காங்கோ புஷோங் நாடோடிக் கதை: பாம்பான தலைவன்! 

ஆற்றங்கரையில் அமைந்த அழகான ஊரில் மணமுடிக்கும் ஷேலா, தமாரா என்ற இரு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தகப்பனார் தன்
காங்கோ புஷோங் நாடோடிக் கதை: பாம்பான தலைவன்! 

ஆற்றங்கரையில் அமைந்த அழகான ஊரில் மணமுடிக்கும் ஷேலா, தமாரா என்ற இரு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் தகப்பனார் தன் பெண்களுக்கு மாப்பிள்ளைகள் தேட முடிவு செய்து, ஆற்றைக் கடந்து அக்கரையில் உள்ள கிராமம் ஒன்றிற்குச் சென்றார். 

அந்த கிராமத்தினர் வந்தவரை உபசரித்து, விசாரித்தனர். ""எங்கள் கிராமத்துத் தலைவர் தனக்கு ஒரு நல்ல பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார்'' என்று கூற, வந்தவர் ""சரி, நாளைக்கே உங்கள் தலைவன் மணமுடிக்கும் வகையில் என் பெண்ணை அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, ஊர் திரும்பினார். 
திரும்பி வந்தவர் தனது மகள்களிடம், ""உங்களில் ஒருவருக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துள்ளேன். அவன் அருகிலுள்ள கிராமத்துத் தலைவன். உங்களுள் யார் அவனை மணமுடிக்க விருப்பம் என்பதை உங்களுக்குள் பேசித் 
தீர்த்துக் கொள்ளுங்கள்'' என்றார். 

பொறாமை குணம் கொண்ட மூத்தவள் ஷேலா, ""நான்தான் மூத்தவள். எனவே நான்தான் செல்லப் போகிறேன்'' என்றாள். 

சரியென்று கூறிய அவள் அப்பா, ""ஊராரைக் கூட்டி தாரை தப்படையுடன் உன்னை அந்தக் கிராமத்திற்கு அனுப்பப் போகிறேன்'' என்ற உடனே மூத்தவள் மறுத்தாள். 

""உங்கள் சம்பிரதாயங்களை விட்டுவிட்டு மணமுடிக்க நான் தனியாகச் செல்லப் போகிறேன்'' என்றாள் அகம்பாவத்துடன். அவள் மசிய மாட்டாள் என்று உணர்ந்த தகப்பன், அவளை மிகவும் மன சலனத்துடன் மறுநாள் காலை காட்டு வழியே அனுப்பி வைத்தான்.

காடு வழியே தனியே நடந்த ஷேலா சோர்வடைய, ஒரு மரத்தின் நிழலில் இளைப்பாறினாள். அப்போது ஆடுகள் ஓட்டிவந்த சிறுவன் ஒருவன் அருகில் வந்து, ""வெகு தூரம் நடந்திருப்பீர்கள் போலிருக்கிறது, எங்கே செல்கிறீர்கள்?'' என்று கேட்க, ""என்னைத் தொந்தரவு செய்யாதே. நான் இந்த கிராமத் தலைவனுக்கு மனைவியாகப் போகிறவள். உன்னை மாதிரி பையன்களுடன் பேசுவது எனக்கு அவமரியாதை'' என்று கூறி, அவனை விரட்டினாள். 
ஆடுகளுடன் நடக்க ஆரம்பித்த சிறுவன், ""இப்படி பேசாதே. உனக்கு கெட்ட காலம்'' என்று சொன்னான். அதையெல்லாம் கவலைப்படாமல் நடந்த அந்தப் பெண் எதிரே ஒரு கிழவி வந்தாள். ""மகளே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீ செல்லும் பாதையில் ஒரு புதர் உன்னைப் பார்த்து சிரிக்கும். அதைக் கண்டு நீயும் சிரிக்கக் கூடாது. மற்றொரு இடத்தில் நல்ல தயிர் இருக்கும், அதை எடுத்து தின்று விடாதே. ஒருவன் தன் தலையைக் கழட்டிக் கொண்டு வருவான். அவன் கொடுக்கும் குடிநீரைக் குடித்து விடாதே. இவையெல்லாம் உனக்கு பிற்காலத்திலே தீமையை விளைவிக்கும்'' என்றாள். 

