பிடித்த பத்து: ஞானத்தை தேடி அலைந்தவர்!

கராத்தே கலையில் பெயர் பெற்றவர். வில் வித்தையிலும் சிறந்தவர். உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர்.
பிடித்த பத்து: ஞானத்தை தேடி அலைந்தவர்!


கராத்தே கலையில் பெயர் பெற்றவர். வில் வித்தையிலும் சிறந்தவர். உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். திரைப்பட  நடிகர்.  தமிழ் நாடு  "வில்' வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருப்பவர்.  தனக்கு "பிடித்த பத்து' குறித்து  இங்கே சொல்கிறார் ஷிகான் ஹுசைனி.

பெரியம்மா:  எனது பெரியம்மா பேரு ரசியா பேகம்.  நாங்கள் எல்லாம் அவரை அன்போடு "அம்மி'  என்றுதான் அழைப்போம்.  எனது சிறு வயதிலேயே  தந்தை இறந்துவிட்டார்.  என் அம்மா வேறு ஒருவரை மணந்து கொண்டு போய்விட்டார். அப்பொழுது என்னுடன் பிறந்த  நான்கு பேர்களையும் வளர்த்து  ஆளாக்கியவர் என் பெரியம்மா தான்.  அவரிடம் உள்ள ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால் தனது கையால் எங்களுக்கு சாப்பாடு ஊட்டாமல் அவர் சாப்பிட  மாட்டார். அதே போல்  எந்தவிதமான பிரதி பலனும்  எதிர்பார்க்காமல்  உதவி செய்யணும் என்று கூறுவார். இந்த இரண்டையும் நான் இன்றும் கடை பிடிக்கிறேன்.  

தந்தையார்: என்னுடைய  தந்தையார் டாக்டர் எஸ்.ஏ.க்யூ.ஹுசைனி, ஒரு வரலாற்று பேராசிரியர்.  கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்துள்ளார்.  27 புத்தகங்கள் எழுதி உள்ளார்.  தற்காப்பு கலையை கற்று தேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் வில் வித்தையிலும் சிறந்தவர்.  அவரிடம்தான் நான் இந்த வில் வித்தையையும் கற்றுக் கொண்டேன். சிறந்த பேச்சாளர்.  ஒரு கல்லுக்கு ஒருபக்கம் மட்டும் இருந்தால் அது படிக்கல்லாகிவிடும்.  அதுவே பல பக்கங்கள் இருந்தால் அதற்கு பெயர்தான் வைரம்.  அது போல ஒரு துறையில் நீ வல்லுநராக இருக்கக் கூடாது.  பலதுறைகளில் புகழ் பெற்று வாழவேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்ததனால்தான் நான் இன்று சுமார் 21 துறைகளில் வல்லவனாக இருக்கிறேன். எனது ஏழாவது வயதில்  அவர் இறந்து போய்விட்டார்.  ஆனால் என்றும் அவர்தான் என்னுடைய ஹீரோ  வழிகாட்டி "அபஜான்'.  இப்படிதான் எனது தந்தையாரை நான் கூப்பிடுவேன். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா: சுமார் 30 ஆண்டுகளுக்கு, (1985 ஆம் ஆண்டு முதல்) மேல் என்னுடைய தலைவியாகவும், மனித தெய்வமாகவும் இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.  உலக போட்டிகளில் வென்று நான் திருப்பி வந்த போது  அவரைச் சந்திக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தெருவில் படுத்துக்கொண்டு சுமார் 101 கார்களை என் கைமீது ஏற்றி, பின்னர் உடைந்த கையினால் 5000 ஓடுகளையும், 1000 செங்கற்களையும் அடித்து உடைத்தேன்.  உடைந்த கையில் வழியும் ரத்தத்தால் அவரின் படத்தை வரைந்து, Dear madam, give me a hand, give me some land என்று எழுதினேன். அன்று மாலையே அவரை பார்க்க நான் அழைக்கப்பட்டேன்.  3 லட்ச ரூபாயும், 18 கிரவுண்ட்  நிலமும் பெசன்ட்  நகரில் கொடுத்தார்.  அதற்கு முன்பே இருந்தாலும் அவர் மீது அன்றிலிருந்து ஒரு வெறித்தனமான பற்றும் பாசமும் எனக்கு ஏற்பட்டது.  அவரது 56 -வது பிறந்த நாளில் அவரது 56 ஓவியங்களை ரத்தத்தால் வரைந்து வைத்தேன்.  சுமார் 8 ஆண்டுகள் 3 மாதத்திற்கு ஒருமுறை என் உடம்பிலிருந்து 350 மில்லி ரத்தத்தை எடுத்து குளிரூட்டியில்  வைத்து உருகாமல் செய்து,  அவரது முழு உருவ சிலையை செய்தேன். "ரத்தத்தால் எதுவும் செய்யக் கூடாது' என்று அன்புடன் கூறினார். 

எல்.டி.டி. ஈ தலைவர் பிரபாகரன்:  வீரத்தில் சிறந்தவர் என்பது என் எண்ணம். அவருக்காக ஒரு சிலை வைக்க வேண்டும் என்பது என் ஆசை. 

