பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்!

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடும்,  சிறப்பு சார்பியல் கோட்பாடும், சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவை.
பொது சார்பியல் கோட்பாட்டை இந்தியாவில் வளர்த்தவர்!

ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடும்,  சிறப்பு சார்பியல் கோட்பாடும், சென்ற நூற்றாண்டில் அறிவியல் உலகில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டவை. அண்டவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான கருதுகோள்கள் அவை. அவற்றில் பொது சார்பியல் கோட்பாட்டின் இந்தியப் பிரதிநிதி போலவே இயங்கினார்,  இங்குள்ள கணிதப் பேராசிரியர் ஒருவர். அது மட்டுமல்ல;  பொது சார்பியல் கோட்பாட்டின் (General  Theory of Relativity)  சிக்கலான சமன்பாடுகளை விடுவிப்பதற்கான புதிய வழிமுறைகைளையும் அவர் உருவாக்கினார். அவர், பேராசிரியர் பிரஹலாத் சுனிலால் வைத்யா. சுருக்கமாக பி.சி.வைத்யா என்று அழைக்கப்படுகிறார்.

பி.சி. வைத்யாவின் கண்டுபிடிப்பு,  "வைத்யா மெட்ரிக்' என்று அவர் பெயரிலேயே உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. கணிதப் பேராசிரியர், கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி, கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி எனப் பன்முகங்களைக் கொண்டு, மனித சக்தியின் எல்லையற்ற தன்மைக்கு நிரூபணமாக விளங்கியவர் அவர்.

குஜராத் மாநிலத்தின் ஜுனாகாட் மாவட்டத்தில், ஷாபூரில் 1918, மே 23-இல் பிரஹலாத் சுனிலால் வைத்யா பிறந்தார். பவநகரில் ஆரம்பக்கல்வி கற்ற பின், மும்பை யூசுப் இஸ்மாயில் கல்லூரியில் கல்லூரி புதுமுக வகுப்பை முடித்தார். மும்பையில் இருந்த ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணிதம் மற்றும் இயற்பியலில் பி.எஸ்சி. பட்டம் பெற்றார்.  அங்கேயே, பயன்பாட்டு கணிதத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார்.

பிரபல விண்வெளி இயற்பியல் விஞ்ஞானியான ஜெயந்த் நார்லிக்கரின் தந்தை வி.வி.நார்லிக்கர் அப்போது காசி ஹிந்து பலகலைக்கழகத்தில் பொது சார்பியல் கோட்பாட்டுத் துறையில் பேராசியராகப் பணிபுரிந்து வந்தார்.  அங்கு நார்லிக்கருடன் இணைந்து பத்து மாதங்கள் தீவிரமான ஆய்வுகளில் வைத்யா ஈடுபட்டார். 

அப்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அப்போது மகாத்மா காந்தி தொடங்கி இருந்தார்.   அப்போதுதான், வெளிநேர வடிவியல் (SpaceTime Geomtery)  என்ற கோட்பாட்டு இயற்பியல் சிந்தனை அவரது மூளையில் மின்னலாகப் பளிச்சிட்டது. அதை தொடர்ந்து ஆராய்ந்த அவர், ஒரு புதிய கருதுகோளை உருவாக்கினார். அதுவே பின்னாளில் "வைத்யா மெட்ரிக்' (Vaidya Metric) என்று புகழ்பெற்ற கோட்பாடாகும். 

அதன் பிறகு சூரத், ராஜ்கோட், மும்பை ஆகிய இடங்களில் பல கல்வி நிறுவனங்களில் 1948 வரை கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1947-48-இல் சில மாதங்கள் மும்பையிலுள்ள டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.   

1948 முதல் 1971 வரை, வல்லப நகரிலுள்ள வி.பி.கல்லூரி, அகமதாபாத்திலுள்ள குஜராத் கல்லூரி, விசா நகரிலுள்ள எம்.என்.கல்லூரி, 
குஜராத் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பிரிவு ஆகியவற்றில் வைத்யா கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இதனிடையே, 1949-இல் கணிதத்தில் பிஹெச்.டி. பட்டம் பெற்றார்.