""ஏய் கிழவி, உன் பைத்தியக்காரத்தனமான பிதற்றல் எனக்குத் தேவையில்லை'' என்று அவளை உதறிவிட்டு நடக்க ஆரம்பித்த ஷேலாவைப் பார்த்து, ""என் பேச்சைக் கேட்காவிடில் உனக்கு கெட்ட நேரம் வரும்''என்று கூறி கிழவி மறைந்தாள்.

தன் வழி நடந்த பெண், கிழவி முன்கூட்டியே சொன்னதைப் போன்று நடுவே நின்ற ஒரு பெரிய புதரைக் கண்டாள். அந்தப் புதர் ஷேலாவைப் பார்த்து கட, கடவென சிரிக்க ஆரம்பித்தது. ""சும்மா ஏன் சிரிக்கிறாய்? சிரிக்காதே என்னைப் பார்த்து'' என்று சொன்னாள். புதர் விடாமல் சிரிப்பதைப் பார்த்து அவளுக்கும் சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு போக, புதர் சிரிப்பதை நிறுத்தியது. சிறிது தூரத்தில் குடுக்கை நிறைய குளிர்ந்த, கெட்டியான தயிரைக் கண்டாள்.

"நெடுந்தூரம் நடந்து களைப்புடன் இருக்கையில் இது கிடைத்தது நல்லது' என்று தயிரைக் குடித்துவிட்டு குடுக்கையைத் தூர எறிந்துவிட்டு நடந்தாள். சற்று நேரத்தில் அவள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டாள். ஒரு பெரிய மனிதன் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் தன் தலையைத் தனியாக தன் இடது கையில் பிடித்திருந்தான். தலையில் கண்கள் திறந்திருந்தன, வாய் பேசியது.

""உனக்கு தாகமாயிருக்குமே, குடிக்கத் தண்ணீர் வேண்டுமா?'' என்று தனது வலது கையில் உள்ள குடுக்கையைக் காட்டியவாறு கேட்டான்.

அந்த விசித்திர மனிதன் பேசிய விதம், அவளை அவன் கொண்டு வந்த நீரைக் குடிக்க வைத்தது. குடித்ததும் அவனுக்கு நன்றி கூட கூறாமல் நடந்தாள். தூரத்தில் குன்றின் மீது அமைந்த கிராமத்தைக் கண்டதும், தான் செல்ல வேண்டிய கிராமம் அதுதான் என உணர்ந்தாள். குன்றின் மீது ஏறுமுன், சிறு ஓடையைக் கடக்க வேண்டியிருந்தது. அங்கு ஒரு சிறுமி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். ""ஊருக்குப் புதிதாக இருக்கிறீர்களே, எங்கே வந்தீர்கள்?'' என்று கேட்க, இவள் ""நான் இந்தக் கிராமத்துத் தலைவனை மணக்கப் போகிறேன், உன்னிடம் பேச நேரமில்லை'' என்று கூறினாள். 

அந்தக் கிராமத் தலைவனின் தங்கை தான்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அந்த சிறுமி, ""கோபித்துக் கொள்ளாதே. இங்கு நேராகத் தெரியும் வாசல் வழியாகச் செல்லாமல் பின்வாசல் வழி போவது நல்லது'' என்றாள். ஷேலாவோ, சிறுமி சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் முன்வாசல் வழியே கிராமத்துக்குள் நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்தவுடன் கிராமத்துப் பெண்கள் அவளைச் சுற்றிக் கூடினர்.

