உண்ணவா? உடனே சொல்லவா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

"நிவாத கவச காலகேய வதைச் சருக்கத்தில் அயல்கிரகப் போர்களைப் பற்றி வில்லிப்புத்தூரார் சொல்லியிருப்பார்'' என்று நான் சொன்னவுடன்,
உண்ணவா? உடனே சொல்லவா? பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்

உன்னோடு போட்டிபோடு! - 10
"நிவாத கவச காலகேய வதைச் சருக்கத்தில் அயல்கிரகப் போர்களைப் பற்றி வில்லிப்புத்தூரார் சொல்லியிருப்பார்'' என்று நான் சொன்னவுடன், அத்தனைப் பேரும் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார்கள். அந்த வலம்புரிச்சங்கைக் கொண்டு வந்த மீனவ இளைஞன், வந்த வழியிலேயே ஓடிப்போனான்.

"புதியன தேடும் அறிவும், புரியாததைப் புரிந்து கொள்ளும் அறிவும் இருந்தால்தான் வாழ்க்கை இனிமையுடையதாய் அமையும். அதனால்தான் நாம் பூக்கள்தோறும் தேனைச் சேகரிக்கும் தேனீக்களைப் போலத் தேடிக் கொண்டே இருக்க வேண்டும். இதை ஒரு திரைப்படப்பாடலில் கூட கவிஞர் வைரமுத்து சொல்லியிருப்பாரே'' என்று சொல்லி, நான் சற்றுத் தயங்கி யோசித்தேன்.

உடனே, ஹெட்போன் பாட்டி தன் ஹெட்போன் பின்னை செல்போனிலிருந்து கழட்டி, ஸ்பீக்கரை ஆன் பண்ணி, "இந்தப் பாட்டான்னு கேளுங்க'' என்று சொன்னவுடன்,
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
எனும் வரிகள் கடற்காற்றில் தவழ்ந்து வந்து எங்கள் காதுகளில் நுழைந்தது. "இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை..' எனும் பல்லவி மீண்டும் வந்தபோது அங்கிருந்த இளைஞர்களின் முகத்தில் உற்சாகப் பூ  பூத்தது. துள்ளாத மனமும் துள்ளியது.

"இந்த நூற்றாண்டில் அறிவியல் தந்த ஆச்சரியத்தைப் பாருங்கள். முன்பெல்லாம், எனக்கு ஒரு பாடல்வரி மறந்துவிட்டால், அந்தப் பாடல் வரியை என் தந்தையாரிடத்திலோ, ஆசிரியரிடமோ, நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொள்வேன். இல்லாவிட்டால் நூலகங்களைத் தேடிச் சென்றுப் புத்தகங்களில் அந்த வரிகளைக் கண்டுபிடிப்பேன். ஆனால், நான் சொல்லவந்த செய்திக்கு ஏற்ற திரைப்படப் பாடலைப் பேரிளம் பெண்ணான இந்தப்பாட்டி (ஹெட்போன் பாட்டி) ஒரு விநாடியில் நம் காதுகளில் ஒலிக்கவிட்டார்கள். நாம் விரும்பியிருந்தால், அந்தப் பாடல் காட்சியையும் கூடக் காட்டியிருக்க முடியும் தானே?'' என்று அந்தப் பேத்தியிடம் நான் கேட்டேன். 

"எக்ஸாக்ட்லி நிச்சயமாக இதோ...'' என்று அந்தப்பேத்தி அதற்கும் தயாராகத் தொடங்க நான் குறுக்கே புகுந்து, "இருங்கள்! இருங்கள் அதை அப்புறம் பார்ப்போம்'' என்று சொல்லிவிட்டு, "காலத்திற்கேற்ற கல்வியைக் கற்க முன்வருபவர்களே, காலத்தையும் மாற்றியமைப்பார்கள். இது உண்மை. உலகத்தோடு ஒட்ட ஒழுகலே கல்வி'' என்றேன் நான்.

