கண்டதும் கேட்டதும் 10 - பி.லெனின்

அப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "டேய் எனக்கும் கொஞ்சம் கொடுடா'' என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
கண்டதும் கேட்டதும் 10 - பி.லெனின்

அப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "டேய் எனக்கும் கொஞ்சம் கொடுடா'' என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். "மண்டை' என்னருகில் நின்றான். பன்றிக்குட்டிகள் பாலை உறிஞ்சிக் குடிப்பதுபோல் மாறி மாறி உறிஞ்சினோம்.

சிறு குறிப்பு: குரல் கேட்டுத் திரும்பினேன் என்பது தற்போது எடிட்டிங்கின் பரிபாஷையில் VOICE OVER  எனக் குறிப்பிடப்படுகிறது. என் குரல் என் மீதும், மற்றவர் குரல் என் மீதும் கேட்பது V.O. எனும் VOICE OVER . எடிட்டிங் எனக்கு யாரும் கற்றுத் தரவில்லை. வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் சேர்வையே எடிட்டிங். கல்லூரிப் படிப்பை அறியாத நான் பல கல்லூரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் சென்று பாடம் நடத்தும்போது சொல்லும் வாக்கியம் I never teach, Only learning. (கற்பிப்பது அல்ல. உணர்ந்து கற்றுக் கொள்வது).

"பதிபக்தி' படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து டைரக்டர் பீம்சிங்கின் பாகஸ்தர்களில் ஒருவராக இருந்த ஜி.என்.வேலுமணி சரவணா பிலிம்ஸ் என்ற படக் கம்பெனியைத் தனியாக ஆரம்பித்து அதற்கான கதை விவாதம் கதாசிரியர்  சோலைமலையுடன் நடந்தது.  கதாசிரியர், தயாரிப்பாளருமான வலம்புரி சோமநாதன் என் தந்தையின் நண்பர். பதிபக்தி படத்தின் வெளியீட்டுக்கு உதவியவர்.

"திருமணம்'  கதையை ஜெமினிகணேசன், சாவித்திரி, வி.எஸ்.நாகய்யாவை வைத்துப் படமாக்குவதற்கு என் தந்தையிடம் கேட்டார். அவரும் சம்மதித்தார். 1958-இல் திரைக்கு வந்தது. Traditional (பாரம்பரிய) பாடல்கள் பாடும் தந்தைக்கும், மகனுக்கும் உண்டான கருத்து வேறுபாடுகளைச் சித்திரிக்கும் கதை.

அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அப்போது எனக்கு பதினோராவது வயது. வட இந்திய மராட்டி, ஹிந்தி படங்களின் தயாரிப்பாளர் இயக்குநர், ராஜ்கமல் பட நிறுவன முதலாளியுமான சாந்தாராமை எனது தந்தை பீம்சிங் தன்னுடைய ஆதர்ச குருவாக ஏற்றுக் கொண்டார் என்று பின்னாளில் நான் 1966-இல் மும்பையில் சாந்தாராமின் ஸ்டுடியோவில் ஒரு சிபாரிசும் இல்லாமல் போய்ச் சேர்ந்ததும் தெரிந்து கொண்டேன். எனது அந்த பாலபருவத்தில் பல முக்கிய நல்ல தலைவர்கள், பாடலாசிரியர்கள், டைரக்டர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பல பேரை நேரிலும் படித்தும் தெரிந்துகொண்டதால் முன்னேற முடிந்தது.

இன்னும் முன்னோக்கியே போக முடிகிறது. எனக்கு இதுவே நிறைய காலம் ஆனது போல் உள்ளதால், இப்போது வரும் இளைஞர்களிடம் என்னைவிட இன்னும் வேகமாக முன்னேற வேண்டும் என இளைஞர்கள் இருக்கும் இடம் தேடி அலைகின்றேன். சிகாகோவில் இருக்கும் என் கடைசி தங்கை சுசரிதா, "அண்ணா நீங்க இந்தியாவிலே, அதுவும் சென்னையிலே இருக்க வேண்டாம், உங்களுடைய அறிவுக்கும், சமூக சிந்தனைக்கும் இங்குள்ள மக்கள் உங்களை அரவணைப்பார்கள்''  என்று கூறவும், அதற்கு நான், "அங்கே என்னைப் போல் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், இங்கு நான் உள்ளிட்ட சிலர் மட்டுமே இருக்கிறோம்'' என்றேன்.