""நீ யார்? எதற்கு எங்கள் கிராமத்துக்குத் தனியாக வந்தாய்?'' என்று கேட்க, வந்த பெண் ""உங்கள் தலைவனுக்கு மணப்பெண்ணாக வந்திருக்கிறேன்'' என்றாள்.

""அது எப்படி மணப்பெண் தனியாக வருவது? எங்கே மற்றவர்கள், மணப்பெண் ஊர்வலம், மேளதாளம்? இது விசித்திரமாக உள்ளது'' என்றனர். ஷேலா பதில் சொல்லாமல், வலிக்கும் கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள். சில கிழவிகள் வந்து, ""எங்கள் கிராமத்துத் தலைவனை மணம் முடிக்க எண்ணினால், நல்ல உணவு செய்து வைக்க வேண்டும். இதோ சோளம். இந்த உரலில் இட்டு நன்கு இடித்து அவனுக்கு களி செய்து வை'' என்றனர்.

வேலை செய்து பழக்கம் இல்லாததால் அரைமனதுடன் சோளத்தை இடித்து மாவு செய்து, அரைவேக்காட்டு சோளக்களி ஒன்றைக் கிண்டினாள். அதைக் கிழவிகள் காட்டிய குடிசையில் வைத்துவிட்டு, கிராமத்துத் தலைவன் வருவதற்குக் காத்திருந்தாள். 

சூரியன் அஸ்தமிக்கும் வேளையில்,ஒரு பெரிய காற்று வீசியது, மரக்கிளைகள் குலுங்கின. திடீரென்று கதவைத் தள்ளிவிட்டு, ஐந்து தலை பெரிய பாம்பொன்று சீறி வந்தது. ""எங்கே என் சாப்பாடு?'' என்று சத்தமாக அதட்டிப் பேசியது பாம்பு.

""நான்தான் இந்தக் கிராமத்துத் தலைவன் என்று உனக்குத் தெரியுமா?'' என்று ஐந்து தலை பாம்பு கேட்க, ஷேலா பயத்துடன் இல்லையெனத் தெரிவித்தாள். சோளக்களியை ருசி பார்த்த பாம்பு, மேலும் சீறியது. ""இது மிகவும் மோசமான சாப்பாடு. நீ என்ன சமைத்திருக்கிறாய்? உனக்கு என் மனைவியாகத் தகுதியில்லை'' என்று கூறி, அவள் மேல் பாய்ந்து அவளைக் கொன்றுவிட்டது.
ஷேலாவின் முடிவு பற்றி அறிந்த அவள் தந்தை மிகவும் வருத்தப்பட்டாள். தந்தையின் வருத்தத்தைக் கண்ட இரண்டாவது மகள் தமாரா, "" நான் அந்த கிராமத்துத் தலைவனுக்கு மனைவியாகத் தயார். அவனை எப்படியும் என் வழிக்குக் கொண்டு வருவேன்'' என்றாள். அரைமனதுடன் ஒப்புக்கொண்ட தந்தை, அக்கம்பக்கத்தினரை அழைத்து தன் மகளின் விருப்பத்தைத் தெரிவித்து, மணப்பெண்ணுடன் செல்ல சிலரைக் கூட்டினான். அவர்களும் அடுத்த நாள் தமாராவுடன் மேளதாளத்துடன் புறப்பட்டனர். 

