உலகத் தரத்தை எட்ட...முறையான பயிற்சி அவசியம்!

சினிமா என்றவுடன் நடிப்பு, இயக்கம், இசை போன்றவை மட்டுமே நமக்கு நினைவுக்கு வருகின்றன. அதையும் தாண்டி வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய பல தொழில் சார்ந்த பிரிவுகள் அதில் உள்ளன. 
உலகத் தரத்தை எட்ட...முறையான பயிற்சி அவசியம்!

சினிமா என்றவுடன் நடிப்பு, இயக்கம், இசை போன்றவை மட்டுமே நமக்கு நினைவுக்கு வருகின்றன. அதையும் தாண்டி வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய பல தொழில் சார்ந்த பிரிவுகள் அதில் உள்ளன. 

மின்னணு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவரும் இன்றைய நிலையில் சினிமா துறையில் உள்ள நுட்பங்களை உதவியாளராக மட்டுமே இருந்து நாம் பெற்றுவிட முடியாது. முறையான சினிமா பள்ளிகளில் பயில்வதன் மூலமே மாற்றங்களோடு நாமும் மாறி வளர முடியும்.

முறையான சினிமாவை கற்றுக் கொடுக்க சர்வதேச அளவிலும், நம் நாட்டிலும் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பானவற்றை அடையாளம் கண்டு, நாம் விரும்பும் பிரிவு, பயிற்சிக் காலம், கட்டணம், வேலைவாய்ப்பு போன்றவற்றை தேர்ந்தெடுப்பதன்மூலம் கலை உலகிலும், வாழ்விலும் நாம் பிரகாசிக்க முடியும். 

இதையொட்டி, சினிமா கல்வி குறித்த சர்வதேச அமைப்புகளை அறிந்துகொள்வதும் அவசியம். 1944-இல் பிரான்ஸில் பிரெஞ்ச் பிலிம் ஸ்கூலை தொடங்கி நடத்தியவர் மார்சல் எல். கெர்பர். இவரும், இவரது நண்பருமான ரெமி டெஸ்ஸனே-வும் சேர்ந்து 1954-இல் International Association of Film and Television School என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.   தற்போது இந்த அமைப்பில் 60 நாடுகளைச் சேர்ந்த 160 சினிமா கல்வி நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் சர்வதேச அளவில் அதிகபட்ச தரம் பேணப்படுகிறது.

மேலும், இதன் உறுப்பு கல்வி நிறுவனங்கள் இணைந்து பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், விழாக்கள், இணை தயாரிப்பு, கூட்டுப் படங்கள் அளிப்பதன் மூலம் உலக கலை பண்பாடு தொடர்புக்கு இந்த அமைப்பு பெரும் பங்களிக்கிறது. 

இந்த அமைப்பில் இந்தியாவில் புணே-யில் உள்ள Film and Television Institute of India,கொல்கத்தாவில் உள்ள Satyajit Ray Film and Television Institute,  மும்பையில் உள்ள Whistling Woods International  ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இதில் FTII, SRFTI இரண்டும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்குகின்றன. இங்கு வெற்றிகரமாக கல்வி முடித்தவர்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதோடு, மகாராஷ்டிரா மாநிலம், அந்தேரியில் உள்ள மும்பை பிலிம் அகாதெமியும், சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள எல்.வி. பிரசாத் பிலிம் இன்ஸ்டிடியூட்டும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற நிறுவனங்களாக உள்ளன.

மேலும், ஆமதாபாத்தில் உள்ள National Institute of Design, கேரள மாநில அரசால் தொடங்கப்பட்ட  K.R. Narayanan National Institute of Visual Science and Arts,    சென்னை அடையார் பிலிம் இன்ஸ்டிடியூட், மும்பை பிலிம் அகாதெமி உள்ளிட்டவை நம் நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான சினிமா பள்ளிகளில் குறிப்பிடத்தக்கவை.

புணே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் நுழைவுத் தேர்வு முறையில் சேர்க்கை நடைபெறுகிறது. கொல்கத்தா சத்யஜித் ரே நிறுவனத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 10-ம் தேதியும், கேரளா கே.ஆர். நாராயணன் நிறுவனத்தில் மார்ச் 4-வது வாரத்திலும் பெங்களூரு அரசு நிறுவனத்தில் மே முதல் வாரத்திலும், சென்னை எல்.வி. பிரசாத் நிறுவனத்தில் மார்ச் முதல் வாரத்திலும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. Art Direction and Production Design, Acting, Sound Recording, Sound Design, cinematography, Direction and Screen Play Writing, Recording and TV Engineering, Video Editing, Electronic Cinematography, TV Direction, Animation and Film Design, Classical and Play Back Singing, Lighting  போன்ற பல பிரிவுகளில் சினிமா கல்வி வழங்கப்படுகிறது.

இதில், குறுகியகால சான்றிதழ் படிப்பு தொடங்கி, 6 மாத, ஓராண்டு டிப்ளமா, 2 ஆண்டு முதுநிலை டிப்ளமா, 3 மற்றும் 4 ஆண்டு இளைநிலை பட்டம் என நம் விருப்பம், பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப பயிலும் வசதிகள் உள்ளன.

விரும்பும் கோர்ஸ், சேரும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புகள், அனுபவம் மற்றும் புகழ்பெற்ற ஆசிரியர்கள் மூலம் அளிக்கப்படும் பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்ப ரூ. 30 ஆயிரம் தொடங்கி அதிகபட்சமாக ஆண்டுக்கு வரிகள் இல்லாமல் ரூ. 4.25 லட்சம் வரை கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெறும் வாய்ப்பும் உள்ளது. கல்விக்கடன் பெறவும் வாய்ப்பு உண்டு.

திரைப்படக் கல்வி குறித்து சென்னை எல்.வி. பிரசாத் பிலிம் & டிவி அகாதெமியின் மேலாண்மை இயக்குநர் ரமேஷ் பிரசாத் கூறியது:
"மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பத் துறை தொழில்போல, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் வலுவான அடித்தளத்தை முறையான ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனப் பயிற்சி மூலம் மாணவர்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் புதிய உயரத்தைத் தொடமுடியும். சர்வதேச அளவில் இந்தத் துறையில் இந்திய மாணவர்கள் எட்டவேண்டிய தூரம் நிறைய உள்ளது'' என்றார். 
- ஆர்.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com