கனடாவில்... கல்விச் சிகரம் தொட்ட இந்திய இளைஞர்!

கனடாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சியில்  சாதனை புரிந்ததற்காக  அந்த நாட்டின் மிக உயரிய, கெüரவமிக்க கவர்னர் ஜெனரல் தங்கப்பதக்கத்தை  பெற்றுள்ளார் ஓர் இந்தியர்.  அவர்  லக்ஷ்மி வராக ஐயர்.
கனடாவில்... கல்விச் சிகரம் தொட்ட இந்திய இளைஞர்!

கனடாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சியில்  சாதனை புரிந்ததற்காக  அந்த நாட்டின் மிக உயரிய, கெüரவமிக்க கவர்னர் ஜெனரல் தங்கப்பதக்கத்தை  பெற்றுள்ளார் ஓர் இந்தியர்.  அவர்  லக்ஷ்மி வராக ஐயர்.

1873 - இல் ஐக்கிய கனடாவின் 3 ஆவது கவர்னர் ஜெனரலாக இருந்த Lord Dufferin என்பவரால், கல்விச் சாதனை புரிபவர்களை ஊக்குவிப்பதற்காக இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. கனடாவில் கல்வியில்  சாதனை புரியும் மாணவர்களுக்கான கெளரவமிக்க மிக உயரிய விருதாக இது உள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை லக்ஷ்மி வராக ஐயர் பெற்றுள்ளார். 

பெங்களூருவைச் சேர்ந்த கிருஷ்ண ஐயரின் மகனான இவர், தற்போது கனடாவின் ஆன்டாரியோ மாகாணத்தில் உள்ள "மேக்னா இன்டர்நேஷனல்' என்ற நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் சிறப்புப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர். கிருஷ்ண ஐயரின் தந்தை இங்கிருந்து பெங்களூரு சென்று குடியேறியதில் இருந்து பெங்களூருவில் உள்ளனர். 

இளமையிலிருந்தே அதிக மதிப்பெண்கள் எடுப்பது லக்ஷ்மி வராக ஐயரின் இயல்பாகவே இருந்திருக்கிறது.  அவர்  தனது தொடக்கக் கல்வி முதல்  PUC (Pre University Course) வரை பெங்களூருவில் உள்ள குமரன்ஸ் பப்ளிக் ஸ்கூலில் படித்துள்ளார். அதில்  அவர் பெற்ற மதிப்பெண்கள்  96 சதவீதம்.  அதன் பிறகு,

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் 2005 முதல் 2009 வரை பி.டெக். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் பயின்றார். அப்போது, வராக ஐயரின் திறமையைக் கண்ட பல்கலைக்கழகம் அவரை களப் பயிற்சிக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது.

அங்கு Infineon Technologies என்ற conductor உற்பத்தி செய்யும் சர்வதேச நிறுவனத் தயாரிப்புகளில் இவர் ஆற்றிய பங்கு இன்றும் போற்றக்கூடியதாக உள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக். முடித்த அவர்,  கனடாவில் உள்ள வின்ட்ஸர் பல்கலைக்கழகத்தில் (windsor University) எலக்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் MASc  (Master of Applied Science)  கோர்ஸில் சேர்ந்தார். இது கிட்டத்தட்ட ஆராய்ச்சி கல்வியாகும். அதைத் தொடர்ந்து, 2012 இல் இதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியைத் தொடர்ந்த அவர், ஹைபிரிட் ட்ரைவ் ட்ரைன் என்ற பிரிவில் - எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் - தனது பி.எச்டியை 2016-இல் வெற்றிகரமாக முடித்தார். அதில் யாருமே எடுக்காத அளவுக்கு 94 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 

இதற்கிடையே அவர், 2012-இல் "யுனிவர்சிட்டி ஆப் வின்ட்ஸர் அவுட்ஸ்டேண்டிங் கிராஜுவேட் ஸ்டூடண்ட் அவார்ட் பார் எக்ஸலன்ஸ் இன் ரிசர்ச்  அண்ட் கிரியேட்டிவ் ஆக்டிவிட்டி' என்ற விருதைப் பெற்றார். மேலும், தன்னுடைய ஆராய்ச்சிக்காக 6 விதமான கல்வி உதவித்தொகைகளைப் பெற்றுள்ளதோடு, ஆராய்ச்சி தொடர்பான 5  விருதுகளையும் பெற்றுள்ளார். அதில் மிகவும் குறிப்பிடவேண்டியது, "ரிசர்ச் ஸ்காலர்சிப் ஃபிரம் த கனடா ரிசர்ச் சேர் புரக்கிராம் இன் எல்க்ட்ரிஃபைடு ட்ரான்ஸ்போர்ட்டேஷன் சிஸ்டம்' என்பது.

மேலும் இவர் தனது ஆராய்ச்சியின் போது எழுதிய 19 ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல், சுவிட்ஸர்லாந்து, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் மாநாடுகளில் லக்ஷ்மி வராக ஐயரின் 23 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் குறித்து வின்ட்ஸர் பல்கலைக்கழக எல்க்ட்ரிக்கல் அண்ட் கம்ப்யூட்டிங் இன்ஜினியரிங் துறையின் விருதுக்கான பரிந்துரையில், லக்ஷ்மி வராக ஐயரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வின்ட்ஸர் பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை எந்த மாணவரும் செய்யாதது எனக் குறிப்பிட்டுள்ளது.

லக்ஷ்மி வராக ஐயரின் ஆராய்ச்சிகள் அனைத்தும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலம் இயங்கும் மேம்படுத்தப்பட்ட மின்சார மோட்டார்களை உருவாக்கி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது என்பதாக உள்ளது. இவரது ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் இந்தத் துறையில் தொடர்ந்து பயிலும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் என வின்ட்ஸர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கல்விச் சாதனைக்காக கனடா அரசின் கவர்னர் ஜெனரல் விருதுக்காக கடந்த 2016- இல் லக்ஷ்மி வராக ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி (2017) வின்ட்ஸர் பல்கலைக்கழகத்தின் செயின்ட் டேனிஸ் மையத்தில் நடைபெற்ற 108 ஆவது பட்டமளிப்பு விழாவில் லக்ஷ்மி வராக ஐயருக்கு கனடா அரசின் மிகச் சிறந்த விருதான கவர்னர் ஜெனரல் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. 

இந்த விருது குறித்து அவர் கூறுகையில், ""கனடாவின் ஆராய்ச்சி இருக்கை திட்டத்தின் முனைவர் நாராயண் கார், முனைவர் கெüசிக் முகர்ஜி, வின்ட்ஸர் பல்கலைக்கழகம் ஆகியோரின் தொடர்ச்சியான வழிகாட்டுதலால் இந்த கல்விச் சாதனையை நான் எட்ட முடிந்தது. 

தற்போது புதுப்பிக்கத்தக்க மின் சக்தியைப் பயன்படுத்தும் வகையில், மின்சார வாகனப் போக்குவரத்தில் புதியனவற்றைப் படைப்பது, குறைந்த மின்சக்தியில் நெடுந்தொலைவு செல்லும் மோட்டார் வாகனங்களை உருவாக்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். அதுதொடர்பான எனது 2 கண்டுபிடிப்புகளுக்கு உரிமை கோரி பதிவுசெய்துள்ளேன். இந்தியா திரும்பி எலக்ட்ரிக் கார் போக்குவரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். அதற்கான காலம் விரைவில் அமையும். என்னுடைய கல்வியும், கண்டுபிடிப்புகளும் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்''    என்றார் லக்ஷ்மி வராக ஐயர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com