பிரச்னை...பிரச்னை...பிரச்னை!

வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
பிரச்னை...பிரச்னை...பிரச்னை!

வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது அந்தப் பிரச்னைகளைக் கையாளும் திறன் இல்லாவிட்டால், வேலையிலும் வாழ்க்கையிலும் இன்னும் கூடுதலான பிரச்னைகளை நாம் சந்திக்க நேரும். அந்தத் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது?
எதையும் செய்ய வேண்டாம்
சில பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டிய நிலை இருக்கும். ஆனால், பெரும்பாலான சம்பவங்களில், எதையும் செய்யாமல் சில நிமிடம் காத்திருப்பதும், தீர ஆலோசிப்பதுமே சிறந்த செயலாக இருக்கும்.

எதை நீங்கள் செய்தாலும், அச்சப்படாதீர்கள். பிறர் உங்களது முடிவை ஏற்றுக் கொள்வார்கள் அல்லது ஒத்துழைப்பார்கள். ஆனால், கட்டுப்பாட்டை இழந்து நீங்கள் செயல்பட்டால், உங்களது பதற்றம் பிறருக்கு வந்துவிடும். அதனால் பாதிப்பே ஏற்படும். 
தன்னம்பிக்கையை கை விடக் கூடாது
கடந்த காலங்களில் உங்களை நோக்கி வந்த பிரச்னைகள், அதில் இருந்து நீங்கள் மீண்டு வந்தது ஆகியவற்றை நினைவில் கொள்ளுங்கள். அது இப்போதைய பிரச்னைகளைக் கையாளும் திறமையை உங்களுக்குத் தந்துவிடும்.
பிறருடன் கலந்தாலோசியுங்கள்
எதிர்பாராத பிரச்னைகளைச் சந்திக்கும் நேரம்தான், பிரச்னைக்குரிய காலத்தில் நீங்கள் பிறரை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஓர் வாய்ப்பைத் தரும்.  

ஆகையால், தேவைப்படும் நேரத்தில் உங்களைச் சுற்றியுள்ள பிறரின் உதவியையும், ஆலோசனைகளையும் கேளுங்கள். குழப்பமான மனநிலையில் இருந்தால், அவர்களது கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தெளிவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
எதிர்காலப் பிரச்னைக்குத் தீர்வு
பணிபுரியும் இடத்திலோ, வேறு இடத்திலோ ஏதேனும் ஒரு பிரச்னையில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கலாம். அதில் உங்களுக்குச் சாதகமாக முடிவு கிடைத்திருக்கலாம். அதனால் அந்தப் பிரச்னையை அப்படியே மறந்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடக் கூடாது. 

எப்படி பிரச்னை வந்தது? அதை எப்படி எதிர்கொண்டீர்கள்? என்று சிந்தியுங்கள். உங்களுடன் பணிபுரியும் நபர்களுடன் கலந்து பேசி, அவர்களும் இதுபோல் பிரச்னைகளை எதிர்கொண்டார்களா? அதற்கு எப்படித் தீர்வு கண்டார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இதேபோல் பிரச்னைகள் வரும்போது அதற்குத் தீர்வு காண உங்களுக்கு வழிகாட்டியாக அது இருக்கும்.
பிரச்னைகளை எதிர்பாருங்கள்
சிலர் எதிர்பாராமல் வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சமாளித்து விடுவார்கள். வேறு சிலர், அதை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். ஏனெனில், அவர்கள் அதை எதிர்பார்த்திருப்பார்கள். அதனால் அதில் இருந்து எப்படி வெளியே வருவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். உதாரணமாக, கணினியில் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்து வைத்திருக்கும் நபர்கள், அதில் இருக்கும் முக்கியத் தகவல்கள் அழிந்து விடாமல் இருப்பதற்கு வேறு டிஸ்க் அல்லது பென் டிரைவில் சேகரித்து வைத்து விடுவர். அதுபோல, பிரச்னைகள் வரும் என்று எதிர்பார்த்திருங்கள். அதற்கான தீர்வையும் தெரிந்து வைத்திருங்கள். 
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com