வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 98

புரொபஸரின் வீட்டில் அவர், அவரது மனைவி மீனாட்சி, Captain Flint, கணேஷ் ஆகியோர் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம்! 98

புரொபஸரின் வீட்டில் அவர், அவரது மனைவி மீனாட்சி, Captain Flint, கணேஷ் ஆகியோர் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
கணேஷ்: சார் மேடம் உங்களை bookworm எனத் திட்டினார்கள். அப்படீன்னா என்ன?
புரொபஸர்: சதா புத்தகமே கதியென கிடப்பவர்கள், உலக விசயங்களில் அக்கறை காட்டாதவர்களை பரிகசிப்பதற்கான பதம் அது. 
கணேஷ்: புழுவுக்கும் புத்தகத்துக்கும் என்ன சம்பந்தம்?
புரொபஸர்: பழைய தூசு படிந்த நூல்களை பூச்சி அரிக்கும் பார்த்திருக்கிறாய் அல்லவா? இந்த பூச்சிகள் இடும் முட்டைகளில் இருந்து விரியும் புழுக்களை குறிப்பது தான் bookworm. எப்படி இந்த புழு புத்தகத்தை தின்று வளருமோ, அதுபோல நாமும் அப்படி வாசிப்பில் ஊறிக் கிடக்கிறோம். 
கணேஷ்: சார் இன்னொரு சந்தேகம். Body shaming என்றால் என்ன?
புரொபஸர்: ஒருவருடைய உடம்பைக் குறி வைத்து பரிகாசம் செய்து அவர்களை மட்டம் தட்டுவது.
Captain Flint: நான் ஒரு கேள்வி கேட்கலாமா?
மீனாட்சி: Go ahead!
 Captain Flint: ஏன் புரொபஸர் மேல உங்களுக்கு அவ்வளவு கோபம்?  வந்த உடனே கவனிச்சேன்.
புரொபஸர்: இப்போல்லாம் இப்படித் தான் எங்க பிரியத்தை காமிச்சுக்குறோம்.
Captain Flint: எனக்கு இன்னொரு விளக்கம் தோணுது.
மீனாட்சி: என்ன டியர்?
Captain Flint: He is trying to interpellate you. நீங்க அதை மறுக்கிறீங்க.
மீனாட்சி: எனக்கு சுத்தமாப் புரியல.
Captain Flint: இது ஒரு தத்துவ பதம். அல்தூசர் எனும் கோட்பாட்டாளர் இச்சொல்லை உருவாக்கினார். உங்களை புரொபஸர் couch potato என்ற போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைத் தர விரும்பினார். நீங்கள் அதை மறுத்தீர்கள். You didn't like to be straitjacketed so. அது தான் உங்களிடையே உள்ள பிரச்னை.
புரொபஸர்: இது எங்களிடையே உள்ள ஒரு ரொமாண்டிக்கான ஊடல். இதைப் போய் இவ்வளவு தத்துவார்த்தமாய் விளக்க முயன்று குழப்ப வேண்டியதில்லை Flint.
மீனாட்சி: It is interesting. Go on!
Captain Flint: நீங்கள் அவருக்கு இன்னொரு அடையாளத்தைக் கொடுத்து எதிர்ப்பைத் தெரிவித்தீர்கள். Bookworm. இருவரும் ஒருவரை ஒருவர் தமது subject ஆக மாற்ற முயன்றீர்கள். மறைமுகமாய் மோதிக் கொண்டீர்கள்.
மீனாட்சி: சுவாரஸ்யம். ஆனால் அதென்ன subject? அது மட்டும் புரியவில்லை.
Captain Flint: புரொபஸர் வீட்டுக்கு வந்ததும்   மீனு என அழைத்து எங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. You did not respond. அப்போது அந்த சில நிமிடங்கள் அவரது வீட்டுக்காரியாக இருக்க மறுத்தீர்கள்.
மீனாட்சி: Exactly.
Captain Flint: இப்படி ஒருவர் அழைப்பதை அல்தூசர் hailing என்றார். அல்தூசர் இதற்கு ஓர் அழகான உதாரணம் தருகிறார். நீங்கள் பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் போகிறீர்கள். ஒரு போக்குவரத்துக் காவலர் உங்களை தடுத்து நிறுத்துகிறார். "நிறுத்து நிறுத்து'' என்கிறார். அவரது சைகைக்கும் "நிறுத்து'' எனும் கட்டளைக்கும் நீங்கள் செவிமடுத்தீர்கள் என்றால், அந்த நொடி அவர் காவலராகவும் நீங்கள் போக்குவரத்து விதிகளுக்கு உடன்படும் ஒரு வாகன ஓட்டியாகவும் மாறுகிறீர்கள்.
கணேஷ்: இல்லை என்றால்?
Captain Flint: அவர் காவலர் அல்லாமல் ஆகிறார். நீங்கள் விதிகளுக்கு அப்பாற்பட்டவர் ஆகிறீர்கள். எல்லாமே ஒரு விளிக்கு செவிமடுப்பதில் தான் உள்ளது.  
புரொபஸர்: ஓ... என்னை வீட்டுக்காரனாய் ஸ்தாபிப்பது அவ்வளவு எளிதா? அல்தூசரின் hailing ஐ தாம்பத்ய வாழ்க்கையில் பிரயோகிக்கப் போகிறேன்.
 மீனாட்சி: ஆங்?
புரொபஸர்: மீனு!
மீனாட்சி: என்னப்பா?
புரொபஸர்: ஒரே சொல் மூலம் நீ என் மனைவி ஆகி விட்டாயே? 
மீனாட்சி: Nuts! இனி கூப்பிடேன். திரும்ப மாட்டேனே.
கணேஷ்: சார் nuts என்றால் பைத்தியம் என்று தானே...
புரொபஸர்: இல்ல இல்ல. மீனாட்சி பயன்படுத்தினது ஒரு interjection. An exclamation. ஒரு வியப்பொலி. Oh! huh! போல. இது உணவு சம்மந்தப்பட்ட ஒரு வியப்பொலி. A food interjection. 
கணேஷ்:  Nuts என்றால் தான் என்ன?
புரொபஸர்: வியப்பொலிக்கு என்று ஒரு அர்த்தம் தனியாக இல்லை. "ஐயோ'' என்றால் என்ன அர்த்தம்? அது போலத் தான். ஆனால் இந்த nutsக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது தான் இந்த வியப்பொலி பயன்பாட்டுக்கு வந்தது.
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com