கண்டதும் கேட்டதும் 6 - பி.லெனின்

எங்கள் சிறிய வாடகை வீட்டிற்கு என்.எஸ்.  கிருஷ்ணன் வந்து அவ்வப்போது உரையாடிய, அந்தக் காட்சிகள் என்னுள் இன்றும் நிரம்பி உள்ளன.
கண்டதும் கேட்டதும் 6 - பி.லெனின்

உள் ஒன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்.
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்.
- வள்ளலார்
என் தந்தை பீம்சிங் உதவி இயக்குநராக இருந்தபோது என் அண்ணன் நரேந்திரனும் நானும் புரசைவாக்கத்தில் உள்ள மேனா தெரு (தற்போது மீனாட்சி தெரு) வாடகை வீட்டில் பிறந்தோம்.

கிருஷ்ணன் - பஞ்சு இருவரும்  என்.எஸ்.  கிருஷ்ணன் படக் கம்பெனியின் "பைத்தியக்காரன்',  "நல்ல தம்பி' போன்ற படங்களுக்கு உதவி இயக்குநர்களாகவும், உதவி எடிட்டர்களாகவும் பணிபுரிந்ததால்  என்.எஸ்.  கிருஷ்ணனின் உறவு கிடைத்தது.

எங்கள் சிறிய வாடகை வீட்டிற்கு என்.எஸ்.  கிருஷ்ணன் வந்து அவ்வப்போது உரையாடிய, அந்தக் காட்சிகள் என்னுள் இன்றும் நிரம்பி உள்ளன. அவர்தான் என் தந்தைக்கு "பணம்' என்ற திரைப்படத்தின் உதவி இயக்குநராக இருந்து முடித்துக் கொடுக்க வாய்ப்பளித்தார். திரைப்படம் முடிந்ததும் என்.எஸ். கிருஷ்ணன் என் தந்தைக்கு ஒரு ரேபான் மூக்கு  கண்ணாடியும் ஷீஃபர்ஸ் பேனாவும் கொடுத்தார். ஒரு பவுன் தங்கச் சங்கிலியை என் தாயாருக்கும் கொடுத்தார். பல நாள்கள் அவர்களிடம் அவை இருந்தன. இப்போது எங்கே? தெரியவில்லை. "பணம்' திரைப்படத்திற்கு மு.கருணாநிதி கதை - வசனம். அதன் மூலமாக மு. கருணாநிதி, சி.என். அண்ணாதுரை திமுக-வைச் சேர்ந்த மற்ற தலைவர்களுடன் நட்பு கிடைத்தது. ஆன்மிகவாதியான என் தந்தைக்கு கம்யூனிஸ்டுகளான தோழர்  ஜீவா, மதுரை மாயாண்டிபாரதி போன்றவர்களோடும் நட்பு இருந்தது.

என்.எஸ்.  கிருஷ்ணன் என் தந்தையாரை தனியாக ஒரு திரைப்படத்தை இயக்குமாறு பணித்தார்.

முதல் படம் தின்ஷா தெகரானி என்ற சவுண்ட் இன்ஜினியர் தயாரிப்பாளர். மு.கருணாநிதி கதை - வசனம். திரைப்படம் "அம்மையப்பன்'. அதில் எஸ்.எஸ்.ஆர்.,  ஜி. சகுந்தலா  போன்றோர் நடித்தனர்.  அதில் உதவி இயக்குநராகவும், ஸ்டில் கேமராமேனாகவும் பணியாற்றியவர் என் இன்னொரு தாய்மாமன் திருமலை. (என் அத்தை ஜானகியை மணந்தவர்).

அம்மையப்பன் கெல்லீஸ் (தற்போது கிள்ளியூர்)  உமா தியேட்டரில் 1954, செப்டம்பர் 24-இல் ரீலிஸ் ஆனது. உமா தியேட்டர், இப்போது உமா அபார்ட்மெண்டாக இருக்கிறது. அந்தத் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண ஏழு வயதான என்னையும் தன் சைக்கிளில் அமர்த்தி கூட்டிப்போனார் என் தந்தை.

படத்தைப் பார்த்து முடித்து வெளியே வந்த மக்கள் ""டேய் யாரோ பீம்சிங்காம் "சுகம் எங்கே' படத்தை அப்படியே எடுத்து இருக்கான்'' என்று என் தந்தையின் காதுபட சொன்னது இன்னும் நினைவில் உள்ளது. இரண்டு படங்களும் ஒரே கதை. இரண்டுக்கும் வேறு வேறு கதாசிரியர்கள். சுகம் எங்கே: கண்ணதாசன். 

அம்மையப்பன்: மு. கருணாநிதி.  சுகம் எங்கே:  கே.ஆர். ராமசாமி, சாவித்திரி, பி.எஸ்.  வீரப்பா,  கே.ஏ. தங்கவேலு, சந்திரபாபு, டி.பி. முத்துலட்சுமி,  டி.கே. ராமசந்திரன், எஸ். ராமாராவ், ஓ.ஏ.கே. தேவர் என்று பெரிய நடிகர் பட்டாளத்தோடு வெளியானது. அதன் இயக்குநர் அப்போதைய பிரசித்தி பெற்ற இயக்குநர் கே. ராம்நாத்.

