தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்!

உலக தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா 13 சதவீதம் பங்கு வகிக்கிறது. சென்ற நிதியாண்டில் நாட்டின் தோல் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ. 39,000 கோடி. உள்நாட்டு அளவில் தோல் பொருள்களின்
தோல் தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்தியவர்!

உலக தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா 13 சதவீதம் பங்கு வகிக்கிறது. சென்ற நிதியாண்டில் நாட்டின் தோல் பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு ரூ. 39,000 கோடி. உள்நாட்டு அளவில் தோல் பொருள்களின் வர்த்தக மதிப்பு ரூ. 78,000 கோடி. மொத்தமாக தோல் தொழில் வர்த்தகத்தின் மதிப்பு ரு. 1.17 லட்சம் கோடி. இத்துறையை நம்பி சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

இந்தப் புள்ளிவிபரங்களை இங்கு சுட்டிக்காட்ட காரணம் இருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா சாதித்திருப்பதன் பின்னணியில் ஒரு விஞ்ஞானியின் கடின உழைப்பு இருக்கிறது. அவர்தான், எலவார்த்தி நாயுடம்மா. 

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டு, அதன் மூலமாக, தோல் தொழிலில் மாற்றத்தை ஏற்படுத்தினார் நாயுடம்மா. 

மக்கள்நலனே அறிவியலின் இறுதி விளைவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர்,  "மக்கள் விஞ்ஞானி' என்று போற்றப்படுகிறார். 

ஆந்திரப் பிரதேச மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி அருகிலுள்ள எலவாரு கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில், 1922, செப். 22-இல் பிறந்தார் நாயுடம்மா. கிராமத்திலேயே பள்ளிக் கல்வி பயின்ற அவர், குண்டூர் ஏ.சி.கல்லூரியில் புதுமுக வகுப்பை முடித்தார். அடுத்து காசி ஹிந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தொழிலக வேதியியல் பிரிவில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார். 

அதையடுத்து,  சென்னையிலிருந்த தோல் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து தோல் தொழில்நுட்பம் படித்தார். 1943-இல் இக்கல்லூரியிலேயே ரூ. 17   மாத ஊதியத்தில் விரிவுரையாளராக இணைந்தார் நாயுடம்மா. அங்கு தனது கடின உழைப்பு, ஆராய்ச்சி ஆர்வம், திறன் மேம்பாடு ஆகியவற்றால் விரைவில் கவனம் பெற்றார். அவரை மேற்படிப்புக்காக 1946-இல் பிரிட்டனுக்கு  அனுப்பியது கல்லூரி நிர்வாகம்.  

லண்டனில் தோல் வர்த்தகர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓராண்டு பயிற்சி பெற்ற நாயுடம்மா,  அடுத்து ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். 

பென்சில்வேனியாவிலுள்ள லேஹை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தோல் தொழில்நுட்பத்தில் எம்.எஸ். பட்டமும் பிஎச்.டி. பட்டமும் பெற்ற அவர், 1951-இல் நாடு திரும்பினார். தோல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற முதல் இந்தியர் நாயுடம்மா தான். 

அவர் நாடு திரும்பிய போது, சென்னை தோல் தொழில்நுட்பக் கல்லூரி,  மத்திய தோல் ஆராய்ச்சி நிலையமாக (Central Leather Research Institute- CLRI - 1948) மாறியிருந்தது. மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சி.எஸ்.ஐ.ஆர்.) அங்கமாக அது இயங்கியது.

1951-இல் மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இயக்குநராக நாயுடம்மா நியமிக்கப்பட்டார். அடுத்த இரு வாரங்களிலேயே அதன் துணை இயக்குநரானார். 1957-இல் சி.எல்.ஆர்.ஐ.யின் இயக்குநர் ஓய்வு பெற்றபோது, அதன் தற்காலிக இயக்குநராகப் பொறுப்பேற்றார் நாயுடம்மா. 

பிறகு அப்போதைய பிரதமர் நேருவால் அதன் நிரந்தர இயக்குநராக 1958-இல் நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் சுமார் 13 ஆண்டு காலம் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப மாற்றங்களுக்கும்,  விரைவான வளர்ச்சிக்கும் காரணமானார்.

