சர்.சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்!

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் (1888- 1970), இந்தியாவில் அடிப்படை அறிவியல் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். அவரது அடியொற்றிப் பணியாற்றிய
சர்.சி.வி.ராமன் பரம்பரையை வளர்த்தவர்!

நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சர் சி.வி.ராமன் (1888- 1970), இந்தியாவில் அடிப்படை அறிவியல் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருந்தவர். அவரது அடியொற்றிப் பணியாற்றிய விஞ்ஞானிகள் தலைமுறை அப்போது உருவானது. வெங்கட்ராமனின் மறைவை அடுத்து ஒரு வெற்றிடம் உருவானபோது, அந்த வெற்றிடத்தை நிரப்புபவராக அமைந்தார், அவரது மருமகனும், நேரடி சீடருமான  எஸ்.ராமசேஷன்.  அவரும் சர் சி.வி. ராமனைப் போலவே ஒளியியல் விஞ்ஞானி.

ராமன் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் அகாதெமி, பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், நிகழ் அறிவியல் சங்கம் ஆகியவற்றில் ராமன் வகித்துவந்த இடத்தை பூர்த்தி செய்ததுடன், அந்த நிறுவனங்களுக்கு புது மெருகூட்டியவர் ராமசேஷன். அது மட்டுமல்ல, ராமனின் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இரு தொகுதிகளாகத் தொகுத்து வழங்கியவரும் அவர்தான். ராமனின் சுயசரிதையையும், அவருடன் இணைந்து ராமசேஷன் எழுதியுள்ளார்.

சர்.சி.வெங்கட்ராமனின் சகோதரி சீதாலட்சுமிக்கும், சிவராமகிருஷ்ணனுக்கும், கொல்கத்தாவில் 1923, அக். 10-இல் பிறந்தார் ராமசேஷன். அவரது பள்ளிக் கல்வி நாகபுரியில் கழிந்தது. நாகபுரி பல்கலைக்கழகத்தில் பயின்று பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டத்தையும் (1943), எம்.எஸ்சி. பட்டத்தையும் (1945) அவர் பெற்றார்.
அடுத்து பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஆய்வு மாணவராக 1948-இல் இணைந்தார். அங்கு தனது தாய்மாமா  வெங்கட்ராமனின் நேரடி வழிகாட்டலில் ஒளியியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1949-இல் டி.எஸ்சி. பட் ட ம் பெற்றார்.

படிப்பை முடித்தவுடன், 1949-இல் அங்கேயே விரிவுரையாளராக இணைந்த அவர், 1953-இல் உதவிப் பேராசிரியராகப் பணி உயர்வு பெற்றார்.  1962-இல் பேராசிரியரானார்;  இயற்பியல் துறையின் தலைவராகவும் அவர் உயர்ந்தார். 1966 வரை அங்கு அவர் பணியாற்றினார். இப்பணியின்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுடன், புதிய ஆய்வுகளிலும் அவர் தீவிரமாக ஈடுப ட்டார். படிகவியல் (Cryste llography) அவருக்கு மிகவும் விருப்பமான துறையாக விளங்கியது. அவரது தீவிரமான முயற்சியால் இந்திய அறிவியல் கழகத்தில் எக்ஸ்-கதிர் படிகவியல் துறை உருவானது.

இதனிடையே சென்னை ஐ.ஐ.டி.யில் 1962 முதல் 1966 வரை இயற்பியல் பேராசிரியராகவும் அவர் பணியாற்றினார். அப்போது அங்கு இயற்பியல் துறை துவங்கவும்  ராமசேஷன் காரணமாக இருந்தார். அதன் துறைத் தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார்.

1966-இல் தேசிய  விண்வெளி ஆய்வகத்தில் (NAL) விஞ்ஞானியாக அவர் இணைந்தார். அங்கு 1979 வரை பல பொறுப்புகளை வகித்த அவர், நாட்டின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட் டாவுக்கான அச்சலைவு ஒடுக்கி (Nutation Damper) சாதனத்தை வடிவமைத்ததுடன்  தயாரித்தும் அளித்தார் (1975).

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் பொருள் அறிவியல் பிரிவு, ராமசேஷனின் முயற்சியால் நிறுவப்பட்டது. விண்வெளி ஆய்வு தொடர்பான சாதனங்களைத் தயாரிப்பதற்கான பொருள்கள் குறித்த ஆராய்ச் சி களையும் அவர் வளர்த்தார்.

அது மட்டுமல்ல, இருதய வால்வுகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யப் பொருத்தப்படும் செயற்கைக் கருவிக்கான பொருட்களை யும் அவர் உருவாக்கி அளித்தார்.  உப்பு நீக்கத்துக்கான நுண்துளை எஃப்.ஆர்.பி. குழாய்களையும் அவர் வடிவமைத்தார்.

1979-இல் மீண்டும் இந்திய அறிவியல் கழகத்துக்குத் திரும்பிய அவர், அதன் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றார். அந்நிறுவனத்தின் இயக்குநராக 1981-இல் பொறுப்பேற்ற அவர், 1984 வரை அந்நிறுவனத்தை வழிநடத்தினார். எந்த நிறுவனத்தில் ஆராய்ச்சிப்  படிப்பை முடித்தாரோ, அங்கேயே  நிறுவன இயக்குநராக உயர்வது சாதாரணமானதல்ல. ராமசேஷனின் அர்ப்பணிப்பான ஆராய்ச்சிகளும் கடின உழைப்புமே அவரை அந்தச் சிகரத்துக்குக்  கொண்டுசென்றன.

