இந்திய தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை!

அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் பணி நிமித்தமாக 1981-இல் புதுதில்லி வந்திருந்தார்.
இந்திய தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை!

அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த இந்திய விஞ்ஞானி ஒருவர் பணி நிமித்தமாக 1981-இல் புதுதில்லி வந்திருந்தார். சிகாகோவிலுள்ள தனது மனைவிக்குதொலைபேசியில் பேச அவர் முயன்றபோது தொடர்பு கிடைக்கவில்லை. அதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தொலைத்தொடர்புத் துறை நிபுணரான அவர்,அந்த நிலையை மாற்ற முடிவெடுத்தார்.

இந்திய தொலைத்தொடர்புத் துறையின் உடனடித் தேவைகள் குறித்த அறிக்கையை பிரதமருக்கு அவர் அனுப்பி வைத்தார். பிரதமர் இந்திரா காந்திக்கு அந்தஅறிக்கை பிடித்துப் போக, அந்த விஞ்ஞானியை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

சர்வதேசப் புகழ் பெற்ற அமெரிக்காவாழ் இந்தியரான அந்த விஞ்ஞானி சாம் பிட்ரோடா. உலக அளவிலும் இந்தியாவிலும் தொலைத்தொடர்புத் துறையில்
புரட்சிகரமான மாற்றங்களை நிகழ்த்தியவர் அவர்.

1984-இல் இந்தியா வந்த சாம் பிட்ரோடா, பிரதமர் இந்திரா காந்தியிடம் தொலைத்தொடர்புத் துறையை நவீனமயமாக்குவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களில் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டாலும், அடுத்து பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, சாம் பிட்ரோடாவின் திறமைமீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவர்கள் இருவரும் கைகோர்த்ததன் விளைவாக, இந்திய தொலைத்தொடர்புத் துறை நவீன மயமானது.

சாமானிய மக்களும் தொலைபேசி சேவையை உபயோகப்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கிய பிசிஓக்கள் (Public Call Offices- PCO) 1986-இல் சாம் பிட்ரோடா முயற்சியால் தொடங்கப்பட்டன. ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் சில நிமிடங்கள் தொலைபேசியில் பேச முடியும்என்ற மிகச் சாதாரண நிலையை உருவாக்கிய பிசிஓக்கள் தாம் இன்றைய அலைபேசி யுகத்துக்கு வித்திட்டவை.

நெடுந்தொலைவிலுள்ள பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் தொலைபேசி இணைப்புக்கு (STD/ ISD) பதிவு செய்து காத்திருந்த காலத்தை மாற்றியமைத்ததும்,பிட்ரோடாவின் டிஜிட்டல் மயமாக்கம் தான். அதனால்தான் அவர் இந்திய தொலைத்தொடர்பு புரட்சியின் தந்தை என்று வர்ணிக்கப்படுகிறார்.

1942, மே 4-இல், ஒடிஸா மாநிலத்தின் டிட்லகாரில் பிறந்தார் சாம் பிட்ரோடா. இயற்பெயர், சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா. அவரது குடும்பத்தினரின்
பூர்வீகம் குஜராத். மகாத்மா காந்தியின் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பிட்ரோடா குடும்பத்தினர், அவரையும் அவரது சகோதரரையும் கல்வி பயிலகுஜராத் அனுப்பி வைத்தனர்.

குஜராத்தின் வல்லப் வித்யாநகரில் பள்ளிக்கல்வியை முடித்த பிட்ரோடா, வதோதராவிலுள்ள மஹாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலிலும்மின்னணுவியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற பிட்ரோடா, சிகாகோவிலுள்ள இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் மின்பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்தவுடன் 1966-இல் அமெரிக்காவின் ஜெனரல் டெலிபோன் மற்றும் எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் (ஜிடிஇ) நிறுவனத்தில் பணியில் இணைந்தார்.
தொலைபேசிகளை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்ட அவர் பல முக்கியமான பயன்பாட்டுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

இல்லினாய்ஸில் செயல்பட்டுவந்த வெஸ்காம் ஸ்விட்சிங் என்ற நிறுவனத்தை பிட்ரோடா 1974-இல் வாங்கினார். அங்கு தொலைத்தொடர்பு முறையை
டிஜிட்டல் மயமாக்கும் கருவிகள் தயாரிக்கப்பட்டன. 580 டிஎஸ்எஸ் ஸ்விட்ச் கருவியை 4 ஆண்டுகள் உழைத்து பிட்ரோடா உருவாக்கினார் (1978). அது
அவருக்கு சர்வதேசப் புகழையும் நல்ல லாபத்தையும் அளித்தது.

விஸ்காமின் வளர்ச்சியால் ஈர்க்கப்பட்ட ராக்வெல் இன்டர்நேஷனல் அந்நிறுவனத்தை 1980-இல் வாங்கியது. அதன் துணைத் தலைவராக பிட்ரோடா
பொறுப்பேற்றார்.

இந்தியா வருகை:
சாம் பிட்ரோடா அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தனது மனைவி, இரு குழந்தைகளுடன் சிகாகோவில் வசித்து வந்தார். 1984-இல் பிரதமர் இந்திரா காந்தியின்அழைப்பை ஏற்று, அமெரிக்கக் குடியுரிமையை திருப்பி அளித்துவிட்டு இந்தியா வந்தார் சாம்.

