மலை உச்சியில்... ஏழு வயதுசிறுவன்!

"மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிது'  என்று சொல்வது  ஏழு வயதான   சாமன்யு  போது ராஜுவுக்குப்  பொருந்தும்.  சாமன்யுவுக்கு பனி படர்ந்த மலை  ரொம்பவும் பிடிக்கும்.  
மலை உச்சியில்... ஏழு வயதுசிறுவன்!


"மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரிது' என்று சொல்வது ஏழு வயதான சாமன்யு போது ராஜுவுக்குப்  பொருந்தும். சாமன்யுவுக்கு பனி படர்ந்த மலை ரொம்பவும் பிடிக்கும்.  வெண்ணிற   பனியை உருண்டையாகப்   பிடித்து  வீசி விளையாடவும் விருப்பம். அந்த விருப்பம்  போதுராஜுவை மலை ஏற வைத்தது. பல ஆயிரம் அடி உயரம் ஏறச் செய்தது. கடைசியில் மலை ஏறுவதில் சாதனையையும் படைக்கச் செய்துள்ளது.  ஆம்..! ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏழே வயது போதுராஜு ஆப்பிரிக்கா கண்டத்தின் உயரமான மலைச் சிகரம் கிளிமாஞ்சரோவின்  உச்சியை சமீபத்தில் தொட்டு வந்திருக்கிறான்.  இதுகுறித்து போதுராஜு பகிர்ந்து கொண்டவை:

""கிளிமாஞ்சரோவில் கால் பதிக்க,  தான்சானியா   சென்றடைந்தபோது அங்கே கோடை காலம். என்றாலும் மழையும், பனிப்படர்வும்  இருந்தது. "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கிளிமாஞ்சரோவின்  உச்சியைத் தொடும் முதல் நாள் இரவு.  மழை காரணமாக தலைவலி. தலையே வெடித்துவிடும் போல அப்படி ஒரு வலி.  அதனால் விரைவில்  படுத்தேன். தூங்கியும்  போனேன்.  

அதிகாலை  மூன்று மணி.  எனது பயிற்சியாளர்  எழுப்பினார் . "போதி.. எழுந்திரு.. இப்போது கிளம்பினால்தான் எளிதாக மலை உச்சியை அடையலாம்'  என்றார் . 

" சார்...  தலை வலிக்கிறது. குளிர் வேறு  தூக்கிப் போடுகிறது.. கொஞ்சம் தூங்குகிறேனே'  என்று  கேட்டுக் கொண்டேன்.    "நீ   கிளிமாஞ்சரோ  உச்சிக்குச் சென்றுவிட்டால்.. உன்னை சந்திக்க பாராட்ட  யார் வருவார் தெரியுமா.. சாட்சாத்   சூப்பர் ஸ்டார்  பவன் கல்யாண்  வருவார்'  என்று பயிற்சியாளர் சொன்னதும்... அதை உண்மை என்று நம்பி துள்ளி எழுந்தேன், மலை ஏற ஆயத்தமானேன்.  எட்டு மணி நேரம்  மலை ஏறி  தான்சானியாவிலிருக்கும் கிளிமாஞ்சரோவின்  உச்சியான "உஹுரு'வில்    நண்பகலில் கால் பதித்தேன். மிகக் குறைந்த வயதில்  கடல் மட்டத்திலிருந்து  5895 மீ  உயரத்தில்    "உஹுரு' உச்சத்தைத்  தொட்டவன்  என்ற  பெருமை  எனக்கு   கிடைத்துள்ளது.  

என்னதான் குளிரைத்தாங்கும் உடைகள் அணிந்திருந்தாலும், குளிரின் தாக்கத்தால்  கால்கள்   வலியில் துவண்டன. இருந்தாலும்  சாதனை ஒன்றைப் படைக்கப் போகிறேன் என்று பயிற்சியாளர் ஊக்கம் தந்ததால் அந்த சந்தோஷத்தில் மலை உச்சியில்  ஏறி  விரைப்பாக  நின்றேன்.   

