருவன்: பள்ளியிலே பிள்ளைகளைப் படிக்கச் சேர்க்கையிலே - அங்கும் ஜாதிப் பெயர் என்னவென்று கேட்கின்றார்களே
மற்றொருவர் : இதை - ஆட்சியிலே உள்ளவர்கள் உணர்ந்து கொண்டாலே 
அகிலமெல்லாம் ஜாதிபேதம் ஒழியும் தன்னாலே
சரணம் (3)
ஒருவன் :ஒரு தாயின் வயிற்றினிலே உதித்த பிள்ளைகள் - நீங்கள்
ஒற்றுமையாய் வாழ்வதற்கு மலர்ந்த முல்லைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கேட்டுக் கொள்ளுங்கள் -         இதை உணர்ந்துகொண்டு மற்றவர்க்கும் எடுத்துச் சொல்லுங்கள்
கோரஸ் :    காட்டு மூங்கில் கூட்டம் போலச் சேர்ந்து வாழுவோம்
காக்கை, குருவி ஜாதிபோலப் பகிர்ந்து உண்ணுவோம்
உலகமெங்கும் சமத்துவத்தை ஓங்கச் செய்குவோம்
ஒருமைப்பாடு எனும் கொடியை உலகில் ஏற்றுவோம்
இதை டி.கே. கலாவும், சசிரேகாவும் பாடியிருப்பார்கள்.

இந்தப் பாடலை இயக்குநர்  பி. மாதவன் மிகவும் பாராட்டினார். ""தெற்கு வடக்கு வேறுபாடு திசையில் இருக்கலாம். ஒரு தேச மக்கள் வேறுபட்டால் அமைதி நிலைக்குமோ- இந்தக் கருத்தை நானே உங்களிடம் சொல்லி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். சொல்லாமலே எழுதி விட்டீர்கள். வாழ்த்துக்கள்'' என்றார். இந்தப் பாடல் காலம் சென்ற பிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு மிகவும் பிடித்த பாடல். என் கைப்பட இந்தப் பாடலை அவரே எழுதி வாங்கிக் கொண்டார்.

இந்தப் பாடலுக்காக 1978-ஆம் ஆண்டு தேசிய விருது கிடைப்பதாக இருந்தது. சில அரசியல் காழ்ப்புணர்வால் நிராகரிக்கப்பட்டது. நாட்டிலே ஜாதி  உணர்வு முன்னைவிட அதிகமாக வளர்ந்து வருகிறது. எமதர்மன் வந்தாலும் இனிமேல் ஜாதிகளை எதிர்த்தழிக்க முடியாது.

பி. மாதவன் படம் தயாரிப்பதையும் டைரக்ட் செய்வதையும் நிறுத்திக் கொண்ட பின்னர், ஜெயலலிதாவின் போயிஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கிணங்க சில காலம் அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். ஆங்கிலம் நன்றாகப் பேசுவார். அதனால் அவரை ஜெயலலிதாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெயலலிதாவும் சிவாஜியும் நடித்த "பட்டிக்காடா பட்டணமா' என்ற படத்தைத் தயாரித்து இயக்கியவரும் இவர்தான். இவர் இயக்குநர் ஆகுவதற்கு முன்பு ஸ்ரீதரிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி.

(இன்னும் தவழும்)
படம் உதவி: ஞானம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com