சென்னை, பாரீஸில் உள்ள பிராட்வே -  ஆங்கிலத்தில் Broadway என்றால் தமிழில் அகண்ட வீதி என்று அர்த்தம். அது குறுகிய வீதியாக அன்றும் இன்றும் உள்ளது. அங்குதான் பிரபாத், பிராட்வே, மினர்வா ஆகிய தியேட்டர்கள் இருந்தன. பிரபாத் தியேட்டரில் என் தந்தையின் குருவான சாந்தாராமின்  "ஜனக் ஜனக் பாயல் பாஜே' (1955) என்ற படம் வெளிவந்தது. அந்தப் படத்தைக் காண எங்கள் எல்லோரையும் என் தாய் சோனம்மாள் அழைத்துப் போனார். அவருக்கும் சாந்தாராமின் படம் என்றால் பிடிக்கும். ஹிந்தி தெரியாமலேயே சாந்தாராமின் படங்களைப் பார்ப்பார். சாந்தாராமின் மனைவி சந்தியாவே கதாநாயகியாக நடித்து வந்தார். சாந்தாராம் தன்னுடைய படங்களில் டைரக்டராகவும், நடிகராகவும், எடிட்டராகவும் பணிபுரிந்தார்.

"ஜனக், ஜனக்...' படத்தில் அவருடைய மனைவி சந்தியாவுடன் கோபிகிருஷ்ணா என்ற நடனத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞரை கதாநாயகனாக நடிக்க வைத்தார்.

அந்தப் படம் நாட்டியத்தைப் பற்றியது. கோபி கிருஷ்ணா வேகமாகச் சுழன்று ஆடுவதில் வல்லவர். பின்னாள்களில் கோபி கிருஷ்ணா நடன இயக்குநராகவும் ஆனார். அவர் நடன இயக்குநராக எஸ்.எஸ். வாசன் தயாரித்து இயக்கிய வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜயந்தி மாலா, பத்மினி ஆடும் போட்டி நடனம், "சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில் சொல்லடி, நடுவிலே வந்து நில்லடி, நடையிலே சொல்லடி' என்ற பாடல் அன்றும் இன்றும் பேசப்படுகிறது. தற்போதும் நான் செல்லும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், நிறுவனங்களிலும் இந்த நடனக் காட்சியின் சிறப்பின் அருமையை பாடமாக எடுக்கிறேன்.

காமிரா சுழன்று வந்ததா? அல்லது வைஜயந்தி மாலா, பத்மினியின் நடன அடவுகள் சரியாக இருந்ததா? அல்லது எடிட்டிங் அற்புதமாகச் செய்யப்பட்டதா என்று ஒவ்வொரு நாளும் பார்க்கும்போது ஒரு புது பரிமாணத்தை இப்பாடல் கொடுக்கிறது.

மகாகவி பாரதியார் எழுதிய இந்தப் பாடலை தயவுகூர்ந்து முழுவதுமாக வாசியுங்கள்:
மங்கியதோர் நிலவினிலே
கனவிலிது கண்டேன்.
வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கி வரும் பெருநிலவு
போன்றவொளி முகமும்
புன்னகையின் புது நிலவும்
போற்ற வருந் தோற்றம்.
துங்கமணி மின் போலும்
வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந் தென்னைப்
பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண் விழித்தேன்
அடாடவோ! அடடா! !
அழகெனுந் தெய்வந்தான்
அதுவென்றே யறிந்தேன்!
*** ***  
காலத்தின் விதி மதியை
கடந்திடுமோ என்றேன்.
காலமே மதியினுக் கோர்
கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது
நண்ணுமோ என்றேன்.
நாலிலே ஒன்றிரண்டு
பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ
எண்ணத்தை யென்றேன்.
எண்ணினால் எண்ணியது
நண்ணுங்கா  ளென்றாள்.
மூலத்தை சொல்லவோ
வேண்டாவோ என்றேன்.
முகத்திலருள் காட்டினாள்
மோகமது தீர்ந்தேன்.
-மகாகவி பாரதியார்.
இந்தப் பாடல் "திருமணம்' படத்தில் வந்தது. ராகம்  தேஷ். பாடியவர் டி.எம்.எஸ்.  இசை. எஸ்.எம்.சுப்பையா. இதே பாடல் "பாவை விளக்கு' என்ற படத்தில் பாடியவர் சி.எஸ். ஜெயராமன். ராகம் சிவரஞ்சனி. இசை கே.வி. மகாதேவன். இயக்கம் கே. சோமு. திருமணம் படத்தில் ஜெமினியும் பாவை விளக்கில் சிவாஜியும் தங்கள் காதலியை ஐந்தாம் வகுப்பில் பாரதியார் சரஸ்வதி, காளி இருவரையும் எண்ணி பாடியதாகச் சொல்லப்பட்டது. பின்னாளில் என் தந்தையிடம் காதலியை நினைத்துப் பாடுவதாக எழுதி இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு மெல்லிய புன்னகைதான் பதிலாக வந்தது. அந்தப் புன்னகைக்கு அர்த்தம் அப்போது எனக்கு விளங்கவில்லை. நான் எடிட் செய்த காலங்களில் எனக்குப் புரிய வந்தது. அதைப் பின்வரும் கட்டுரைகளில் எழுதுவேன்.