"ஆகாசத்துல கோட்டை கட்டுறதும், மனக்கோட்டை கட்டுறதும் ஒன்னுதான். அப்பிடியே ஆகாசத்துல கோட்டை கட்டிருந்தாலும் அத இங்க இருந்து போயி ஒருத்தன் எப்பிடி அழிச்சிருக்க முடியும்?'' என்று நாங்கள் விட்ட இடத்திலேயே அந்த மீசைக்காரர் தொடங்கினார்.

"இவர் சொல்லுறதும் உண்மைதான். ஆகாயத்துல கோட்டை இருந்ததா என்ற சந்தேகம் நமக்கும் உண்டு. ஆனால், சங்க இலக்கியப் பெண்பாற் புலவரான மாறோக்கத்து நப்பசலையார்'' என்று நான் சொன்ன பெயரைக் கேட்ட ஹெட்போன் பாட்டி, "வாவ் அப்பவே லேடி ரைட்டர்ஸ் இருந்திருக்காங்க'' என்று கைதட்டி மகிழ்ந்தது.

"ஆமா பெண்கவிஞர் தான். புறநானூற்றில் 39ஆவது பாடலில் கிள்ளிவளவன் என்ற சோழமன்னனை வாழ்த்தும்போது, உன் முன்னோனாகிய தொடித்தோட்செம்பியன் எனும் சோழன், தொங்குகின்ற மதில்களையுடைய கோட்டைகளை வீழ்த்தி வெற்றி கண்டான் எனப் பாராட்டுகின்றார். இம்மதில்கள் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்தனவா அல்லது பூமியிலேயே அந்தரத்தில் தொங்குமாறு கட்டியிருந்தக் கோட்டையா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்'' என்றேன் நான்.

"கோட்டையவே ஸ்ட்ராங்கா கட்டுனாத் தான நிக்கும்? சரியா கட்டலைன்னா, சென்னை விமான நிலையத்துல மாதிரி, அடிக்கடி விழுந்து ஆட்களப் பயமுறுத்தி ஓட வைக்காதா?'' என்று அந்த மீசைக்காரர், தன் மீசையை முறுக்கியபடி கேட்டார்.

"ஏன் நெபுக்கட்நேசரால் கட்டப்பட்ட பாபிலோன் நகரத்துத் தொங்கும் தோட்டம் உலகின் பழைய அதிசயங்களில் ஒன்றாகப் பேசப்படத்தானே செய்கிறது? ஆனாலும் அதுவும் ஆய்வுக்குரியதுதான்'' என்று சொன்ன நான்,

"இன்னொரு செய்தியையும் உங்களுக்குச் சொல்லுகிறேன். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 102 மாடிகளைக் கொண்ட எம்பயர் ஸ்டேட் பில்டிங்கை சில ஆண்டுகளுக்கு முன் பார்க்கச் சென்றேன். அந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் பண்டைய அதிசயங்கள் ஏழினையும், இன்றைய அதிசயங்கள் ஏழினையும் (தாஜ்மஹால் உட்பட) வடிவமைத்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அதில் பாபிலோன் தொங்கும் தோட்டத்தைப் பார்த்தவுடன் எனக்குத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் தான் நினைவுக்கு வந்தான்'' என்று முடித்தேன். 

அப்போது, வேக வைக்கப்பட்ட பனங்கிழங்குகளைப் பச்சைப் பனையோலைகளில் கொண்டு வந்து அனைவர் கைகளிலும் சிலர் கொடுத்தார்கள். அதன் வாசனை எங்களின் பேச்சைத் தடைசெய்தது. 

கடற்கரை மணலில், அங்கேயே விளையும் கற்பகத்தருவாம் பனை மரங்கள் தந்த பனங்கிழங்குகள் அவை. அந்தக் கிழங்குகளை உண்ணும் முறையே ஒரு தனிக் கலை. 

"இதை உண்பதற்கு முன்னால், நிவாத கவச காலகேயர்களைப் பற்றிச் சொல்லவா அல்லது உண்ணவா?'' என்று நான் கேட்க, "சொல்லவா? உடனே உண்ணவா?  அருமையான பட்டிமன்றத்தலைப்பு'' என்று ஒருவர் மகிழ்ச்சியில் கைதட்ட, "தீர்ப்பு அடுத்த வாரம்'' என்று நான் சொல்ல...
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com