விடுமுறை கொடுங்கள்... ஸ்மார்ட்போன்களுக்கு!

தற்போது ஸ்மார்ட்போன் கையில் இல்லாத இளைஞர்களே இல்லை எனலாம். நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஸ்மார்ட்போன் சார்ந்த சமூக வலைதளங்கள், தகவல் தொடர்புகளிலேயே பின்னிப் பிணைந்தே உள்ளது.
விடுமுறை கொடுங்கள்... ஸ்மார்ட்போன்களுக்கு!

தற்போது ஸ்மார்ட்போன் கையில் இல்லாத இளைஞர்களே இல்லை எனலாம். நம்மைச் சுற்றியுள்ள உலகமும் ஸ்மார்ட்போன் சார்ந்த சமூக வலைதளங்கள், தகவல் தொடர்புகளிலேயே பின்னிப் பிணைந்தே உள்ளது. இதனால் கால மாற்றத்துக்கு ஏற்றாற்போல் அதனுடன் சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்களிடம் இருந்து தங்களை மீட்க முடியாத பல இளைஞர்கள் இன்றைக்கு உளவியல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். காரணம், தங்கள் அன்றாடப் பணிகள், கடமைகள், அடைய வேண்டிய இலக்கு. இவை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களே ஆக்கிரமித்துள்ளன.
ஆனால் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகாமல், அதனை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.
ஸ்மார்ட்போனை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், எந்த நேரம் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட வேண்டும். உதாரணமாக, மாலை 6 முதல் 7 மணி வரை, ஒரு மணி நேரம் பயன்படுத்தலாம் என்று திட்டமிட்டால், அதற்கு மேலும் நேரம் செலவழிக்காமல் இருக்க ஓர்அலாரம் வைத்துக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கான நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம். வேறு பணிகளில் மும்முரமாக இருக்கும்போது நம் கவனத்தைத் திசை திரும்பும் வகையில் வரும் எஸ்.எம்.எஸ்., இ-மெயில், வாட்ஸ்-அப் தகவல் வந்ததற்கான அறிவிக்கை ஒலிகளை "சைலன்ட்'டில் போடலாம். இதனால் இடையூறு இன்றி வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியும்.
அத்தியாவசிய, அவசரமான பயன்பாட்டுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலைக்கு வர வேண்டும். தேவை இல்லாமல் "ஹேய்! வாட்ஸ் அப்', "ஹவ் இஸ் லைஃப் மச்சான்!' என்று பக்கத்து தெருவில் இருக்கும் நண்பனுக்கு தகவல் அனுப்பி நமது நேரத்தையும், மற்றவரின் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம்.
அவ்வப்போது ஸ்மார்ட்போனுக்கு விடுமுறை அளியுங்கள். ஸ்மார்ட்போனை அணைத்துவிட்டு, அருகிலுள்ள இடங்களுக்கு சுற்றுலாச் செல்லுங்கள். உறவினர்கள், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுங்கள். இதனால் அவர்களும் அந்தச் சமயத்தில் தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள். தொலை தூரத்தில் இருப்பவர்களை சமூக வலைதளங்களில் சந்தியுங்கள்; அருகிலிருக்கும் சொந்தங்களை, நண்பர்களை நேரில் சந்திப்பதை வழக்கப்படுத்துங்கள்.
"லைஃப் ஒரே போர்' என்று அன்றாட வாழ்க்கையில் சலிப்புடன் இருப்பதுதான் ஸ்மார்ட்போன்களின் அடிமையாவதற்கு முக்கியக் காரணம். தனியாக இருப்போர் இதன் காரணமாகவே அதிக நேரத்தை ஸ்மார்ட்போன்களில் தொலைக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, பழக்கவழக்கங்களை மாற்றி, பயனுள்ள பொழுதுபோக்குகளைக் கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் ஏற்படும்.
எப்போதும் "பிஸி'யாகவே இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன்றாட வேலைகள், அடைய வேண்டிய இலக்குகளைத் தீர்மானித்து அதனை அடையத் தேவையான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே வந்தால், ஸ்மார்ட்போன் என்பது, நமக்கு "ஸ்மார்ட்'டான நண்பனாக மட்டுமே இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com