சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 40: ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி பெருவிழா

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் அடங்கிய புத்தகத்தை பயபக்தியோடு கைகளில் ஏந்தி என் தந்தை படித்துக் கொண்டிருக்க, கோலம் இட்ட மனையின் மீது கொழுக் மொழுக் என்று கம்பீரமாக களிமண் பிள்ளையார் வீற்றிருக்க
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 40: ஹைதராபாத் விநாயகர் சதுர்த்தி பெருவிழா

"எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்...

ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் அடங்கிய புத்தகத்தை பயபக்தியோடு கைகளில் ஏந்தி என் தந்தை படித்துக் கொண்டிருக்க, கோலம் இட்ட மனையின் மீது கொழுக் மொழுக் என்று கம்பீரமாக களிமண் பிள்ளையார் வீற்றிருக்க, அவருக்கு ஒரு பக்கத்தில் நீலநிற வர்ணப் பிள்ளையாரும், மற்றொரு புறம் ரோஜாநிற வர்ணப் பிள்ளையாரும் அமர்ந்திருப்பார்கள். நானும் என் அண்ணனும் பல மலர்களின் கலவையை, இதை பத்ரம் என்று அழைப்பார்கள், எடுத்து பிள்ளையார்கள் மீது போட்டுக் கொண்டிருப்போம்.

குழந்தைகளாகிய எங்கள் மனம் எப்பொழுது எங்கள் தந்தையார் பூஜையை முடிப்பார், பிள்ளையார் முன்பு கடைவிரிக்கப் பட்டிருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், எள்ளுருண்டை, அப்பத்தை எப்பொழுது ஒரு வெட்டு வெட்டலாம் என்பதிலேயே ஈடுபட்டிருக்கும்.

என் இளமைப்பருவம் சென்னையில், திருவல்லிக்கேணியில் கழிந்தது. அங்கே இருந்த வீரராகவ முதலி தெரு என்றால் இன்று மட்டுமல்ல, அன்றைக்கும் யாருக்கும் தெரியாது. அதுவே (Big street) பெரிய தெரு என்றால் எட்டு வயது பையன்கூட வழிகாட்டுவான். டி.கே.எஸ். பிரதர்ஸ், எம்.எஸ். சுப்புலட்சுமியும் அவருடைய கணவர் டி. சதாசிவம் என்று பல பிரபலங்கள் இந்த பெரிய தெருவில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தத் தெருவில் ஒரு புகழ்மிக்க விநாயகர் கோயில் இருக்கிறது. இதனுடைய பெயர் அரசமரத்தடி கற்பக விநாயகர் என்பதாக இருந்தது. ஆனால் உள்ளூர்வாசிகள் இந்தக் கோயிலை பெரியதெரு பிள்ளையார் கோயில் என்றுதான் அழைப்பார்கள்.

மிகவும் சக்திவாய்ந்த பிள்ளையார் என்பதால், விசேஷ தினங்கள் என்று இல்லாமல் எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதும். விநாயகர் சதுர்த்தி என்றால் கேட்கவா வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து எங்கள் தந்தையுடன், சுத்தம் செய்யப்பட்ட  மனைப்பலகை மீது என் தாயார் அழகாக ஒரு சின்னக் கோலம் போட்டுக் கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு பெரிய தெருவுக்கு, பார்த்தசாரதி கோயில் வழியாகச் சென்று அரச மரத்தடி கற்பக விநாயகருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அந்தப் பகுதியில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் களிமண் பிள்ளையார்களை நோட்டம்விட்டு, இருப்பதிலேயே பெரியதாக, முகலட்சணம் உடையதாக தேர்ந்தெடுத்து வாங்குவோம், பிள்ளையாரின் பின்னால் சிறிது களிமண்ணை வைக்கச் சொல்லுவார் என் தந்தை. எதற்கு குடையைச் செருகத்தான். பிறகு வருடம்தோறும் இரண்டு வர்ணப் பிள்ளையார்களையும் வாங்குவார். அது குடும்ப வழக்கமாம். களிமண் பிள்ளையார் பண்டிகைக்குப் பிறகு கிணற்றில் தஞ்சம் அடைய, வர்ணப் பிள்ளையார்கள் மட்டும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்பொழுது, கொலுவில் வைத்ததுபோக மீதி நண்பர்கள் வீடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

பிள்ளையாருக்கு படைக்கப்படும் பழங்கள் என்று வரும்பொழுது, விளாம்பழமும், நாவல்பழம் மற்றும் பிரப்பம்பழம் பிரதான இடத்தைப் பிடிக்கும். அதிலும் விளாம்பழத்தை காதின் அருகே கொண்டு சென்று ஆட்டிப் பார்த்தபின்தான் என் தந்தை வாங்குவார். ஏன் அப்பா இப்படி செய்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு என் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் சொல்லுவார், "விளாம்பழம் நன்றாகப் பழுத்திருந்தால் ஓட்டோடு ஒட்டாது, அதனால் ஆட்டிப் பார்த்தால், உள்ளே பழம் உருளும் சத்தம் கேட்கும் என்று என் காதருகே ஆட்டிக் காட்டுவார்." பூஜை முடிந்த பிறகு அந்த விளாம்பழத்தை உடைத்து உள்ளே இருக்கும் சதைப்பகுதியை வெளியே எடுத்து அதோடு வெல்லத்தை வைத்து பிசைந்து உருண்டையாக்கித் தருவார்கள். அதன் சுவைக்கு இன்றளவும் நான் அடிமை.

