புதிய  பாடத்திட்டங்களுடன் சுற்றுச்சூழல் முதுநிலைக் கல்வி!

தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
புதிய  பாடத்திட்டங்களுடன் சுற்றுச்சூழல் முதுநிலைக் கல்வி!

தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் சுற்றுச்சூழல் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வழங்குவது நமது கடமையாகவும் உள்ளது. அறிவியல் வளர்ச்சியில், சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும். 

இதற்காக பல்வேறு கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் அறிவியலுக்கான பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் முற்றிலும் புதிய பாடத்திட்டங்களுடன் இரண்டாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் ஒப்புயர்வு அறிவியல் மையம் வழங்கி வருகிறது. 

இதுகுறித்து அந்த மையத்தின் தலைவர் ஏ.ஜி. முருகேசன் தெரிவித்ததாவது:
"தற்போது சுற்றுச்சூழல் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகி வருவதால் மாசுக்கட்டுப்பாடு, நச்சியல், இயற்கை வளங்கள், தட்பவெப்பம், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, வனஉயிர்  பாதுகாப்பு, மரபு சாரா எரிசக்தி, கழிவு மறுசுழற்சி, நானோ தொழில்நுட்பம், கரியமில வாயு சேகரம், சூழல் தாக்க மதிப்பீடு, தொழிற்சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பியல் போன்ற நவீனமான பாடங்கள் சேர்க்கப்பட்டு, உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் சுற்றுச்சூழல்  கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இப்படிப்பின் இடையே களஆய்வுகளும், தொழிற்சாலைகளில் நேரடியாக பயிற்சி பெறும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.  தகுதியுள்ள மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

தற்போது, அனைத்துக் கல்லூரிகளிலும் சுற்றுச்சூழல் பாடத்தை நடத்துவதற்காக சுற்றுச்சூழல் அறிவியல் படித்தவர்களை மட்டுமே துணைப் பேராசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு  (UGC)  வலியுறுத்தியுள்ளது. 

மேலும் இப்படிப்பினை முடித்த மாணவர்கள் மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் துறைகள், மாசுக் கட்டுப்பாட்டு துறைகள், வனத்துறை, சூழல் தாக்க மதிப்பீட்டாளர், சூழல் விஞ்ஞானிகள், சூழல் பாதுகாப்பாளர், நானோமெடிசின் மற்றும் அரசு சாரா துறைகள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.

பரமகல்யாணி சுற்றுச்சூழல் ஒப்புயர்வு ஆராய்ச்சி மையத்தில் உயர்ந்த ஆராய்ச்சி சாதனங்கள், காணொலிக் காட்சிகள் மூலம் கல்வி கற்கும் வசதிகள், ஆய்வகங்கள், பசுமைக் குடில், விலங்கு சோதனை நிலையம், பெரிய நூலகம், மியூசியம், தாவர ஆவணக் காப்பகம், கள ஆய்வு வசதிகள் மற்றும் விளையாட்டு வசதிகள் உள்ளன.

நிகழாண்டு வெள்ளி விழா கொண்டாடும் இம்மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்று இந்தியா மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். இம்மையத்தின் வளர்ச்சிக்காகப் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

மேலும் தமிழ்நாடு அரசு இந்த மையத்துக்கு சுற்றுச்சூழல் துறைக்கென்று  Centre of Excellence  என்ற விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர்கள் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகளின் நிதி உதவியுடன் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதுடன், பல்வேறு மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழல் துறை, சிறந்த சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்திற்கான உயர் விருதினையும் வழங்கியுள்ளது. 

இரண்டு ஆண்டு சுற்றுச்சூழல் முதுநிலைப் பட்டப்படிப்பில் விலங்கியல், தாவரவியல், வேதியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் சேரலாம். மேலும் விவரங்களை www.msuniv.ac.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.
- அழகியநம்பி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com