மக்களின் முடிவை அப்படியே ஏற்றுக்கொண்ட என் தந்தை கீழே நின்று கொண்டிருந்த என்னை சைக்கிளின் பின்னால் தூக்கி அமர வைத்து, "வாப்பா போலாம்'' என்று முகத்தில் எந்த பாவமும் மாறாமல் சொன்னார். அப்போது அந்த வயதில் எனக்கு அவரின் மனநிலை தெரியவில்லை. பின்வந்த நாள்களில் வெற்றி, தோல்வி பற்றி தெரிய வந்த வயதில், " முதல் படம் தோல்வியை எப்படித் தாங்கிக்கொண்டீர்கள்?'' என்று நான் அவரிடம் கேட்டதற்கு, “Success has many fathers. Failure is an orphan’’  என்றார்.

நான் ஏற்கெனவே எழுதியதுபோல் யார் எந்த மொழியில் சொன்னார்களோ, அதே மொழியில் பதிவு செய்கிறேன். நான்  வெற்றி தோல்விகளைப் பிரித்துப் பார்க்காமல், நாம் செய்வதைச் செய்துகொண்டேயிருப்போம் என்றே பயணிக்கிறேன்.

பின் குறிப்பு:
சென்சார் அதிகாரி சாஸ்திரி, அம்மையப்பன் திரைப்படத்தின் பல காட்சிகளில் இடம்பெற்ற வசனங்களை நீக்கச் சொல்லிவிட்டார். பீம்சிங் தான் இயக்கிய முதல் படத்திலேயே இத்தனை Censor cuts வந்திருப்பதாக மு.க.விடம் சொன்னார். (மு.கருணாநிதியை என் தந்தை அப்படித்தான் அழைப்பார்). ஒரு வார்த்தையும் cut செய்யக்கூடாது என்று கருணாநிதி சொல்லிவிட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் தணிக்கைத்துறை அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக என் தந்தை சாஸ்திரியிடம் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. மாற்று வசனங்களை டப்பிங் செய்து கொடுக்கும்படி சாஸ்திரி கூறிவிட்டார்.  பீம்சிங் அவர்களும் அவர் சொன்னதுபோல் மாற்று வசனங்களை டப்பிங் செய்தார். அதோடுதான் "அம்மையப்பன்'  வெளியானது. அதற்குப் பிறகு இயக்குநர் பீம்சிங்கும், சாஸ்திரியும் நல்ல நண்பர்களாக மாறிப்போனார்கள்.

என் தந்தை பீம்சிங்கை அவரது யூனிட்டில் "டைரக்டர்' என்று அனைவரும் அழைத்ததால் நானும் "டைரக்டர்'  என்றே அழைக்கத் தொடங்கினேன். அவர் வயதுடைய அவருடைய நண்பர்கள் பீம்பாய், பீமண்ணா என்று அழைப்பார்கள். என் அம்மா அவரை பீமண்ணா என்று பல நேரங்களில் அழைத்ததைக் கேட்டு, "உங்களுக்கு அவர் என்ன அண்ணனா?'' என்று நான் கேலி செய்தபோது பதிலளிக்காமல் சிரிப்பார்.

என் அப்பா, அம்மாவின் பற்கள் அழகாகவும், வரிசையாகவும் இருக்கும். எங்கள் எட்டுப்பேருக்கும் அதேபோன்று பல் வரிசைகள். 70-ஆவது வயதில் இருக்கும் என் பற்கள் விழாமலும், சொத்தை இல்லாமலும் வரிசையாக இருக்கின்றன. ஏன் என்று பலமுறை ஆலோசித்திருக்கிறேன். என் பெரியப்பா அடுப்புக்கரி வியாபாரம் செய்ததால் எங்களுக்கு பல் துலக்குவதற்கு அடுப்புக்கரியும், விராட்டி சாம்பலும் கொடுத்து தேய்க்கச் சொல்வார்கள். அதுதான் பற்களின் பலத்துக்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகிறது.

நான் காணும் பல இளைஞர்களின் பற்கள் சொத்தையாக இருக்கக் காரணம் பலவிதமான பற்பசைகளை உபயோகிப்பது ஒரு காரணம். மேலும் பான்பராக், சிகரெட், மது அருந்துதல் போன்ற லாகிரி வஸ்துகளைப் பயன்படுத்துவது கூடுதல் காரணம்.

இவற்றையெல்லாம் நீக்கிவிடுவது நன்று என்று அவர்களிடம் நான் சொல்கிறபோது "உங்களைப்போல எங்களால் இருக்க முடியாது' என்பார்கள். என்னைவிட அவர்கள் மேன்மை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com