அவரது பதவிக்காலத்தில் தேசிய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் தோல் ஆராய்ச்சிக்கான மாபெரும் மையமாக சி.எல்.ஆர்.ஐ. உருவெடுத்தது. தோல் பதப்படுத்துவதில் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாக வேதியியல் முறையில் பதப்படுத்துவதை நாயுடம்மா ஊக்குவித்தார். அதன் மூலமாக தோல் பதனிடுவதில் மேம்பாடு ஏற்பட்டு தரமான தோல் உற்பத்தியானது. 

அமெரிக்காவில் தோல் தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்களை இந்தியாவில் அவர் அறிமுகப்படுத்தினார். அதன்மூலமாக, அதுவரை தாழ்த்தப்பட்டபிரிவினர் மட்டுமே செய்துவந்த தோல் தொழில் அனைத்து சமூகத்தினரும் செய்யும் தொழிலாக மாறியது. 

தரமான தோல் உற்பத்தியானவுடன் அதை மதிப்புக் கூட்டும் பொருளாக ஏற்றுமதி செய்தால்தான் அதிக லாபம் கிடைக்கும் என்று உற்பத்தியாளர்களுக்கு அவர் வழிகாட்டினார்.  அதன்படி புதிய தோல் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றை விற்பனை செய்வதற்காக, ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளை முதல்முறையாக இந்தியாவில் அவர் நடத்தினார். அதன்மூலமாக, வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய தோல் பொருள்களை நாடி வந்து வாங்கினர்.

அவரது பணியைப் பாராட்டி, இந்திய அரசு 1971-இல் பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு,  சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். அப்போது நாடு முழுவதும் பல துறைகளில் செயல்பட்ட மத்திய ஆய்வகங்களில் சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டார். 

1977-இல் நாட்டில் ஆட்சி மாறியபோது, தனது பதவியை நாயுடம்மா ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பி, மீண்டும் தனது தாய்வீடான சி.எல்.ஆர்.ஐ.க்கே வந்து பேராசிரியர் பணியில் ஈடுபட்டார். 

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 1981 ஜூனில் அவர் நியமிக்கப்பட்டார்; அங்கு தனது சீர்த்திருத்தப் பணிகளுக்கு அதிகாரிகள் மட்டத்தில் ஆதரவு கிடைக்காததால் 1982 அக்டோபரில் அப்பணியிலிருந்து வெளியேறினார். மீண்டும் அவர் சென்னை சி.எல்.ஆர்.ஐ.க்கே வந்தார். 1984-இல் அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோதும், கெüரவப் பேராசிரியராகவும் வழிகாட்டியாகவும் சி.எல்.ஆர்.ஐ.யில் தொடர்ந்தார்.

சர்வதேச அளவில் தோல் தொழில்நுட்பத்தில் நிபுணராக மதிக்கப்பட்ட நாயுடம்மா, 54 நாடுகளுக்கு பணி நிமித்தமாகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் சென்றிருக்கிறார். யுனெஸ்கோ, யு.என்.டி.பி, யுனிடோ போன்ற ஐ.நா. அமைப்புகளின் ஆலோசகராக அவர் விளங்கினார். ஐ.நா.வின் கல்வி மற்றும் அபிவிருத்திக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் (COSTED) தலைவராக 1980 முதல் 1985 வரை பதவி வகித்த அவர், வளரும் நாடுகளிடையே தொழில்நுட்பப் பரவலுக்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்.

இந்த அமைப்பின் சர்வதேச நிகழ்வில் பங்கேற்க ரஷ்யா சென்ற நாயுடம்மா இந்தியா திரும்புகையில், அவர் பயணித்த ஏர் இந்தியா- கனிஷ்கா விமானம் நடுவானில் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. 1985, ஜூன் 23-இல் நடந்த அந்த விபத்தில் நாயுடம்மா உள்பட 329 பயணிகள் பலியாகினர். 

நாயுடம்மா தேசிய அளவிலும் உலக அளவிலும் மேலும் பல விருதுகளைப்  பெற்றுள்ளார். கனடாவில் இயங்கும் சர்வதேச வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம், தனது பிரதான அரங்கத்துக்கு நாயுடம்மா என்று பெயரிட்டு கெளரவித்துள்ளது. தெனாலியில் உள்ள டாக்டர் நாயுடம்மா நினைவு அறக்கட்டளை, ஆண்டுதோறும் இந்தியாவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு நாயுடம்மா நினைவு விருது விருது வழங்கி வருகிறது. 
- வ.மு.முரளி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com