சிறப்புத் தகுதி இல்லையா? வேலை நிச்சயம் !

வேலைவாய்ப்புத் தேடி கொண்டிருக்கும் நீங்கள்,  குறிப்பிட்ட எந்தத் துறையிலும் உங்களுக்கு போதிய சிறப்பு தகுதியோ அல்லது நிபுணத்துவமோ இல்லை,
சிறப்புத் தகுதி இல்லையா? வேலை நிச்சயம் !

வேலைவாய்ப்புத் தேடி கொண்டிருக்கும் நீங்கள்,  குறிப்பிட்ட எந்தத் துறையிலும் உங்களுக்கு போதிய சிறப்பு தகுதியோ அல்லது நிபுணத்துவமோ இல்லை, இதனால் வேலை கிடைக்காது என்ற கவலையில் இருக்கிறீர்களா? அப்படியெனில், அது வீண் கவலையாகும்.  இது உங்களை ஆறுதல்படுத்துவதற்காகச் சொல்லப்படுவதல்ல.  தற்போதைய வேலைவாய்ப்பு நிகழ்வுகளை ஆராய்ந்தே  இதைச் சொல்கிறோம்.

தற்போது வேலைகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் பல்வேறு நிறுவனங்களும், ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் உள்ள நபர்களைக் காட்டிலும், புதிதாக வேலைவாய்ப்புத்  தேடி களத்துக்கு வரும் நபர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக  புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன.

படித்து முடித்துவிட்டு, புதிதாக பல்வேறு திறமைகளுடன் வேலைதேடி வரும் நபர்களால், பல்வேறு களங்களிலும் எதிர்ப்பின்றி பணியாற்ற முடியும். ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையில்  நிபுணத்துவம் பெற்று விளங்கும் நபர்களால், அவர்கள் சார்ந்த துறையில் மட்டுமே திறம்பட  பணி புரிய முடியும். மேலும் குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டும்தான் அவர்களுக்கு ஞானம் இருக்கும். அதுமட்டுமன்றி,  அத்தகைய நபர்கள் தாங்கள் சார்ந்த நிறுவனத்தில்   ஊதிய உயர்வு தொடர்பான பேரத்தில் ஈடுபடுவார்கள்;    அல்லது பிற நிறுவனத்திடம் அதிக ஊதியத்துடன் கூடிய வேலை குறித்துப்  பேசிக் கொண்டிருப்பார்கள். 

ஆனால், புதியவர்கள் விஷயத்தில் இதற்கு இடமில்லை. தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், எதையாவது கற்கவும், சாதிக்கவும் வேண்டும் என்ற ஆர்வத்துடனும் அவர்கள் இருப்பார்கள். இதனால், அவர்களைப் பணிக்குத் தேர்வு செய்து, பணித்திறமை  மிக்கவராக பின்னர் அவர்களை மாற்றிக் கொள்ளலாம் என்று நிறுவனங்கள் கருதுகின்றன.

இதுகுறித்து தனியார் நிறுவனத்தில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும், தனித்திறமை கொண்டவர்களுக்கு அதிக தேவை, பற்றாக்குறை நிலவியது. ஆனால், இன்றோ, புதியவர்களையே நிறுவனங்கள் விரும்புகின்றன.

மருந்தகம் போன்ற சில துறைகளுக்கு, சில தனிப்பட்ட தகுதிகள் நிச்சயம் தேவைப்படுகின்றன. அத்துறையில் சிறப்பு தகுதி கொண்டவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தேவையும் நிலவுகிறது. அதேநேரத்தில், சில்லரை விற்பனை நிலையம், உள்கட்டமைப்பு துறைகள் போன்றவற்றில் அத்தகைய சூழல் நிலவவில்லை. அங்கு புதியவர்களுக்குதான் அதிக வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

பணித்திறன்  கொண்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும், புதியவர்களுக்கு பாதி  அல்லது அதற்கும்  குறைவான ஊதியத்தை அளித்தாலே போதுமானதாகும் என்பதால், பெரும் தொகையும் மிச்சப்படுத்தப்படுகிறது. அதனால் புதியவர்களையே நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன'' என்கிறார். 

புதியவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துறைகளில், விற்பனைத் துறை, பொது மக்கள் சேவை துறை, தளவாடத் துறை ஆகியவை சிறந்து விளங்குகின்றன. இந்தத் துறைகளில் வேலை பெற  பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு ஆகியவையே அடிப்படைக் கல்வித் தகுதியாகும். எனவே, சிறப்பு தகுதி இல்லை என்று கவலைப்படாதீர்கள்.  உங்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். 
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com