1983-இல் இந்திய அறிவியல் அகாதெமியின் தலைவராகப் பொறுப்பேற்ற அவர் 1985 வரை அப்பொறுப்பில் இருந்தார். அப்போது, நாட்டின் முதலாவது உயரழுத்தப் பொருள் ஆய்வகத்தையும், முதல் பொருள் அறிவியல் ஆய்வகத்தையும் அங்கு அவர் அமைத்தார். 

1985-இல் பணி ஓய்வு பெற்ற பிறகும், ராமன் ஆராய்ச்சிக் கழகத்திலும், இந்திய அறிவியல் கழகத்திலும் கெளரவப் பேராசிரியராக வாழ்வின் இறுதி வரை ராமசேஷன் பணியாற்றினார்.

விஞ்ஞானிகள் ஜி.என்.ராமசந்திரன் (1922- 2001), சதீஷ் தவான் (1920- 2002) ஆகியோர், ராமசேஷனின் நெருங்கிய சகாக்கள். மூவரும் தனி ஆளுமைகளாக இருந்தபோதும், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் 1970 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் ஒன்றாகப் பணியாற்றினர். அதிலும், ராமசந்திரன், ராமசேஷனின் ஒளியியல், படிகவியல் ஆராய்ச்சிகளில் பெரும் பங்களித்தார். சதீஷ் தவானுடன் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய துறைகள் உருவாக ராமசேஷன் காரணமாக இருந்தார். 

ராமன் மறைவுக்குப் பிறகு, அவரால் வழிநடத்தப்பட்ட ராமன் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் கழகம், இந்திய அறிவியல் அகாதெமி ஆகிய மூன்று நிறுவனங்களும் தலைமை இழந்தன. அப்போது, ராமசேஷன் அந்நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக் குழுக்களிலும், நிர்வாகத்திலும் இடம்பெற்று, ராமனின் குறிக்கோள்கள் நிறைவேற உழைத்தார். அந்த வகையில் ராமனின் குடும்ப உறுப்பினராக மட்டுமல்லாது, அவரது விஞ்ஞான ஆராய்ச்சிப் பரம்பரைக்குப் பொறுப்பானவராகவும் அவர் விளங்கினார். ராமன் ஆராய்ச்சிக் கழகத்தில் 1984 முதல் 2003 வரை மதிப்புறு பேராசிரியராக அவர் செயல்பட்டார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1966), வாஸ்விக் விருது (1980), இந்திய தேசிய அறிவியல் அகாதெமியின் ஆரியபட்டா பதக்கம் (1985), இந்திய அரசின் பத்மபூஷண் ஆகிய விருதுகள் அவரை அலங்கரித்தன. 

ராமசேஷன் அடிப்படை அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர்; ஒளியியலிலும் படிகவியலிலும் பல முன்னோடி ஆய்வுகளை அவர் நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமல்ல, அறிவியல் ஆய்வுகளுக்கான கட்டமைப்புகளையும் நிறுவனங்களையும் உருவாக்கியவர். ஆய்வுக் குழுக்கள், அறிவியல் அமைப்புகளை உருவாக்குவதில் அவர் நிபுணராக இருந்தார். பல அறிவியல் சஞ்சிகைகள் வெளிவரவும் அவர் வித்திட்டார். நாட்டில் அறிவியல் ஓர் இயக்கமாக பிரபலமடைய இந்தப் பணிகளும் காரணமாகின.

1932-ல் நிறுவப்பட்ட "கரன்ட் சயின்ஸ்' என்ற அறிவியல் சஞ்சிகை இந்திய விஞ்ஞானிகளை வெளிப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாகும்.  அந்தப் பத்திரிகை போதிய வருவாயின்றி, வாங்குவோரின்றி நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டபோது, அதன் நிர்வாகியாகப் பொறுப்பேற்று, அதை மீட்டெடுத்தார். இன்று அந்தப் பத்திரிகை வெற்றிகரமாக வெளிவருகிறது.

ராமசேஷன் அறிவியலை தீவிரமாகக் காதலித்தவர்.   தூய அறிவியல் முன்னேற்றத்துக்காக தன்னைக் கரைத்துக் கொண்டவர்.  2003, டிச. 29-இல் பெங்களூரில் அவர் மறைந்தபோது, பாரதம் மற்றொரு அறிவியல் தியாகியை இழந்தது.

1978-இல் இந்திய அறிவியல் கழகத்தில் ராமன் நினைவு சொற்பொழிவின்போது ராமசேஷன் கூறிய வாசகங்கள் இவை:
"சி.வி.ராமனைப் பொருத்த வரை, அறிவியல் செயல்பாடு என்பது ஓர் அகத்தேவையின் நிறைவேற்றம். அவரது அறிவியல் அணுகுமுறைகள் எளிமையும், ஊக்கமும், மிகுந்த ஆர்வமும் மிக்கதாக இருந்தன. அவருக்கு அறிவியல் என்பது சுதந்திரமான சிந்தனையாகவும் கடின உழைப்பை நாடும் துறையாகவும் இருந்தது. அது மட்டுமல்ல, அறிவியல் என்பது அவருக்கு தனிப்பட்ட சாகசமாகவும், ரசனைக்குரிய தொழிலாகவும், ஆனந்தத்துக்குரிய அனுபவமாகவும் இருந்தது.''

-இந்த வாசகங்கள், அவரது சீடர் ராமசேஷனுக்கும் பொருத்தமாக இருப்பதை உணர முடிகிறது.
- வ.மு.முரளி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com