வாட்ஸ் அப்: இப்படியும் பயன்படுத்தலாம்!

வாட்ஸ் அப் - ஐ  இன்று எல்லாரும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவருடைய செல்போனிலும் வந்து குவியும் வாட்ஸ் அப் தகவல்களை அழிக்கவே பலருக்குப் பொறுமையில்லை.
வாட்ஸ் அப்: இப்படியும் பயன்படுத்தலாம்!

வாட்ஸ் அப் - ஐ  இன்று எல்லாரும் பயன்படுத்துகிறோம். ஒவ்வொருவருடைய செல்போனிலும் வந்து குவியும் வாட்ஸ் அப் தகவல்களை அழிக்கவே பலருக்குப் பொறுமையில்லை. ஆனால் அந்தத் தகவல்களில் எத்தனை தகவல்கள் பயனுள்ளவை? வெட்டி அரட்டைகளாகவும்,  வீண்  பொழுதுபோக்காகவுமே பெரும்பாலான வாட்ஸ் அப் தகவல்கள் இருக்கின்றன.  

ஆனால்  சிவகங்கை மாவட்டம் கானூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்  வாட்ஸ் அப்- ஐ மிக வித்தியாசமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  வாட்ஸ் அப் மூலம் தகவல்களைப் பதிவிட்டு, அதன் மூலம் நிதி திரட்டி,  தண்ணீர்ப் பஞ்சம் உள்ள அந்தப் பகுதி மக்களுக்கு வாட்டர் டேங்க் மூலம் இலவசமாகத் தண்ணீர் அளித்து வருகின்றனர்.  இதைப் பற்றி வாட்ஸ் அப் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் நம்மிடம் கூறியதிலிருந்து...

"சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வரும் சிறிய கிராமம் கானூர். வைகை ஆற்றங்கரையின் வடகரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட இளைஞர்களால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் "உண்மை-உழைப்பு-உயர்வு' எனும் வாட்ஸ் அப் குழுவினை உருவாக்கினோம்.  அதில்,கிராமத்தில் நிகழும் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளையும், வேலை வாய்ப்புச்  செய்திகளையும், ஊரில் நடைபெறும் திருவிழாக்களையும்  பதிவு செய்து வந்தோம். இதனால் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும்  இளைஞர்கள் அனைவரும் கானூரில் இருப்பது போன்று உணர்வதாகப் பதிவு செய்தனர். இந்நிகழ்வு எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் வற்றி கானூர் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது. இதன் காரணமாக எங்கள் கிராம பெண்களும், வயதானவர்களும் சுமார் 4 கி.மீ தொலைவு வரை அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இந்நிகழ்வினை எங்களுடைய வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டோம்.

அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீர் டேங்க் மூலம் தண்ணீரை இலவசமாக கிராம மக்களுக்கு வழங்க முடிவெடுத்தோம். 

அதனடிப்படையில் வாட்ஸ் அப் குழுவில் உள்ள கிராமத்து இளைஞர்கள் அனைவரும் சிறு தொகையினை எனது வங்கி கணக்கில் செலுத்தினர்.

அவ்வாறு செலுத்தப்பட்ட நிதி  ரூ.1லட்சம் சேர்ந்தவுடன் சுமார் 5,500 லிட்டர் கொள்ளளவு கொள்ளும் அளவிற்கு தண்ணீர் டேங்க்  ஒன்றை வாங்கினோம். 
அதனை ஏற்கனவே இருந்த டிராக்டரில் பொருத்தி தற்போது வைகை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் இருந்து  தண்ணீர் சேகரித்து கானூர் கிராம மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றோம்.

இந்த செயல் கிராம மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகவே இந்த வாட்ஸ் அப் குழு  மூலம் இனி வரும் காலங்களில் மரம் நடுதல், கிராம இளைஞர்களுக்கு  உதவிடும் வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்களைச்  செய்ய திட்டமிட்டுள்ளோம்''  என்றார். 
- ச.சந்தனக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com