பாண்டியன் கிங்கும்... மீனாட்சி மம்மியும்... பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"இந்தக் காலத்தில் நம் கையில் உள்ள செல்போனிலும் மின்னஞ்சலிலும் நம் கருத்தைத் தூது விடுகிறோம்.
பாண்டியன் கிங்கும்... மீனாட்சி மம்மியும்... பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 16

"இந்தக் காலத்தில் நம் கையில் உள்ள செல்போனிலும் மின்னஞ்சலிலும் நம் கருத்தைத் தூது விடுகிறோம். இதற்குப் பெயர் தெரியுமா?'' என்று நான் கேட்க,
"விரல்விடு தூது'' என்று ஒரு சத்தம் வந்தது. அப்படிச் சொன்னவர் யார்? என்று நாங்கள் திரும்பிப் பார்க்க, எங்களுக்காக உணவு வகைகளை அப்போதுதான் படகில் கொண்டுவந்து இறக்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியுடன் கூற, நான் அவரை அருகில் அழைத்துக் கை கொடுத்தேன்.

"அருமை... நம் விரல்களால் தட்டச்சு செய்து நாமே விடுகிற தூது  "விரல்விடு தூது'. நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?'' என்று நான் அவரைக் கேட்டேன்.
"சார் என் பெயர் தமிழ்மணி. அமெரிக்காவில் படித்துவிட்டுச் சொந்தமாக நம் நாட்டில் வந்து தொழில் செய்கிறேன்.  கேட்டரிங்  எனக்குப் பிடித்த ஒன்று.

நண்பர்களுக்காக பலவகை உணவுகளைத் தயார் செய்து கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் துறை சார்ந்த பகுதி வந்ததும் நானும் சேர்ந்து கொண்டேன். அந்தப் பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்'' என்று சொல்லி அவரும் மணல் மேல் அமர்ந்து கொண்டார்.

"பார்த்தீர்களா? அமெரிக்காவில் படித்துவிட்டுச் சொந்த நாட்டிற்கே பணியாற்ற வந்துள்ள இவர்  "தமிழ்மணி'  மட்டுமல்ல  "வாராதுபோல் வந்த மாமணி'  இவரைப்போன்று இன்னும் பலரும் நம் தாயகத்திற்கு வந்து பெருமை சேர்த்தால் விரைவில் நம் நாடு வல்லரசாகவும், நல்லரசாகவும் மாறிவிடும் என்பது உண்மைதான். கணினியில், சமையலில், தமிழில், தொண்டு செய்வதில் என்று அனைத்துக் கலைகளையும் விரும்பும் இவரைப் போன்ற இளைய சமுதாயத்தை வரவேற்போம், வாழ்த்துவோம்'' என்று நான் மனதாரப் பாராட்ட அனைவரும் படபடவெனக் கை தட்டினார்கள்.

நானும் பாடற்கருத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். "நாரைப் பறவையே நீயும் உன் மனைவியும் தெற்கே குமரியாற்றில் நீராடிவிட்டு, வடக்கே செல்லும்போது எங்கள் ஊராகிய  "சத்திமுத்தம்' என்ற ஊரின் வாவியில் (தடாகத்தில்) தங்குங்கள். அங்கே எங்கள் வீடு இருக்கிறது. எங்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது எளிது. விடாது பெய்யும் மழையினால் கூரை ஒழுக, அதனால் சுவர் நனைந்து ஈரமாயிருக்கும். அச்சுவரில் இருக்கும் பல்லி சொல்லும் பலனைக் கேட்பதற்காக என் மனைவி ஏக்கத்தோடு காத்திருப்பாள். அவளைப் பார்த்து நீ என்னைப் பற்றிக் கூற வேண்டும் என்று மதுரை வீதிகளில் இருந்த புலவர் நாரையிடம் சொன்னாராம்...'' என நான் சொல்லச் சொல்ல அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆர்வத்தோடு என்னைப் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

"என்ன கொடுமை சரவணன்'' என்று  "சென்னை 28'  வெங்கட்பிரபு போல வருத்தப்பட்ட தமிழ்மணி,  "வீட்டு முகவரியைச் சொல்லும்போது தெருப்பெயர், பின்கோடு என்று இன்றைக்குச் சொல்கிறோம். ஆச்சரியம். வறுமையை இப்படிச் சொல்ல நம் தமிழ்ப் புலவர்களால் மட்டுமே முடியும் சார்'' என்று தமிழ்மணி வருத்தத்தோடும் வியப்போடும் சொன்னார்.

"அவங்க வொய்ப் ஏன் பல்லியைப் பார்த்துட்டு இருக்கணும்?'' என்று பேத்தி கேட்க...
"அந்தக் காலத்தில் காலண்டர் இல்ல, கடிகாரம் இல்ல, ரேடியோ, டி.வி. இல்ல. அதனால பல்லி சொல்லும் பலனை வச்சுத்தான் மனசைத் தேத்திப்பா...'' என்று ஹெட்போன் பாட்டி விளக்கம் கொடுத்தார்.

"பல்லி சொன்னா நல்லது. நரி ஊளையிட்டாக் கெட்டது, கழுதையக் கண்ணால் பார்த்தால் நல்லது. இப்படியே நம்பள நம்ப வச்சுட்டாங்க'' என்று மீசைக்காரர் அவருக்கே உரிய கோபத்தோடு சொன்னார்.

