மரங்களின் டாக்டராகுங்கள்!

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தை மதிப்பு அதிகம். அதேபோல, மதிப்பு கூட்டப்பட்ட கல்விக்கு வேலைவாய்ப்புகள் அதிகம்.
மரங்களின் டாக்டராகுங்கள்!

மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தை மதிப்பு அதிகம். அதேபோல, மதிப்பு கூட்டப்பட்ட கல்விக்கு வேலைவாய்ப்புகள் அதிகம். சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை வழங்கிவரும் படிப்புகள் நம் நாட்டு இளைஞர்களின் கவனத்தைப் பெறாமல் உள்ளன. 

அவற்றில் ஒன்றுதான் அர்போரிகல்ட்சர் (Arboriculture). மனிதர்களுக்கான மருத்துவர், கால்நடைகளுக்கான மருத்துவர் என்பதுபோல, மரங்களை மட்டுமே படிப்பது அர்போரிகல்ட்சர். அவற்றைப் பராமரிப்பவர் அர்போரிஸ்ட் (Arborist), மரங்களின் மருத்துவர்.

நல்ல அர்போரிஸ்ட் ஒரு மரத்தின் பிரச்னைகளைக் கண்டறியக்கூடிய (Diagnosis) திறன்படைத்தவராக இருப்பார். மரத்தின் நோயைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் மரத்துக்கு பாதிப்பு இல்லாமல், அறுவைச் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி குணப்படுத்துவார். 

மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் தேவையற்ற கிளைகளை வெட்டி அகற்றி, அதன் சீரான வளர்ச்சிக்கு உதவுவார். ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிந்து சரிசெய்வார். சாகும் தறுவாயில் (காய்ந்துபோகும் நிலை) உள்ள மரங்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பார். அதோடு மரங்களின் பரவலுக்கு (இனப்பெருக்கம்) உறுதுணையாக இருப்பார்.

நில அமைப்புக்கு ஏற்ற மரங்களை அடையாளம் காண்பது, மரங்களைச் சரியான இடத்தில் நடுவது, பிரச்னைக்குரிய நேரங்களில் மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவது (Transplantation),  வீடுகளுக்கு, மின் கம்பங்களுக்கு அருகே உள்ள மரங்களை அழிக்காமல் அவற்றைச் சீரமைப்பது போன்றவை அர்போரிஸ்ட்களின் பணிகள்.

பெரும்பான்மையான நாடுகளில் படித்த, பயிற்சி பெற்ற, உரிய அமைப்புகளில் பதிவு செய்த அர்போரிஸ்டுகளை மட்டுமே தோட்டங்களை, வீடுகளில் உள்ள மரங்களை, பூங்காக்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள மரங்களைப் பராமரிக்கும், நிர்வகிக்கும் பணிகளில் அமர்த்துகின்றனர். இதையொட்டி, சர்வதேச அளவில் அர்போரிகல்ட்சர் படித்தவர்களின் தேவை அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, அர்போரிஸ்ட் அசிஸ்டென்ட் டெக்னீசியன் அளவில் நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவோர் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 10.20 லட்சம் முதல் 14.28 லட்சம் வரையும், Skilled Arborist ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் முதல் 20.40 லட்சம் வரையும், கண்காணிப்பாளர், மேலாளர் அளவில் பணிவாய்ப்பு பெறுவோர் ஆண்டுக்கு ரூ. 17 லட்சம் முதல் 20.40 லட்சம் வரையும் ஊதியம் பெறுகின்றனர்.

அனுபவமிக்க அர்போரிஸ்டுகள் பள்ளி, கல்லூரி தலைமைப் பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு ரூ. 20 லட்சத்தைத் தாண்டியும் ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

அர்போரிகல்ட்சரில் மேலாண்மை கல்வியும் இணைந்திருப்பதால், அலுவலக நிர்வாகம், வணிக செயலாக்கம், மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளும் இருக்கும். 

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் இந்தத் துறையில், வணிக ஒப்பந்தம் பெறுவது, மத்திய, மாநில அரசுப் பணிகள், தனியார் தோட்டங்கள், பூங்காக்களை அமைத்துக் கொடுப்பது, அவற்றைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, கோல்ப் மைதானங்களை உருவாக்குவது, தொழிற்சாலை, பல்கலைக்கழகங்கள் உருவாக்கம், வீடு வடிவமைப்பு, நில வடிவமைப்பு மற்றும் இவற்றின் கிளைகளாக பல துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

அர்போரிகல்ட்சருக்கு என தனிப்பட்ட பட்டப் படிப்போ, பட்டயப் படிப்புகளோ இந்தியாவில் இல்லை. ஆனால், இதற்கு ஆதாரமான உயிரியல், தாவரவியல், தோட்டக்கலையியல், வனஇயல், வேளாண் இயல், சூழலியல் போன்ற வனத் துறை சார்ந்த பல படிப்புகள் நம் நாட்டின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கழகங்களில் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது பட்டயம் முடித்தவர்கள், சர்வதேச கல்வி நிறுவனங்கள் இணையம் மூலம் நடத்தும் அர்போரிகல்ட்சர் பாடத்தில் சேர்ந்து படித்து சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறலாம். இதில் உயர்கல்வியும் உண்டு. இந்த பாடத்தில் செய்முறை பயிற்சி உண்டு.

இணைய கல்வியில் படிப்பை முடித்தவர்கள் அமெரிக்காவில் உள்ள International Society of Arboriculture (ISA) என்ற அமைப்பில் பதிவுசெய்து உரிய அங்கீகாரத்தைப் பெறலாம். இதற்கு முன்னதாக ISA நடத்தும் சர்வதேச தரத்துக்கான தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு ISA-வால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தியாவில், சென்னை உள்பட 5 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த அமைப்பு போல, சில நாடுகள் தங்கள் அளவில் Arboriculture Association வைத்துள்ளன. என்றாலும், ISA  அளிக்கும் தரச் சான்றிதழ் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 

வானளாவிய உயர்ந்த மரங்களில் ஏறி நின்று வேலை செய்வதற்கான உடல் தகுதி, மன தைரியம், Chainsaw எனப்படும் இயந்திர ரம்பங்களைப் பயன்படுத்தும் வல்லமை போன்றவையும் இந்தப் பணிக்குத் தேவை. 

என்றாலும்கூட, சர்வதேச அளவில் பல நாடுகளில் பெண்கள் இந்தத் துறையில் பணியாற்றி வருகின்றனர் என்பதையும், இளம்பெண்கள் ஆர்வமுடன் இக்கல்வியை தேர்ந்தெடுக்கின்றனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com