அப்போது மும்பை பல்கலைக்கழகத்தின் ஸ்பிரிங்கர் ஆராய்ச்சி உதவித்தொகை வைத்யாவுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனது கண்டுபிடிப்பான "வைத்யா மெட்ரிக்' அடிப்படையில் ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து அமெரிக்க விஞ்ஞானி ஓபன் ஹீமருக்கு அனுப்பி வைத்தார். அதைப் பாராட்டிய அவர் அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகைக்கு அதை அனுப்பி வைத்தார். அந்த ஆய்வுக் கட்டுரை 1951-இல் வெளியானது. அப்போதே உலக அளவில் அது பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

ஈர்ப்பு விசை தொடர்பான ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் சிக்கலான சமன்பாடுகளுக்கு அதில் நிறைவான தீர்வு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னரே பலர் இந்தத் திசையில் பணிபுரிந்திருந்தாலும், வைத்யாவின் புதிய அணுகுமுறை மாறுபட்டதாக இருந்தது.

ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளுக்கு கணிதம், ரிமேனியன் வடிவியல் ஆகியவற்றால் தீர்வு காணலாம். ஏற்கனவே "ஸ்க்வார்னஸ்ட் சொல்யூசன்ஸ்' இத்துறையில் இருந்தது. கோள வடிவிலான விண்மீன்களின் வடிவியலை அது விளக்கியது. ஆனால் அந்த முறை, விண்மீன்களின் வெளிப்புறத்தை வெற்றிடமாகக் கருதியது.

இந்நிலையில், விண்மீன்களின் வெளிவட்டாரக் கதிர்வீச்சுக்கும் ஈர்ப்பு விசைக்கும் தொடர்புண்டு என்றார் வைத்யா. விண்மீன்களின் கதிர்வீச்சுக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஈர்ப்புவிசை உண்டு என்றார் அவர். அதை நிரூபிக்கும் விதமாக அவர் தனது  "வைத்யா மெட்ரிக்' கருதுகோளைக் கொண்டு, ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டார். அதை விஞ்ஞான உலகம் ஏற்றது. அன்று முதல் இன்று வரை, பொது சார்பியல் கோட்பாடு குறித்த ஆராய்ச்சிகளின் அடித்தளமாக வைத்யாவின் கருதுகோள் விளங்கி வருகிறது. அதனால் அவர் உலக அளவில் பிரபலமானார்.

வைத்யா சிறந்த எழுத்தாளரும் ஆவார்.  தனது கல்வி அனுபவங்களை  "சாக்கட்டியும் துடைப்பானும்' என்ற தலைப்பில் (Chalk and Duster) அவர் எழுதியிருக்கிறார். ஓர் ஆசிரியர் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதல்கள் பல அதில் உள்ளன.

கணிதத்தைப் பிரபலப்படுத்தும் நோக்கில் அவர் 1960/களில் துவக்கிய "சுகணிதம்' என்ற கணிதவியல் சஞ்சிகை, பல்லாயிரம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் மீது ஈர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்திலிருந்து வெளிவரும் சர்வதேச அறிவியல் சஞ்சிகையான ‘General Relativity and Gravitation’ இதழின் நிறுவன உறுப்பினராக வைத்யா இயங்கியுள்ளார்.

"அகில பிரமாண்டம், தசாப்த முறை-ஏன்? தாத்தாவின் அறிவியல் கதைகள், எது நவீன கணிதம்? கணித தரிசனம்' ஆகிய நூல்களை குஜராத்தி மொழியில் வைத்யா எழுதியுள்ளார்.  தனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை  "அமெரிக்காவும் நானும்' என்ற தலைப்பில் நூலாக அவர் வெளியிட்டார். 30-க்கு மேற்பட்ட சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளையும் வைத்யா எழுதியுள்ளார்.

அவரது பெயரில் அமைந்த பொது சார்பியல் கோட்பாட்டுக் கருதுகோள், உலக விஞ்ஞானிகளை இன்றும் வழிநடத்துகிறது. 
- வ.மு.முரளி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com