சென்ற   ஆண்டு  நேபாளம் வழியாக  எவரெஸ்ட்  சிகரத்தின்  அடிவார  முகாம் வரை  ஏறி  வந்தேன். என்னை  கிளிமாஞ்சரோ  உச்சியில்  ஏற வேண்டும்    என்ற உந்துதல் தந்தது எவரெஸ்ட் சிகரம்தான். எவரெஸ்ட்டின் அடி முகாமை அடைந்த போது அம்மாவும் உடன் வந்திருந்தார்.  ஆனால்  முகாமிற்கு வெளியே பனிப் போர்வை இல்லை.  ஐஸ்ûஸ கைகளால் அள்ளி விளையாட வேண்டும்  என்ற  ஆசை நிறைவேறவில்லை. எனக்குப்   பெரிய   ஏமாற்றம் . 

"என்னம்மா.. இங்கே  ஐஸ் இல்லையே'  என்று  ஏக்கத்துடன் கேட்டேன். "ஐஸ் வேணும்னா நீ கிளிமாஞ்சரோ ஏறணும்' என்று அம்மா சொன்னார். அப்படித்தான்  என் மனதில் கிளிமாஞ்சரோ வந்து  கூடு கட்டி அமர்ந்தது.   

எனது அம்மா  லாவண்யா, கிளிமாஞ்சரோ  மலைப் பாதையில் இருக்கும் இரண்டாவது  முகாம் வரை துணைக்கு  வந்தார். அதற்குப் பிறகு   அவரால் ஏற முடியவில்லை.   மலை ஏறுவதில்  சிறு வயதில் வேறு யாரும் நிகழ்த்தாத சாதனைகளை  நான்  சாதிக்க வேண்டும்  என்பது  அம்மாவின்  கனவாக இருந்தது.

கிளிமாஞ்சரோ உச்சி  நோக்கி பயணிக்கும் முன்பு  நான்  மலை ஏறும் பயிற்சியை முறையாகப் பெற்றேன்.  நான் எந்த அளவுக்குப் பயிற்சி பெற்றுள்ளேன் என்பதற்கு அளவு கோலாக  எவரெஸ்ட்    அடிவார முகாம் வரை சென்று  வந்து  பெற்றோரையும்   பயிற்சியாளரையும்   திருப்திப்படச் செய்தேன்.

அம்மா மலை ஏறும் காணொளிகளை எனக்கு காண்பித்து ஊக்கம் கொடுத்தார்.  சூரிய ஒளி, பனி மழை, காற்று.  இவற்றுக்கிடையில் எப்படி மலை ஏறுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதனால் "என்னாலும் முடியும்' என்ற தைரியமும் நம்பிக்கையும் வந்தது. வெள்ளை வெளேரென்று  இருக்கும் ஐஸ்  பரப்பைக் காண வேண்டும்  என்ற  ஆசையுடன், ஆப்பிரிக்காவின்  நீல நிற குரங்குகளைக் காண வேண்டும்  என்ற  ஆசையும் கிளிமாஞ்சரோ மலை ஏறலில்   நிறைவேறியது.  

"என்னைப் போல  சிறுவன்  மலை ஏறும் போது   பயிற்சியாளர்கள்   மலையில் நிலவும் சூழ்நிலையைச்  சரியாகக் கணிக்க வேண்டும்.  மலை ஏறுபவர்களின்   பாதுகாப்பும் முக்கியம்.  மலை உச்சியில்  ஏறி  சாதனை படைக்கவும் வேண்டும். ஏறும்  கிளிமாஞ்சரோ மலையும்   எல்லா சிகரங்களையும் போல ஆபத்து, அபாயம், சவால்கள் நிறைந்தது. பயிற்சியாளர் எல்லா கோணங்களிலும்  எச்சரிக்கையாக  இருந்து பாதுகாப்பாக  மலை ஏற உதவினார். மலை ஏறுவதற்காகப் பயிற்சி பெற்ற போது இனிப்பு பதார்த்தங்கள், ஐஸ் கிரீம் போன்றவற்றை விலக்கிவிட்டார்கள். கிளிமாஞ்சரோவில்  ஏறி  சாதனை செய்து    கீழே  வந்தபிறகு  ஐஸ் கிரீம் கொடுத்தார்கள். வெற்றியின்  மகிழ்ச்சியில்,   ஐஸ் கிரீம்   ரொம்பவும் இனித்தது. சுவையாய் தெரிந்தது'' என்கிறார் போதுராஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com