கணக்கில் ஆர்வமா? படியுங்கள்...  புள்ளியியல்   படிப்புகளை!

கணிதமும்-புள்ளியியலும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் நகமும்-சதையுமாக பயன்பட்டு வருகின்றன.
கணக்கில் ஆர்வமா? படியுங்கள்...  புள்ளியியல்   படிப்புகளை!

கணிதமும்-புள்ளியியலும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் நகமும்-சதையுமாக பயன்பட்டு வருகின்றன. படித்தவர்கள் மட்டுமன்றி, பாமரரும் லட்சம், கோடி எண்ணிக்கை கொண்ட கணிதத்தை ஒற்றை படத்தில் புள்ளியல் மூலம் அறியச் செய்யலாம். உணவு, உற்பத்தி, விவசாயம், தொழில்துறை, மின்உற்பத்தி, போக்குவரத்து, தகவல்தொடர்பு, மருத்துவம், வானவியல், புவியியல், வனத்துறை என புள்ளியியல் தொடர்பில்லாத துறைகளே இல்லை எனலாம்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வதேச சந்தை மதிப்பீடு, புதிய திட்டங்களின் தேவைகள் மற்றும் நிறைவடைந்துள்ள புதிய திட்டங்களின் இப்போதைய நிலை குறித்து எளிதாக கணக்கில் கொள்ள புள்ளியியல் உதவுகிறது. 

புள்ளியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஐஏஎஸ் பணிக்கு நிகராக ஐஎஸ்எஸ் குடிமைப்பணியில் புள்ளியியல் பட்டதாரிகளே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். புள்ளியியல் அலுவலர், புள்ளியியல் ஆய்வாளர், புள்ளியியல் துணை இயக்குநர் ஆகிய மத்திய அரசு பணிகள் உள்ளன. தமிழகத்தில் புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை தனியாகச் செயல்பட்டு வருகிறது. மாவட்ட புள்ளியியல் அலுவலர், புள்ளியியல் துணை இயக்குநர், புள்ளியியல் ஆய்வாளர், துணை புள்ளியியல் ஆய்வாளர், தொகுதி சுகாதார புள்ளியியலாளர் ஆகிய பணிகள் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. 

புள்ளியியல் கல்வி குறித்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை பேராசிரியர் கே.செந்தாமரைக்கண்ணன் கூறிய தாவது:
 "இளநிலை புள்ளியியல் (பிஎஸ்சி புள்ளியியல்), முதுநிலை புள்ளியியல் (எம்எஸ்சி புள்ளியியல்), முனைவர் பட்டப்படிப்புகள் உள்ளன. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகங்களில் புள்ளியியல் படிப்புகள்  உள்ளன. 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புள்ளியியல் படிப்பில், இளநிலை கணிதம் (பிஎஸ்சி கணிதம்), இளநிலை கணினி அறிவியல் (பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்தவர்கள் சேரலாம். முனைவர் பாடப்பிரிவுகளும் உள்ளன. 

இப் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறைக்கு பிரத்யேக கணினி ஆய்வகம் உள்ளது. இணையதள வசதியுடன் மாணவர்கள் எந்த நேரமும் பயன்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

2015 ஆம் ஆண்டு முதல் பாடத்திட்டத்தை சர்வதேச தரத்துக்கு மாற்றும் வகையில் இத்தாலி, பனாரஸ் பகுதிகளில் உள்ள கல்வியாளர்களை வரவழைத்து ஆலோசனைகள் நடத்தி பாடத்திட்டத்தின் தரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு உள்ளிட்டவற்றின் ஊக்கத்தொகையுடன் ஏராளமான ஆய்வு மாணவர்களை உருவாக்கி வருகிறது. 

புள்ளியியல் துறைக்கென பிரமாண்ட நூலகம் உள்ளது. இந்திய புள்ளியியலின் தந்தை மெகாலாநோபிஸ் புத்தகங்கள் முதல் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளியியல் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளன. 

புள்ளியியல் கல்வி குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. வேலைவாய்ப்பு மிகுந்த உயர்கல்வியாக புள்ளியியல் உள்ளது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற விண்ணப்பிக்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஒரு முதுநிலை புள்ளியியல் பட்டதாரிகளைப் பணியில் சேர்த்திருக்க வேண்டியது அவசியம். சர்வதேச கப்பல்களில் புள்ளியியல் துறை அலுவலர் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர, அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.  

கணித ஆர்வம் உள்ள அனைவரும் புள்ளியியலை எளிதாகக் கற்க முடியும். மென்பொருள் வளர்ச்சி, கணினி பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் புள்ளியியலில் சிக்கலான விஷயங்களுக்கும் நுட்பமான முறையில் தீர்வுகாணும் வழிகள் வந்துவிட்டன. வேலைவாய்ப்புத் தரும் புள்ளியியல் கல்வியைப் பயின்று மாணவர்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளலாம்'' என்றார் அவர்.
- கோ.முத்துக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com