"அப்படி இல்லீங்க, அறிவியல் வளராத காலத்திலே இயற்கையை, சுற்றுச்சூழலை, பறவைகளை, விலங்குகளை வைத்துத் தானே எதையும் புரிந்து கொள்ள முடியும்? பூகம்பம் வரப் போறதை முதலில் தெரிஞ்சுக்கிற உயிரினங்கள் எது தெரியுமா?'' என்று ஹெட்போன் பாட்டி கேட்க,
"காக்ரோச்'' (கரப்பான் பூச்சி) என்று பேத்தி சொல்ல "கரெக்ட்'' என்று ஆமோதித்த ஹெட்போன் பாட்டி, "நீங்க மேலே சொல்லுங்க'' என்று என்னைப் பார்த்து ஆணையிட்டார்.

"சரி கேளுங்கள். நனைந்த சுவரில் இருக்கும் பல்லியைப் பார்த்திருக்கும் என் மனைவியிடம் என்னை நீங்கள் பார்த்ததாகச் சொல்ல வேண்டும். பாண்டிய நாட்டில், மதுரைப்பட்டணத்தின் வீதிகளில் மேலாடை இல்லாமல், வாடைக்காற்றினால் நடுங்கி மெலிந்து, கைகளை மார்பின் பின் குறுக்கே கட்டிக்கொண்டு, கால்களைக் குறுக்கியபடி, பாம்புக் கூடையில் சுருண்டு கிடக்கும் பாம்பினைப்போல பெருமூச்சு விட்டபடி இருக்கின்ற என் நிலைமையை நேரில் கண்டதாக எடுத்துச் சொல்லுங்கள்.. நாரைப் பறவைகளே என்று அப்புலவன் பாடிய பாடல் இலக்கிய வரலாற்றில் ஓர் அரிய பாடல்''  எனச் சொல்லி முடித்தேன்.

"ஐயா அந்தப் பாடலையும் சொல்லுங்களேன். நாங்கள் கேட்பதோடு, உங்கள் குரலில் பதிவும் செய்து கொள்கிறோம்'' என்று ஹெட்போன் பாட்டி உரிமையோடு கேட்க, பேத்தி நான் சொல்லப் போகும் பாடலைப் பதிவு செய்யத் தயாரானது.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின்பேடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசை ஏகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே''
என்று நான் பாடலைச் சொல்லி முடித்தேன்.
அப்பாடலின் இனிமையையும், அப்பாடலின் கருத்தை முன்னரே கேட்டிருந்ததனால் ஏற்பட்ட மன நெகிழ்ச்சியையும் ஒருங்கே அனுபவித்த நம் நண்பர்கள் அனைவரும் தியானத்தில் இருப்பதைப்போல இருந்தார்கள்.

"இந்தப் பாட்டைப் பாடிய இப்புலவர் தான் பார்த்த, நாம் பார்த்த பொருள்களை வைத்தே பாடலைப் பாடியிருக்கிறார். பனங்கிழங்கு, நாரைப் பறவை, ஆறு, ஊர், நனைந்து இடிந்த வீடு, பல்லி, சுருண்டு கிடக்கும் பாம்பு, வாடைக்காற்றிலும், பசியிலும் மெலிந்து இருக்கும் ஏழைப் புலவனாகிய தன் நிலை எனப் படம்பிடித்துக் காட்டியுள்ளதைக் கவனித்தீர்களா? என்று நான் கேட்டேன்.

"எல்லாம் ஓ.கே. அந்தப் போயட் (POET)  "பாண்டிய கிங்கைப்'  பார்த்தாரா? இல்லையா?'' என்று அந்தப் பேத்தி கவலையோடு கேட்டது.

"பாண்டிய கிங்''  என்று அந்தப் பேத்தி சொன்னதைக் கேட்டு அத்தனைபேரும் புன்னகைத்தார்கள். நானும் மகிழ்ச்சியோடு "சில நாட்களுக்கு முன்பாக நான் மதுரை கோயிலுக்குச் சென்றபோது ஒரு சிறு குழந்தை தன்னைக் கூட்டிக் கொண்டு வந்த தன் தாயிடம் என்ன கேட்டது தெரியுமா?  மீனாட்சி... மம்மி  கோயிலுக்குத்தானே போறோம்'' என்று கேட்க, "ஆமா, பேசாம வாயவச்சுக்கிட்டு வா'' என்று அந்தம்மா அதட்ட, "மீனாட்சி மம்மி'' என்று நம் ஆலவாய் அரசியை, அங்கயற்கண்ணியை, மீனாட்சி அம்மையை அந்தக் குழந்தை குறிப்பிட்டது ஆச்சரியமாக இருந்தது. அதைப்போலதான் பாண்டியகிங்கும்'' என்று நான் சொன்னேன்.

"நீங்கள் கேட்டது சரிதான். அன்றிரவு நகர்ச் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன் நம் புலவரின் பாடலைக் கேட்டும், அவரின் நிலையை அறிந்தும், அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்தானாம்'' என்று நான் முடித்தபோது, பேத்தியின் முகத்தில் ஆறுதலும், புன்னகையும் ஏற்பட்டது.

"தாங்க்ஸ்'' என்று அந்தப் பேத்தி பாண்டிய மன்னனுக்கு நன்றி சொல்ல, "அது சரி... அந்தப் புலவனின் ஊர் "சத்திமுத்தம்'  எங்கிருக்கிறது? என்று தமிழ்மணி கேட்டார்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com