இந்திய அரசு சார்பில் சி-டாட் (Center for Development of Telematics- C-DOT) என்ற தன்னாட்சி பெற்ற தொலைத்தொடர்பு ஆராய்ச்சிநிறுவனத்தை சாம் 1984-இல் நிறுவினார். அந்நிறுவனம் தொலைத்தொடர்புத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டது.

அடுத்து பிரதமரான ராஜீவ் காந்தியின் தொலைத்தொடர்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார். தவிர, குடிநீர், கல்வியறிவு, நோய்த்தடுப்பு, பால்பண்ணை,
எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் அபிவிருத்தித் திட்டப் பணிகளிலும் அவர் தலைமை ஏற்றார்.

இந்திய தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சி, அலைக்கற்றை ஒதுக்கீடுகள், தனியாருக்கு புதிய உரிமம் வழங்கல் உள்ளிட்ட பணிகளுக்காக, சாமின்
முயற்சியால் தொலைத்தொடர்பு ஆணையம் 1989-இல் அமைக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அவர் பொறுப்பேற்றார். அப்போது, இந்தியாவின்தொலைத்தொடர்புக் கொள்கைகளை அவர் வடிவமைத்தார். அவரது தொடர் முயற்சியால் தொலைபேசிக் கட்டணங்கள் குறைந்தன. தவிர தொலைபேசிவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகியது.

கண்டுபிடிப்புகள்:
1989-இல் இந்தியாவில் ஆட்சி மாறியதும், மீண்டும் அமெரிக்கா திரும்பினார் பிட்ராடோ. அங்கு தனது பழைய வர்த்தகத் தொடர்புகளைப் புதுப்பித்தார்.
அயோனிக்ஸ், எம்டிஐ, மார்டெக், சி-சாம் உள்ளிட்ட பல வெற்றிகரமான நிறுவனங்கள் அவரால் துவக்கப்பட்டன.

சாமின் பல கண்டுபிடிப்புகள் உலக அளவில் தொலைத்தொடர்புத் துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன. அவை தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்டகாப்புரிமைகளை அவர் பெற்றுள்ளார். அவற்றில் முக்கியமானது 1974-இல் அவர் கண்டுபிடித்த மின்னணு குறிப்பேடாகும் (Electronic Diary).

கணினியில் விளையாடும் புதிய சீட்டுக்கட்டு (Compucards) ஆட்டத்தை 1983-இல் பிட்ரோடா உருவாக்கினார். அவரது கண்டுபிடிப்புகளில் அதிகமாகப்
பயன்படுத்தப்படுவது மொபைல் போன் பணப் பரிமாற்ற சேவையாகும்.

2004-இல் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன், அரசு அமைத்த அறிவுசார் ஆணையத்துக்கு தலைமை தாங்குமாறு (2005- 2009) சாமுக்குஅழைப்பு விடுத்தார். அதையேற்று மீண்டும் இந்தியா வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கின் உள்கட்டமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான குழுவின்ஆலோசகராக 2009-இல் நியமிக்கப்பட்டார்.

தேசிய கண்டுபிடிப்பாளர் கூட்டமைப்பின் தலைவராகவும் (2010), ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் (2013) அவர்நியமிக்கப்பட்டார்.

1995-இல் சர்வதேச டெலிகாம் சங்கத்தின் வேர்ல்டுடெல் நிறுவனத்தின் தலைவராக சாம் பொறுப்பேற்றார். ஐ.நா. அகன்ற அலைவரிசை ஆணையத்தின்
ஆணையராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை மீட்டெடுக்கும் தன்னார்வ அமைப்பு (FRLHT- 1993), உலகளாவிய அறிவுசார் முயற்சி (GKI- 2009), இந்திய உணவு வங்கி வலைப்பின்னல் (IFBN- 2010), உலக மாற்றத்துக்கான மக்கள் (PGT- 2012), இந்தியாவுக்கான நடவடிக்கைக் குழு (AFI- 2012) ஆகிய அரசுசாரா சேவை
நிறுவனங்களையும் சாம் துவக்கினார்.

லால்பகதூர் சாஸ்திரி தேசிய சாதனையாளர் விருது (2000), டேட்டாகுவெஸ்ட் வாழ்நாள் சாதனையாளர் விருது (2002), உலக இளம் தலைவர்கள்நெட்ஒர்க்கின் சிறந்த தலைவர் விருது (2008), இந்திய அரசின் பத்மபூஷண் (2009), சர்வதேச டெலிகாம் சங்கத்தின் விருது (2011) உள்ளிட்ட பலவிருதுகளையும், 20-க்கு மேற்பட்ட கௌரவ முனைவர் பட்டங்களையும் சாம் பெற்றுள்ளார். சுயசரிதை உள்பட 7 நூல்களை அவர் எழுதியுள்ளார்.

கண்டுபிடிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், சிறந்த நிர்வாகி, சமூக சிந்தனையாளர், கொள்கை வடிவமைப்பாளர் எனப் பல முகங்களை உடைய சாம் பிட்ரோடா,தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். டெலிகாம் அறிவுஜீவியாக உலக அரங்கில் அவர் கொண்டாடப்படுகிறார்.

-வ.மு. முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com