கலைஞர்களுக்கு ஒரு மேடை!

ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள் உள்ளன. எழுத்துத் திறமை உள்ள ஒருவர் இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்த்துக் கொண்டிருப்பார்.
கலைஞர்களுக்கு ஒரு மேடை!

ஒவ்வொரு மனிதருக்கும் பல முகங்கள் உள்ளன. எழுத்துத் திறமை உள்ள ஒருவர் இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்த்துக் கொண்டிருப்பார். அருமையாக வயலின் வாசிக்கும் திறமையுடைய ஒருவர் அலுவலகம் ஒன்றில் டைப் அடித்துக் கொண்டிருப்பார். இப்படித்தான் நேர்ந்தது ஒரு டாக்டருக்கு. மிகவும் திறமைமிக்க இசைக் கலைஞரான அவர், நோயாளிகளின் இதயத்துடிப்பின் ஒலியை மட்டுமே கேட்க வேண்டியிருந்தது. அவருடைய சகோதரருக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. திறமை மிக்க பல கலைஞர்கள், தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஒரு மேடையில்லாமல், போவது அவருடைய மனதை உறுத்தியது. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்த எண்ணத்தில் உருவானதுதான், https://www.artistize.com என்ற மேடை. அதை உருவாக்கியவர் சுரேஷ் செளராய். மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர். 
இந்த வலைதளத்தில் இப்போது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புத் தருபவர்களும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும் இந்த வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் சுரேஷ் செளராய்க்கும் எந்த கலைக்கும் தொடர்பில்லை. 
அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயோ சயின்ஸ் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். வியோம் பயோ சயின்ஸ் என்ற நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் சயின்டிஸ்ட். 
இந்த இணையதளத்தை ஆரம்பிக்க அவருக்கு ஓர் உடனடிக் காரணமும் இருந்தது. அவர் மகனுக்கு இசை கற்றுக் கொடுக்க ஒரு வாய்ப்பாட்டு, ஹார்மோனியம் ஆசிரியரை அவர் தேடியலைந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் அவர் தேடிய ஆசிரியர் கிடைத்தார். 
கலைஞர்கள் தங்களுடைய திறமையைக் காட்ட ஒரு மேடை தேவைப்படுவதைப் போலவே, கலைஞர்களைப் பயன்படுத்திக் கொள்கிறவர்களுக்கும் ஒரு தளம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்ததால், இந்த வலைதளத்தை 2014 } இல் புனேயில் ஆரம்பித்தார்.
கலைஞர்களுக்கான மேடை என்றால் ஏதோ இசை, நாட்டியத்தில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் என்று நினைத்துவிடாதீர்கள். நடிகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோ எடுப்பவர்கள், டாக்குமென்டரி படங்கள் தயாரிப்பவர்கள், பாடகர்கள், இசைக் கருவிகளை வாசிப்பவர்கள், சர்க்கஸ் கலைஞர்கள், கட்டடங்களில் உள் அலங்காரம் செய்பவர்கள், ரேடியோ ஜாக்கிகள், பின்னணிக் குரல் கொடுப்பவர்கள், இசை அமைப்பாளர்கள், ஓவியங்களை விற்பவர்கள். பேஷன் டிசைனர்கள் என கலை சார்ந்த அனைத்துப் பிரிவினரும் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்கின்றனர். அவர்களைப் பற்றிய சுய விவரக் குறிப்புகளுடன், அவர்கள் படைத்த கலைப்படைப்புகளையும் பதிவேற்றுகின்றனர். 
உலகின் 160 நாடுகளைச் சேர்ந்த கலை சார்ந்த தொழில்முனைவோர்கள், கலைநிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், விளம்பரப் படங்களை எடுப்பவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள், இசை நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், இசை ஆல்பங்களை உருவாக்குபவர்கள் என அனைவரும் தங்களுக்குத் தேவைப்படும் கலைஞர்களைத் தேர்வு செய்வதற்கு இந்த இணையதளம் உதவுகிறது. ஒரு கல்லூரி ஆண்டு விழா நடத்துகிறவர்கள் கூட, தங்களுடைய ஆண்டு விழா நிகழ்ச்சிகளை நடத்த கலைஞர்கள் தேவைப்பட்டால் இந்த வலைதளம் மூலம் வலை வீசலாம். 
சுரேஷ் செளராய் இந்த இணையதளத்தைத் தொடங்கும்போது ரூ.25 லட்சத்தை மூலதனமாகப் போட்டார். அவருடைய நண்பர்களும், குடும்பத்தினரும் ரூ. 1.2 கோடி கொடுத்தனர். அப்படித் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் மூலம் இரண்டாண்டுகள் எந்த வருமானமும் இல்லை. சுரேஷ் செளராய் அதை விரும்பவுமில்லை. 
நிறையப் பேர் வலைதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டு பயன் அடைந்த பின்னர்தான் இதன்மூலம் வருவாய் கிடைப்பதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினார். சென்ற ஆண்டு (2016) ஒரு கலைஞருக்கு ஒரு வேலையோ, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ப வாய்ப்போ இந்த வலைதளம் மூலம் கிடைக்கிறதென்றால், அதற்குக் கட்டணம் பெற முடிவு செய்தார். 
இதற்கு முன்பு ஒரு கலைஞர் ஒரு வேலை வாய்ப்பைப் பெற வேண்டுமானால், அந்த வாய்ப்பைப் பெற்றுத் தரும் இடைநிலை மனிதர்களை நம்ப வேண்டியிருந்தது. இப்போது இந்த இணையதளம் மூலமாக நேரடியாகவே தங்களுக்கு வேலை வாய்ப்பைத் தருபவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகிறது. 
பயோ சயின்ஸ் துறையைச் சேர்ந்த சுரேஷ் செளராயின் முயற்சிகளுக்குத் துணை நிற்பவர் தீபா செளராய்.
""இப்போது வேலை வேலை என்று எல்லாரும் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கார்ப்பரேட் உலகத்துக்கு அப்பாலும் வேறு உலகங்கள் இருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கு கலைகள் மிகவும் பயன்படுகின்றன. பல்வேறு கலைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வலைதளத் தொடர்பிணைப்புகள் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓர் இணைப்பைத்தான் நாங்கள் அளித்திருக்கிறோம்'' என்கிறார் சுரேஷ் செளராய்.
- ந.ஜீவா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com