கவர்ந்திழுங்கள்... பிறரை!

நெருக்கடி மிகுந்த உலகில் எல்லாருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்... அவசரம்... நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் பிறர் நம்மைக் கவனிக்க என்ன செய்வது?
கவர்ந்திழுங்கள்... பிறரை!

நெருக்கடி மிகுந்த உலகில் எல்லாருக்கும் எல்லாவற்றிலும் அவசரம்... அவசரம்... நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் பிறர் நம்மைக் கவனிக்க என்ன செய்வது? பிறரின் கவனத்தை நாம் பெறாவிட்டால், வாழ்வில் நாம் சந்திக்க வேண்டிய அரிய சந்தர்ப்பங்களை நழுவவிட்டுவிடுவோம். பிறர் கவனத்தை எப்படிக் கவர்வது? கவனியுங்கள் சில வழிகளை:
1. நண்பர்களுடன் இணைந்திருங்கள்
தனித்து இருப்பதை விடுத்து, நண்பர்களுடன் இணைந்து இருக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தனியாக அமர்ந்திருக்கும்போது இருக்கும் உங்களின் தோற்றத்தைக் காட்டிலும், நண்பர்களுடன் இருக்கும்போது உங்களின் தோற்றத்தில் வசீகரம் அதிகரித்திருக்கும்.  நீங்கள் கூடுதல் அழகாகத் தெரிவீர்கள். நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, கவலைகளை மறந்து சந்தோஷமாக இருப்பதால் உங்களது முக அழகும், நகைச்சுவைத் தன்மையும் அதிகரிக்கும். இதனால் உங்களுக்குத்  தன்னம்பிக்கையும்  அதிகரிக்கும். 
2. சிரிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்
புன்சிரிப்பும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கண்களும் கொண்ட முகமே அழகான முகமாகக் காட்சியளிக்கும். சிரித்த முகத்துடன் இருக்கும் நபர்களுக்கு எப்போதும் அனைவரது மனதிலும் சிறப்பான இடம் இருக்கும். கூட்டத்தினர் மத்தியில் இவர்களுக்கு என்று தனிச் செல்வாக்கு இருக்கும். இவர்களைச்  சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். 
3. ஆடையின் வண்ணமும் முக்கியம்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் பிடிக்கும். நீங்கள் உங்களுடைய தோற்றம், உடல் நிறம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எந்தவிதமான ஆடையை, என்ன வண்ணத்தில்  அணிந்தால் பிறரைக் கவர்ந்திழுக்க முடியும் என்று சிந்தித்து அதற்கேற்ற வண்ணத்தில் ஆடைகளை அணியுங்கள்.  நீங்கள் என்னவிதமாகப் பிறரால் புரிந்து கொள்ளப் பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ... அந்தப் புரிதலை நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, அதன் வண்ணம் உங்களைப் பார்ப்பவருக்குத்  தர வேண்டும்.
4. குரலின் தொனியை  மாற்றுங்கள்!
நாம் பேசும் குரலின் தொனியும் நமக்கு வசீகரத்தைத் தரும். பெண்களாக இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் குரலில் பேசும் ஆடவரையே அதிகம் பிடிக்கும். ஆனால், ஆடவரோ இதற்கு நேர் மாறாக இருப்பர். மென்மையாகவும், அதேநேரத்தில் இதயத்தை தொடும் வகையிலும் வசீகரமானதாகவும் இருக்கும் குரலுக்கு சொந்தக்காரராக திகழும் பெண்களையே தோழியாகவோ, வாழ்க்கைத் துணையாகவோ ஆடவர் தேர்வு செய்வர்.  எனவே உங்களுடைய  குரலின் தொனியை  மாற்றுங்கள்!
5. நகைச்சுவை அவசியம்!
மிகவும் இறுக்கமான சூழலில், அதிகமான மன அழுத்தம் உள்ளநிலையில் அந்தச் சூழலை எளிதில் மாற்றும் தன்மை நகைச்சுவைக்கு உண்டு. நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை எளிதில் கடக்க நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள ஒருவரையே அனைவரும் விரும்புகின்றனர். எனவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர் பிறருடன் பழகுவதும் எளிது. தனது செயல்களை எந்தச் சிரமம் இன்றி செய்ய இந்த நகைச்சுவை உணர்வு பயன்படும்.
- வீ.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com