காட்டு வழியில் சென்றவர்கள், முதலில் ஆடு மேய்க்கும் சிறுவனைப் பார்த்து வழி கேட்டனர். அவனும் ""இடதுபுறம் செல்லும் சாலையில் செல்லவும். வலப்புறம் ஆபத்து மறைந்திருக்கிறது'' என்றவன், ""வழியில் ஒரு சூனியக்கார கிழவியைப் பார்ப்பீர்கள். அவளிடம் மரியாதையாகப் பேசவும்'' என்றான். 
அதுபோலவே அவர்களும் கிழவியைப் பார்த்து மரியாதையாகப் பேச, கிழவி தமாராவைப் பார்த்து, ""நீ கிராமத்திற்குச் சென்று சேர்ந்ததும் ஊர் கிழவிகள் உன்னை கிராமத்துத் தலைவனுக்கு சோளக்களி செய்ய சொல்வார்கள். அவர்கள் கொடுக்கும் சோளத்தை நன்றாக இடித்து, நன்றாகக் கிண்டி சோளக்களி செய்து வை. ஊருக்கு வெளியே ஒரு சிறுமியைப் பார்த்தால், அவளுடன் அன்பாகப் பேசு!'' என்று கூறி மறைந்தாள். 

கிழவி சென்ற பிறகு, அந்த மணப்பெண் கோஷ்டி கிராமத்தை நோக்கி நடந்தது. கிராமத்துக்கு வெளியே இருந்த ஓடையில் ஒரு சிறுமி துணி துவைத்துக் கொண்டிருந்தாள். வந்தவர்களிடம், ""எங்கே போகிறீர்கள்?'' எனக் கேட்டாள் அந்தச் சிறுமி. வந்தவர்களும் வந்த காரியத்தைச் சொல்ல, பரிவாக பேசிய அவர்களிடம் சிறுமி, ""நான் கிராமத்துத் தலைவனின் தங்கை. என் அண்ணன் நல்லவன். ஆனால் அவன் உருவம் விகாரமானது. மணப்பெண் அவனைக் கண்டு பயந்துவிடாமல் அவனுக்குப் பதில் சொல்ல வேண்டும். என்னுடன் வாருங்கள். நான் கிராமத்துக்குக் கூட்டி செல்கிறேன்'' என்று உதவ முன்வந்தாள். 

கிராமத்துக்குள் நுழைந்த தமாராவையும், உடன் வந்தவர்களையும் கிராமத்தினர் விசாரித்தனர். வந்த விஷயத்தைக் கேட்டபின் தமாராவை சோளக்களி செய்யுமாறு சொன்னார்கள். நல்ல உணவை தயார் செய்த பின், தலைவனின் குடிசையில் காத்திருந்தாள், தமாரா. 

சூரியன் அஸ்தமிக்க, பயங்கர காற்று அடித்து, மரங்கள் நடுங்கின. யாரோ வெளியே, ""இதோ தலைவன் வருகிறான்'' எனக் கூறக் கேட்ட தமாரா, ஓடிவிட எண்ணினாள். அப்போது சிறுமி சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர, தைரியத்தை வரவைத்துக் கொண்டாள். அப்போது ஐந்து தலைப் பாம்பாகிய தலைவன் சீறிக்கொண்டு வந்தான். நேராகச் சென்று சோளக்களியைச் சாப்பிட்டு சந்தோஷமடைந்தான். பின், தமாராவைப் பார்த்து, ""இந்த நல்ல உணவைத் தயாரித்த நீ, என் மனைவியாக இருப்பாயா?'' என்று கேட்டான். 

தமாராவும் தைரியமாக ""சரி''யென்று சொன்னாள். உடனே அந்த ஐந்து தலை பாம்பு ஒரு அழகான, கட்டுமஸ்தான வாலிபனாக உருமாறியது. ""சூனியக்காரி ஒருத்தியால் நான் சபிக்கப்பட்டு பாம்பாக மாறினேன். யாராவது இதுபற்றி பேசினாலும் அவர்களையும் தீமை தொடர்ந்தது. உன்னுடைய அன்பாலும், தைரியத்தாலும் எனக்கு சாப விமோசனம் கிடைத்தது'' எனக் கூறி மகிழ்ந்தான். 
அடுத்த நாள் தமாராவை அவன் மணமுடித்து மகிழ்ந்தான்.

(தங்களுக்குப் பிடித்த நாடோடி கதைகளை வாசகர்கள் எழுதி அனுப்பலாம்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com