படிக்கும்போதே தேவை... பணி ஆலோசனை!

நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நாம் சம்பாத்தியத்துக்காக எடுத்துக் கொள்ளும் வேலையாகத்தான் இருக்க முடியும்.
படிக்கும்போதே தேவை... பணி ஆலோசனை!

நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நாம் சம்பாத்தியத்துக்காக எடுத்துக் கொள்ளும் வேலையாகத்தான் இருக்க முடியும்.  இதில் நாம் காட்டும் ஆர்வம், உழைப்பு, ஈட்டும் தொகை ஆகியவையே நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய உதவும். அப்படிப்பட்ட ஒரு வேலையை நாம் தேர்ந்தெடுக்கும்போது, உண்மையில் நமக்கு ஒத்துவராத, ஆர்வமில்லாத அல்லது திறனுக்கு ஏற்றதல்லாத ஒரு வேலை அமைந்துவிடுமானால், அது நம் வாழ்க்கையில் பேரழிவையே ஏற்படுத்தும்.

எனவேதான், நம்முடைய ஆர்வம், திறன், இலக்கு ஆகியவற்றுடன் தொடர்புடைய  படிப்பையும், வேலையையும் தேர்ந்தெடுக்க பணி ஆலோசனை தேவைப்படுகிறது.  இந்தப் பணி ஆலோசனை என்பது படித்து முடித்துவிட்டு வேலை தேடும்போது பெறுவது அல்ல. மாணவர்கள் படிக்கும்போதே அவர்களின் உண்மையான சாத்தியகூறுகள், பல்வேறு பாடங்களிலும் அவர்களுக்கு உள்ள ஆர்வம் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்குப் பொருத்தமான, சரியான வேலையைத் தெரிந்து கொள்வதுதான். 

இந்த அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள், ஆளுமை (Personality), மனப்போக்கு (Aptitude), ஆர்வம் (Interest) என்ற 3 அடிப்படைக் காரணிகளை வைத்தே வழங்கப்பட வேண்டும்.

ஆனால்,  நாம் நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம்தான் அதிகமாக எதிர்கால இலக்குகளைக் குறித்த ஆலோசனைகளைப் பெறுகிறோம். அவர்களின் ஆலோசனைகள்  நம்மைத் தவறாக வழிநடத்தவே வாய்ப்புகள் அதிகம். காரணம், ஒரு பணி குறித்த அவர்களின் கண்ணோட்டம் அவர்களுடைய சொந்த விருப்பு, வெறுப்பை பொருத்தே அமையும்.

அதேசமயம், பணி ஆலோசகர்கள் நமக்கு ஆலோசனை வழங்கும்போது ,   நம்முடைய மனப்போக்கு, ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வழிகாட்டுவர். நம் நாட்டில் 60 சதவீதம் பேர் ஆய்வின் அடிப்படையிலான பணி ஆலோசனைகளைப் பெறுவதில்லை. 

நம் நாட்டு மக்கள் மனதிலும், மாணவர்களின் மனதிலும் அரசுப் பணி வாழ்க்கைதான் பாதுகாப்பு என்ற கருத்து படிந்துவிட்டதால், அவர்கள் பணி ஆலோசனை பெற்று பிற பணிகளில் சேருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களைத் தேர்ந்தெடுக்க பொருளாதாரப்  பிரச்னைகள்  இடையூறாக உள்ள நிலையில், எந்தப் பிரச்னையும் இல்லாத மாணவர்களின் தெளிவற்ற கல்வி இலக்கு (Unclear educational goals), கல்வி மன அழுத்தம் (Academic stress), சுயதிறன் இல்லாமை (lack of self - efficiency) போன்றவற்றை பணி வழிகாட்டுதலின்போது எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம், பணியில் சேர்ந்த ஒருவர் அந்தப் பணி பிடிக்காத நிலையில், வேறு பணிக்கு மாறும்போது மட்டுமே பணி ஆலோசகரை நாடிச்செல்லும் வழக்கம் இருந்தது. 

ஆனால் படிக்கும் காலத்தில் ஒரு மாணவர் சரியான பாடப்பிரிவை தேர்ந்தெடுக்காவிட்டால்,  அவர் பணிக்குச் செல்லும்போது  பெரிய அளவில் பாதிக்கப்படுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வில், 3 மாணவர்களில் ஒருவர் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடப்பிரிவில் மகிழ்ச்சியாக இல்லை எனவும், இதேபோல, நாடுமுழுக்க உள்ள சுமார் 5 லட்சம் பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் பயிலும் பாடங்களின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படு
கிறது. குறிப்பாகச் சொல்வதானால், 92 சதவீத மாணவர்கள் தங்கள் பள்ளியிலிருந்து பணி தொடர்பான எந்தவித வழிகாட்டுதலையும் பெறாததால், இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும் தெரிகிறது. 

பணி ஆலோசனை பெறும்போது, நம்முடைய முழுபலம் என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.  ஆலோசனை பெற்று பொருத்தமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது,  நம்முடைய இயற்கையான திறமைகளை வெளிப்படுத்தவும் முடியும்.   நம்முடைய தனிப்பட்ட முக்கியத்துவம் மற்றும் எல்லைக்குட்பட்டு தேவையான பணி வாய்ப்புகளைப் பெறவோ அல்லது ஒதுக்கிவிடவோ இந்த ஆலோசனை உதவும்.   விருப்பமான பணியில் முன்னேறிச் செல்லவும், வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளவும் உதவும். 

இன்றையச் சூழலில் ஒரு பணியைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் சிக்கலானது. இளைஞர்கள் பலவகையான பணி வாய்ப்புகளில் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர் அவர்களை தொன்றுதொட்டு இருந்துவரும் பணிகளில் சேர வைத்துப் பாதுகாக்க நினைக்கின்றனர். இதுபோன்ற சூழலில், பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக  பணி ஆலோசகர் பணியாற்றுகிறார். 

இந்தியாவில் உள்ள மொத்த மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணி ஆலோசகர்கள் அல்லது வழிகாட்டும்  ஆலோசகர்கள் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது 15 லட்சம் மாணவர்களுக்கு 500 ஆலோசகர்கள் மட்டுமே உள்ளதாகவும், இது மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது பலமடங்கு குறைவு என்பதும் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

எனவே, மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே பணி ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப பாடங்களையும், பணிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியும். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com