அன்பும், பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் 

அன்பும், பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம் 

"வீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதேனும் ஒருவகையில் இந்த மாற்றங்கள்

"வீன வாழ்க்கை என்பது ஏராளமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதேனும் ஒருவகையில் இந்த மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெண்கள் நிறைய படிக்கிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்களோடு பழகுகிற, நட்பு பாராட்டுகிற, காதலிக்கிற வாய்ப்பு கிட்டுகிறது. ஆனால் நவீன வாழ்க்கை அளிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்கிற மனம், இதன் புறவிளைவான காதல் திருமணங்களை மட்டும் ஏற்க மறுக்கிறது. உற்று நோக்கினால் இதுதான் பக்குவப்பட்ட சமூகமா எனக் கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான பதில்தான் இந்தப் படம்''. கதையின் உள்ளார்ந்த அம்சங்களை முன்வைத்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் மு.களஞ்சியம். சிறு இடைவெளிக்குப் பின் "முந்திரிக்காடு' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
கதையின் உள்ளடக்கம் புரிகிறது. இன்னும் கொஞ்சம் பேசலாமே....?
நவீன வாழ்க்கையின் எல்லா வாய்ப்புகளையும் அனுபவித்துக்கொண்டு மனதளவில் மாறாமல் இருப்பவர்கள், சாதித் தூய்மையைக் காப்பாற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே நிலைப்பாடாக உள்ளது. தங்கள் சாதிவெறிக்காகத் தங்களின் சொந்தக் குழந்தைகளையே கொல்லத் தயங்காதவர்கள், தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையைவிட சாதிதான் முக்கியம் என்று தற்கொலை செய்துகொள்பவர்கள்... இவர்கள்தான் மனமுதிர்ச்சி அடைந்தவர்களா? இதற்குப் பெயர்தான் பக்குவமா? இதுதான் பண்பட்ட சமூகமா? என கேள்வி எழுந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் நடந்தேறி வருகின்றன. இதை தடுப்பதற்கு பதிலாக இதை முன் வைத்து அரசியல் செய்யப்படுவதுதான் இங்கே கேவலம். ஊடகங்களும் பொழுதுபோக்குகளும் மலிந்து விட்ட நாட்டில் தனிப்பட்ட மனிதனுக்கான அரசியல் ஈர்ப்புகள் மழுங்கி விட்டன. வசதி வாய்ப்புகள், அநீதிகளும் பெருகி வரும் சூழலில் எந்த அரசியலை தேர்ந்தெடுப்பது? எவர் பின்னே செல்வது? என்ன செய்வது? என்ற குழப்பமும் இந்த தலைமுறைக்கு சாபம் போல் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இது நேர்மையான குற்ற உணர்ச்சி என்று யாரிடமும் சொல்வதற்கில்லை. "நீ மட்டும் ஒழுங்கா...' என விரல் நீட்டும் மனிதர் பக்கத்திலேயேதான் இருக்கிறார். தனிமனித சுதந்திரம், காதலும்தான் இங்கே இப்போதைய அத்தியாவசியத் தேவை. அதைக் கடந்து போகிற சிலருக்கு இங்கே நடந்தது என்ன என்பதுதான் கதை. இந்தக் காலகட்டத்துக்கு மிக முக்கியமான படம் இது.
ஆணவப் படுகொலை பற்றிய படம் என்றால், நிறைய சமரசங்கள் செய்ய வேண்டி இருக்குமே...?
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறேன். இத்தனை நாள் நான் வாழ்ந்ததற்கு அடையாளம்தான் இந்தப் படம். இதை நான் கர்வமாக சொல்லவில்லை; பெருமையாக சொல்கிறேன். முந்திரி விவசாயிகளின் வாழ்க்கையின் ஊடாக அங்குள்ள காதல், மனிதர்கள் என பேசப்போகிற படம் இது. இமையம் எழுதிய "பெத்தவன்'