இப்படி விநாயகருக்கான பலகாரங்கள் மட்டும் என் வயிற்றையும், மனதையும் கவரவில்லை, அவைகளோடு பிள்ளையார் மீது, பக்தியும், பாசமும், நேசமும், பெருகியது. தீபாவளிக்குப் பிறகு வரும் கெüரி விரத பூஜையின்போது என் பெரியம்மா ராணி அம்மையாரும், தாயார் ஜீவாட்சரியும் அவசரம் அவசரமாக மஞ்சள் பொடியில் முக்கோண வடிவில் பிள்ளையார் என்று சொல்லிப் பிடித்து, நடுவில் குங்குமப்பொட்டு இட்டு ஒரு வெற்றிலை மீது வைத்து, பூ வைத்து, கற்பூர தீபாரதனை காட்டி, தட்டும் அதிரசங்கள் உடையாமல் நல்லபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, சரியான பாகில், வட்டவடிவில், வெந்து மேலே எழும்பும் அதிரசத்தை, சல்லிக் கரண்டியில் ஏற்றி, அந்த முதல் அதிரசத்தை அந்த மஞ்சள் பிள்ளையாருக்கு வைப்பார்கள். 

இப்படி கெட்டி சாணத்தில், கூம்பு வடிவத்தில் உச்சியில் அருகம்புல்லோடு, மஞ்சளில், களிமண்ணில், கருங்கல்லில், காகிதக் குழம்பில், வெள்ளியில், தங்கத்தில், பிளாட்டினத்தில், பித்தளையில், ஈயத்தில்.. அப்பப்பா! எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் குளக்கரையில், அரசமரத்தடியில், கோயில்களின் நுழைவாசலில், தனிக்கோயில்களில், தனிமையில், சித்தி, புத்திகளின் துணையுடன், சிவன், பார்வதி, குகன் என்று தன் குடும்பத்துடன், சிறிதும், பெரிதுமாக என் சிறுவயது முதல் இன்றுவரை பார்த்து, கும்பிட்டுப் பழகிய எனக்கு, இந்த வருடம் பதினொரு நாட்கள் ஹைதராபாத்தில் கொண்டாடப்படும் விநாயகசதுர்த்தி பெருவிழாவின்பொழுது (Khairatabad) கைராடாபேட் என்ற இடத்தில் 57 அடி உயரத்தில், இடது கையில் 580 கிலோ எடை  உள்ள லட்டுவை ஏந்தி விஸ்வரூப தரிசனம் கொடுத்த கைராடாபேட் கணேஷைத் தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற விநாயக சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு நான் பெற்ற அனுபவங்களை சொல்வதற்கு முன், பிரேசில் நாட்டின் மிகப் புகழ்வாய்ந்த நகரமான ரியோ டி ஜெனிரோவில் பயணம் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது! இந்த நகரத்தில் இருந்து வட பிரேசிலில் இருக்கும் (Manaus) மேனஸ் நகரத்திற்குச் சென்று அங்கே இருந்து படகில் பயணித்து அமேசான் காட்டுப் பகுதியை அடைந்தோம்.  அங்கே நான்கு இரவுகள் தங்கி அமேசான் காடு கடைவிரித்திருந்த இயற்கை அழகை அள்ளி, அள்ளிப் பருகிவிட்டு மீண்டும் மேனஸ் வந்து அதன் விமானநிலையத்தில் காத்துக் கிடந்தோம். பதினொரு மணிக்கு எங்களை அர்ஜென்டைனாவுக்கு அழைத்துச் செல்லும் விமானம் சற்றுத் தாமதமாக வர இருந்தது.

என் கணவரும், மகனும் நடைபயின்று கொண்டிருக்க, நான் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். திடீர் என்று என்னை நோக்கி ஓர் இளைஞர் வயது சுமார் 35 இருக்கும். அவசரமாக வந்தார், ""நீங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா?'' என்றார். ""ஆமாம்''  என்றபடியே எழுந்து நின்றேன். யாரோ ஓர் அந்நியர் என்னிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு என் கணவரும், மகனும் என்னை நோக்கி வந்தனர். அப்பொழுதுதான் நான் அந்த இளைஞனின் டி-ஷர்ட்டைக் கவனித்தேன். அதில் சரி, ஆனால் அவர் முதுகில்? நாங்கள் திகைத்தோம்!

- தொடரும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com