முகநூல் தலைவர் மார்க் ஷகெர்பெர்க்:  உலகத்தில் மிகப்பெரிய முகநூல் (Face Book) பதிவை ஏற்படுத்தியவர். சமூக வலைதளத்தில் சுமார் 250 கோடி மக்களை இது இணைத்துள்ளது.  ஒரு இளைஞர் தொலைநோக்கு பார்வையுடன் எப்படி இவ்வளவு சிறந்த சேவையை செய்துள்ளார் என்று நினைத்துப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.  என்னுடைய டேட்டா பாங்கில் கூட, என் புகைப்படங்களை நான் போடவில்லை. ஆனால் எனது ஃபேஸ் புக் விலாசத்தில் சுமார் 2 லட்சம் புகைப்படங்கள் உள்ளது. எந்தவிதமான செலவும் இல்லாமல் இந்த சேவையை செய்து வருகிறது முகநூல். எனக்கு டைரி  எழுதும் பழக்கம் உண்டு. வீட்டில் அதை செய்தால் யார் பார்க்கப் போகிறார்கள் என்று நமக்கே தெரியாது. அதையே நமது முக நூலில் எழுதினால் ஆயிரக்கணக்கான மக்கள் பார்ப்பார்கள். இதுக்கெல்லாம் காரணமான அந்த இளைஞரை  யாருக்குதான் பிடிக்காமல்  இருக்கும்?

கெளதம புத்தர்: எல்லாரும் நினைப்பது போல் புத்தர் ஒருவர் அல்ல.  இவருக்கு முன் 27 புத்தர்கள் பிறந்திருக்கிறார்கள். நான் எனது தகப்பனாரின் 51-ஆவது வயதில் பிறந்தேன்.  அதனாலேயே அவருக்கு செல்லம். என்னை பார்க்கும் போதெல்லாம் நீதான் அடுத்த பிறவியில் புத்தனாக பிறக்க போகிறாய் என்று சொல்வார். என் வீட்டில் அதிகமாக புத்தர் சிலைகளை சேகரித்து வைத்துள்ளேன். அதே போன்று  நிறைய புத்தர் ஓவியங்களையும் வரைந்துளேன். எனக்கு ஏன் புத்தரை பிடிக்கும் என்றால் அவர் ஞானத்தை தேடி அலைந்தார். நானும் பல சமயம் அதே ஞானத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். 

சால்வடோர் டாலி: இவர் ஓர் ஓவியர். குறிப்பாக surrealist முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றார். நாம் பார்க்கும் பல்வேறு விஷயங்களை வேறுவிதமாக பார்ப்பவர். மற்றவர்களையும் பார்க்கத் தூண்டுபவர். உதாரணமாக மரத்தை ஒரு மனிதனின் முகமாக பார்க்கலாம். ஒரு நாயை கடிகாரமாகப்  பார்க்கலாம்.   மழை பேயாத போது மழை கோட்டு அணிந்து மேடை மேல் நிற்பார். தனது மீசையில் உள்ள முடிகளில் ஒவ்வொன்றிலும் பூ வைத்துக் கொண்டு போவார். நமது எம்.எப். ஹுசைன் கூட  டாலியின் சில சேட்டைகளை தன்னகத்தே கொண்டிருந்தவர்தான்.   ஒரு முறை எனது மாணவி என்னிடம், "" உங்கள் பெயரில் டாலி பெயரும் இருக்கிறது''  என்றார். நான் ஆச்சரியமாக எப்படி என்றேன்.  ""உங்கள் முழுப் பெயர் sye (d ali) hussain இல்லையா,  இதில் டாலி இருக்கிறார் இல்லையா?'' என்றார்.  நான் ஆச்சர்யப்பட்டேன்.

வில் வித்தை ஆசான்: இவர் பெயர் Pascal Colmaire. இவர் ஃபிரெஞ்சு நாட்டவர். சென்னையில் நாங்கள்  வில் வித்தை சங்கம்  ஆரம்பித்து இந்திய வில் வித்தை சங்கத்துடன் இணைத்து செயல்பட்டு வரும் நிலையில், யார் உலகில் சிறந்த வில்வித்தை விற்பன்னர் என்று தேடியபோது இவரைதான் பலரும் சொன்னார்கள்.  அவரிடம் நான் 7 முறை பயிற்சி பெற்றுள்ளேன்.  

"ப்ளு பேர்ட்' ராஜசேகர்: இவரை பார்த்துதான் கிட்டார் கத்துக்க ஆசைப்பட்டேன். இன்றும் இவர் பெயரை மதுரையில் சொன்னால் பலருக்கும் தெரியும். இவர் கிட்டார் வாசிக்கும் அழகும்,  அத்துடன் குதித்து நடனம் ஆடுவதும் என்னை போல் பலரையும் வசீகரித்து விட்டது.  என்னிடம் சுமார் 24 கிட்டார் உள்ளன.  எல்லாம் இவரது இசை தாக்கம் தான். இவரைப்போல் இவ்வளவு அழகாக நடனத்துடன் பாடுவதை வெளிநாட்டு கலைஞர்களிடமும் பார்த்திருக்க முடியாது.  அவரின் வயது 70.

மேடைப் பேச்சு: ஒரு காலத்தில் மேடையில் பேசுவது என்றால் எனக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கும், மைக் முன் வார்த்தைகளே வராது. இன்று நான் மேடையில் தங்கு தடை இல்லாமல் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணமானவர் கே.சி. ரகுநாதன் என்ற மேடை பேச்சு பயிற்சியாளர்.  ஒரு முறை மதுரையில் இவர் நடத்திய மேடையில் பேசுவது எப்படி என்ற ஜ்ர்ழ்ந்ள்ட்ர்ல் இல் கலந்து கொண்டேன்.  அன்று முதல் மேடை பேச்சு பயம் போனது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com