குறுநாவலின் பாதிப்புதான் இந்தப் படம். எதேச்சையாக படிக்க ஆரம்பித்து கண்கலங்கி போனேன். மனித மனங்களை ஆட்டிப் பார்க்கும் கதை. அதை படித்து விட்டு ஒருவன் கண்கலங்காமல் இருக்கவே முடியாது. நேரடியாக நம்மைத் தாக்குகிற களம். படித்து முடித்ததும், இந்தக் கதையை நாம் உறுதியாக சினிமாவாக மாற்ற வேண்டும் என எண்ணினேன். இது தொடர்பாக எழுத்தாளர் இமையத்திடம் பேசினேன். அவர் இதை மறுத்து விட்டார். "இன்றைக்கு சூழலில் இது படமாக வந்தால், கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகும் அதனால் இதை படமாக்க வேண்டாம்' என மறுத்தார். "ஏற்கெனவே இந்தக் கதையை பாண்டிச்சேரி பல்கலைகழகத்தின் சார்பாக கிராமங்களில் நாடகமாக அரங்கேற்றி வருகிறார்கள். அதுவே எனக்கு போதும்' என்றார். "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நானேதான். அதனால்தான் எந்த சிக்கலும் இல்லை' என விளக்கி, முழு உரிமையை அவரிடம் பெற்று, இதை சினிமாவாக எடுத்து வருகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்னை நான் ஒரு தமிழனாக உணர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன். அதனால் எந்த சமரசமும் செய்யவில்லை.
அப்போ அரசியல் அதிகம் இருக்குமா...?
இதில் தவறுகள், நியாயங்கள் என்று கருத்துச் சொல்லவில்லை. நடப்புகளை, நிகழ்வுகளை, சம்பவங்களை உண்மையை அப்படியே அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன். விவசாயம், கிராமம், தமிழர்களின் முகம், காதல், அனுபவங்கள்தான் படம். அன்பும், பரிவும்தான் மானுடத்தின் நிரந்தரம். அதுவும் தமிழர்களின் வாழ்வுக்கு இது அப்படியே பொருந்தும். ஆனால், இப்போது நம் நிலை மாறி வந்திருக்கிறது. சாதியம் பேசும் பல படங்கள் வந்திருந்தாலும், அது நெகட்டிவான கருத்தைத்தான் பதிவு செய்திருக்கும். "பாரதி கண்ணம்மா', "காதல்' மாதிரியான படங்கள் இதற்கு உதாரணம். ஆனால், இது வேறு மாதிரி இருக்கும். காதல்தான் இங்கே எல்லாவற்றுக்கும் ஆதாரம். அழகான இந்த மனித பிறப்பு ஒருமுறைதான். அதை அழகாக பூ பூக்கிற மாதிரி வாழ வேண்டும் என நினைக்கிற இரண்டு பேர். ஏமாற்றி பிழைக்காதவர்கள், சுயநலமாக சிந்திக்காதவர்கள், பொய் முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், ஆதாயத்தை தேடாதவர்கள், இந்த உலகம் எந்த மாதிரியான வாழ்க்கையை கொடுத்ததோ, அந்த வாழ்க்கையை ஆசைப்படுகிற ஒரு காதல் ஜோடி. அவர்களின் பயணத்தில் வருகிற காதல் அவர்களை உன்னதமாக்குகிறது.
இப்படி வலிகளும் வேதனைகளும் மட்டுமே இருக்கிற உண்மையானப் பதிவைக் கொடுத்திருக்கிறேன்.
கதையில் சீமானுக்கு எப்படியான இடம்...?
சீமானை தவிர பெரும்பாலோனார் புதுமுகங்கள்தான். நடிகர்களாக இருக்கிறவர்கள் இந்த கதைக்கு தேவைப்படவில்லை. அதனால் சக மனிதர்களை நடிகர்களாக தேர்வு நடத்தி இருக்கிறேன். இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சி. மகேந்திரனின் மகன் புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். சுப பிரியா கதாநாயகி. தமிழ்ப் பொண்ணு. முக்கிய கதாபாத்திரம் அண்ணன் சீமானுக்கு. ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் இவர்கள் எல்லாம் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். என் படத்தில் பாடல்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான் இருக்கும்.
- ஜி.அசோக்

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com