சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!

நமது வாழ்க்கையில் முக்கியப் பங்களிக்கும் சமையலுக்கு தேவையான அடிப்படை தகவல்களில் இருந்து,
சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!

நமது வாழ்க்கையில் முக்கியப் பங்களிக்கும் சமையலுக்கு தேவையான அடிப்படை தகவல்களில் இருந்து, அனைத்துவிதமான உணவு செய்முறைகள், ஆலோசனைகள் என அனைத்தையும் நாம் இருந்த இடத்துக்கே கொண்டு வந்து சேர்க்கிறது ஓர் இணையதளம். 
"பெட்டர் பட்டர்' என்ற இணையதளத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு செய்முறைகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பகுதிகளில் பிரபலமான உணவு வகைகளோடு, சர்வதேச அளவிலான உணவு வகைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி என நான்கு மொழிகளில் தற்போது இந்த இணையதளம் இயங்கி வருகிறது. சமையலுக்கென்று எத்தனையோ இணையதள இணைப்புகள், இணையதளங்கள் உள்ளன. இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா?
நாடு முழுவதிலும் இருந்து குடும்பத் தலைவிகளே தங்களின் சிறப்பான உணவு செய்முறைகளை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். இதன் காரணமாக 7.50 லட்சம் பேர் இந்த இணையதளத்தில் செயலியை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரு மாதத்தில் 10 லட்சம் பேர் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
நியாஸ் லயிக் மற்றும் சுக்மணி பேடி ஆகிய இருவரும் இந்த இணையதளத்தின் நிறுவியவர்கள். தில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த இணையதளத்தை 23 பேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. 
நியாஸ் லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பங்குச் சந்தை துறையில் பணியாற்றிய வர். லண்டனில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார். சுக்மணி இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, வாஷிங்டன்னில் பணியாற்றியவர். அதன் பின்பு இந்தியா திரும்பிய அவர் எம்.பி.ஏ.படித்து முடித்து, பிலிப்ஸ் நிறுவனத்தின் ஜூஸர், ஃபுட் பிராசெஸர் ஆகிய பொருள்களுக்கு மார்கெட்டிங் மேலாளராகப் பணியாற்றினார்.
"இந்தப் பொருள்களை மார்கெட்டிங் செய்வதற்காக இந்தியாவின் பல இடங்களில் உள்ள குடும்பத் தலைவிகளைச் சந்தித்தேன். அப்போதுதான் சமையல் பெண்களின் அதீத ஆர்வத்தைப் புரிந்து கொண்டேன். எனது நண்பர்களும் உணவு தொழில்நுட்பத் துறையில் தொழில் தொடங்குமாறு அறிவுறுத்தினர். ஒன்றிரண்டு பிரபல சமையல் கலை நிபுணர்களின் இணையதளங்களைத் தவிர, சமையல் கலைக்கென்று தொழில்முறை இணையதளங்கள் இல்லை என்பதால் ஒரு புதிய இணையதளத்தைத் தொடங்கத் தீர்மானித்தோம்.
2015-இல் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தின் அடிப்படைப் பணிகளுக்கென்று ரூ.1.65 கோடி நிதி திரட்டப்பட்டது. அதன் மூலம் இந்த இணையதளத்தின் வீடியோ தொழில்நுட்பங்களை வலுப்படுத்தவும், இணையதளத்தில் மொழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறோம். இன்னும் 6 மாதங்களில் 10 மொழிகளில் இணையதளத்தைச் செயல்படுத்துவோம்'' என்கிறார் சுக்மணி.
இந்த இணையதளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒருவர் குறிப்பிட்ட ஓர் உணவு செய்முறையை தனது வீட்டில் இருந்து வீடியோ எடுத்து அனுப்புகிறார். ஒருவேளை அந்த வீடியோவின் தரம் குறைவாக இருந்தால், இணையதள நிர்வாகத்தில் உள்ள வல்லுநர்கள் அந்த வீடியோவை தரம் உயர்த்தி பதிவேற்றம் 
செய்கின்றனர். 
மேலும் புதிதாகச் சமையல் செய்பவர்களுக்கு வீடியோ மூலம் படிப்படியாகவும் சமையல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக, உணவு செய்முறையை கம்யூட்டரில் தட்டச்சு செய்து அனுப்பாமல், அவர்கள் செய்முறையைச் சொன்னாலே அதனைப் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
"பெட்டர் பட்டர்' இணையதளத்தின் மூலம் மாதத்தோறும் சமையல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட நபர் 20 உணவு செய்முறையை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டால், அந்த நபரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் உணவு செய்முறைப் புத்தகம் வெளியிடப்படும். 
"எத்தனை விலையுயர்ந்த உணவுகளை உண்டாலும் வீட்டில் தயாரித்துச் சாப்பிடும் உணவுக்கு எதுவும் ஈடாகாது. ஆனால் தினமும் என்ன உணவைச் சமைப்பது என்பதுதான் சவால். நாடு முழுவதும் உள்ள குடும்பத் தலைவிகள் தங்கள் பாரம்பரிய உணவுகளையும், சமையலில் புதிய முயற்சிகளையும் அரங்கேற்றும் தளமாக பெட்டர் பட்டர் உருவாகியுள்ளது. உணவு விரும்பிகளுக்கும், தங்களுக்குள் இருக்கும் சமையல் கலைஞரை அடையாளம் காண விரும்புவோருக்கும் எங்கள் இணையதளம் வரப்பிரசாதம்'' என்கின்றனர் "பெட்டர் பட்டர்' குழுவினர்.
- ஜெனி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com