கண்டுபிடிப்பாளர்... தொழில்முனைவோர்!

கண்டுபிடிப்பாளர்... தொழில்முனைவோர்!

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.    ஒரு கொசு ஒரு பருவத்தில் 300 முட்டைகள் வரை இடுமாம்.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.    ஒரு கொசு ஒரு பருவத்தில் 300 முட்டைகள் வரை இடுமாம்.  அதன் ஆயுள் காலத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு, ஆயிரக்கணக்கான கொசுக்களை உற்பத்தி செய்துவிடுமாம்.  அதனால்தான் சிரட்டையில் சிறிய அளவில் தண்ணீர் இருந்தாலே அதில் கொசு உற்பத்தியாகிவிடுகிறது. இப்போது போதாக்குறைக்கு பருவ மழை  பெய்து,  எல்லா இடங்களையும் வெள்ளக் காடாக்கிவிட்டது. 

கொசுக்கள் அதிகமாக அதிகமாக கொசுவிரட்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்குத்தான் வேலை அதிகம். தொலைக்காட்சிகளில் கொசுவிரட்டிகளுக்கு ஏகப்பட்ட விளம்பரங்கள்.

வேதிப் பொருள்களினால் தயாரிக்கப்பட்ட இந்த  கொசுவிரட்டிகளினால்,   ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உட்பட பல நோய்கள் ஏற்படுகின்றன.  அவற்றில் இருந்து வரும் கண்ணுக்குத் தெரியும், தெரியாத புகைகள், வாசனைகள் காற்றில் கலந்து காற்றையும் மாசாக்குகின்றன.  

கேரளாவின்  கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காலகெட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மேத்யூஸ் கே மேத்யூஸ். அவர்  சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத கொசு ஒழிக்கும் கருவி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.    அந்த கருவியை பெரும் அளவிற்கு உற்பத்தி செய்து விற்பனை செய்து  வருகிறார்.  கோட்டயத்துக்கு அருகில் உள்ள கஞ்ஜிராப்பள்ளி என்ற ஊரில் உள்ள Kine Technologies & Research, India என்ற நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னராக  இருக்கும் அவர்,  இந்தக் கருவியை முதன்முதலில் உருவாக்கியதோ 2000 இல்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மேத்யூஸ். விளைநிலங்களில் வந்து விளைந்த பயிர்களைச் சேதம் செய்யும் பறவைகளை விரட்ட,  அவர் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஒரு கருவியை    உருவாக்கினார்.  அம்பில் பட்டாசு வெடியை இணைத்து அதை பறவைகள் இருக்கும் பகுதியில் எய்தி விடுவார். அந்த அம்பு பறவை இருக்கும் இடத்துக்கு வந்ததும்  பட்டாசு வெடிக்கும். சத்தம் கேட்டு பறவைகள் மிரண்டு பறந்துவிடும்.  இப்படி சிறுவயதிலேயே தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகளில் மேத்யூஸுக்கு ஆர்வம் இருந்தது. 

அவர் உருவாக்கியிருக்கும் கொசு ஒழிக்கும் கருவியும் இப்படி  உருவாக்கப்பட்டதுதான்.  அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். விடுதி அறையில்  கொசு அதிகம்.  அவரைக் கடித்துவிட்டு, பறந்து செல்லும் கொசுக்கள் கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடித் தகடில் போய் ஒட்டிக் கொள்வதைப் பார்த்தார். அதாவது கண்ணாடித் தகடு தொடர்ந்து பறந்து செல்வதைத் தடுக்கும் என்று அறியாத கொசுக்கள்,  அறையை விட்டு வெளியே செல்லும் எண்ணத்துடன் கண்ணாடித் தகட்டில் முட்டி மோதிக்  கிடப்பதைத்  தெரிந்து கொண்டார்.  

அடுத்து மிக அதிக எண்ணிக்கையிலான கொசுக்கள் செப்டிக் டேங்கில்  உள்ள சிறிய இடைவெளிக்குள் புகுந்து செப்டிங்கிற்குள் போவதையும்  அவர் கவனித்தார்.  அதுபோலவே சிறிது சூடான பகுதியில்  கொசுக்கள் இறந்து கிடப்பதையும் பார்த்தார். இந்த மூன்று நிகழ்வுகளில் இருந்தும் அவர் உருவாக்கியதுதான் தற்போதைய Hawker என்ற கொசு ஒழிக்கும் கருவி. 

இதற்கு முன்பு கொசுவை ஒழிப்பதற்கு  வேதிப் பொருள்களைப் பயன்படுத்தினார்கள். குளிர வைக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடைப் பயன்படுத்தினார்கள். LED விளக்கைப் பயன்படுத்தி கொசுவை ஈர்த்து, மின்சார அதிர்ச்சியால் கொசுவைச் சாகடித்தார்கள்.  கொசு ஒழிக்கும் புகைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலும் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல,  அவற்றுக்கு மின்சாரமும் தேவைப்படுகிறது.  

பல்வேறு காரணங்களால் கொசுக்களின் எண்ணிக்கை இப்போது ஒவ்வோராண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.   அவற்றை ஒழிக்க பழைய வழிகளில்  தொடர்ந்து முயற்சி செய்தால், சுற்றுச்சூழலில்  ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகமாகிவிடும். அப்புறம் அவற்றைச் சரி செய்யவே போராட வேண்டியிருக்கும். 

மேத்யூஸ் உருவாக்கியுள்ள இந்தக் கருவியை செப்டிக் டேங்கில் உள்ள வாயுவை வெளியேற்றும் குழாயின் நுனியில் பொருத்திவிட்டால்,  கொசுக்கள் இந்த கருவிக்குள் அலையலையாகப் புகுந்துவிடும்.  அவ்வாறு புகுந்த கொசுக்கள், வெளியேற முடியாதபடி இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படி உள்ளே  சென்ற கொசுக்கள்  கருவியில் உள்ள வெப்பத்தின் காரணமாக இறந்துவிடும்.  இந்தக் கருவிக்குள்  சூரிய ஒளியால்தான் வெப்பம் ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் சூரிய ஒளி இந்தக் கருவியில் பட்டால் போதும்.  தேவையான அளவு வெப்பம் ஏற்பட்டுவிடும்.  இதனால்  எந்தவிதமான சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை.  மின்சாரமும் தேவையில்லை.

இந்தக் கருவியை செப்டிங்கில் மட்டுமல்ல, சாக்கடைத் தொட்டிகள்,   எரிவாயு தொட்டிகள்,  நீர்த்தொட்டிகள் போன்றவற்றிலும் பொருத்தலாம். 

மேத்யூஸ் இப்போது இந்த கொசு ஒழிக்கும் கருவியை   தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு  தயாரித்து அளித்து வருகிறார்.  நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளையும் அணுகத்  திட்டமிட்டிருக்கிறார்.  

இது தவிர, படுக்கையறைக்குள் பொருத்தும்விதமாக இன்னொரு  கொசு ஒழிப்புக் கருவியையும் மேத்யூஸ் உருவாக்கியிருக்கிறார் (Sleeper trap for mosquito destruction). அதற்கு 2007 ஆம் ஆண்டில் காப்புரிமையும் பெற்றிருக்கிறார்.  

இதில் கொசுவை அழிக்க ஃப்ளோரசண்ட் பல்புகளை எரியவிட்டு அதிலிருந்து வரும் வெப்பத்தைப் பயன்படுத்துகிறார். 
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com