என் தந்தை டைரக்ட் செய்த "திருமணம்' படம் தோல்வி அடைந்தாலும் அதில் வரும் நடனக் காட்சியில் கோபி கிருஷ்ணாவும் கமல லட்சுமணனும் ஆடினார்கள். அந்தப் படப்பிடிப்பு முடிந்து புரசைவாக்கத்தில் உள்ள மீனாட்சி தெருவில் உள்ள எங்களது வாடகை வீட்டிற்கு என் தந்தையுடன் கோபி கிருஷ்ணா வந்தார். அவரை மனதில் வைத்து என் தந்தை என் கடைசி தம்பிக்கு கோபிநாத் என்று பெயர் சூட்டினார். அந்தப் படப்பிடிப்பில் அவரைப் பார்த்ததும், "ஜனக், ஜனக்...' படத்தில் அவரைப் பார்த்ததும் தற்போது எங்களது வீட்டிலும் பார்த்தவுடன் எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி. அந்தத் தெருவில் இருக்கும் அவரை அறியாத சிறுவர்களும், சிறுமிகளும் பெரியோர்களும் எங்கள் வீட்டின் முன்னே கூடினார்கள். அப்போது எடுத்த போட்டோவை நான் பத்திரமாக இதுவரை பாதுகாத்து வருகிறேன். மேலே காணும் அந்த போட்டோவில் என் அம்மாவின் மடியில் தவழ்ந்திருப்பது கோபிநாத் என்ற சாக்ரடீஸ். நானும் என் அண்ணன் நரேந்திரன், என் தம்பிகளான ஹிருதயநாத், பின்னாளில் (ஜெயகாந்தனின்சில நேரங்களில், சில மனிதர்கள் படத்தின் தயாரிப்பாளர்) பாரதிராஜாவின் கண்கள் என்று உருவகப்படுத்தப்பட்டு என் தந்தையால் கர்ணகுட்டி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கண்ணன். மற்றொரு நாள் கோபிகிருஷ்ணா. கோபியைப் பார்த்து "என்னைப்போலவே கலராகவும், சுருட்டை முடியுடன் இருக்கிறானே அவனை நானே எடுத்துப் போகட்டுமா?'' என்று என் தாயிடம் விளையாட்டாகக் கேட்டதற்கு தாராளமாக எடுத்துப் போங்கள். எனக்குத்தான் மீதி ஐந்து ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களே என்று கூறினார்.

பாரதியார் பாடல், "மங்கியதோர்' என்ற பாடலில் எல்லா வரிகளுமே அற்புதமானவை. சமீபத்தில் இயற்கை எய்திய என் நண்பரும் சிறுகதையாசிரியரும், ஜெயகாந்தனின் மடத்தின் பரிபாலனருமான தேவபாரதி அவ்வப்போது பாடும் பாரதியின் கவிதை வரிகளைக் கேட்டுத் தெளிவு பெற்றுள்ளேன். பல நாள்கள் அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தபோதெல்லாம் அவரைக் காண நான் செல்லும் போதெல்லாம் ஆறுதல் கொள்வார். என் பிறந்தநாள் 1947 ஆகஸ்ட் 15. இந்நாளில் ஒவ்வோர் ஆண்டும் என் வீட்டில் தேசியக்  கொடியை ஏற்றிவிட்டு அவருடன் சென்று அன்றைய பொழுதைக் கழிப்பேன். சமீபத்தில் போன ஆகஸ்ட் 15-இல் நான் வீட்டில் கொடி ஏற்றவில்லை. அவரைப் போய் பார்க்கவும் இல்லை. ஏனென்றால் அவர் இல்லை. காலையில் எழுந்து குளிக்கும் பழக்கம் உள்ள நான் அன்று பகல் 12 மணி வரை குளிக்காமல் இருந்து அவருடைய நினைவுகளில் மூழ்கினேன். அவர் இறந்தார் என்ற செய்தி கேட்டும் அவரைக் காணச் செல்லவில்லை. ஆனால், பாரதியின் கவிதையில் தேவபாரதி சிலாகித்த வரிகள் இதோ:
துங்கமணி மின் போலும்
வடிவத்தாள் வந்து
நான் சென்றிருந்தால், "பாரதியார் நான் வந்திருக்கிறேன் எழுந்திருச்சு பாருங்க' என்று கூறி இருப்பேன். தேவபாரதி நீ பாரதியின் பராசக்தியையோ அல்லது சரஸ்வதியையோ தரிசித்துக் கொண்டிருக்கின்றீர்களா என்று கேள்வி கேட்டிருப்பேன்.

தேவபாரதிக்குப் பிடித்த மற்றொரு வரி:
"ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தையென்றேன்''
தேவபாரதியின் கதைகளை குறும்படமாக எடுப்பதற்கு பலரும் எவ்வளவு தர வேண்டும் என்று கேட்டால் அவர், "உரிமை எல்லோருக்கும் என்று அந்தப் புத்தகத்திலேயே எழுதியிருக்கேனே என்று 500, 1000 இல்லை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை''  என்பார்.
வாழ்க தேவபாரதி
வாழ்க வளமுடன்
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com