வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு!

வெளிநாட்டில் வேலை என்றாலே அது தகவல் தொழில்நுட்பத்துறையில்தான் என்று நினைப்பவர்களே அதிகம். ஆனால்
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு!

வெளிநாட்டில் வேலை என்றாலே அது தகவல் தொழில்நுட்பத்துறையில்தான் என்று நினைப்பவர்களே அதிகம். ஆனால் வாகன ஓட்டுநர் பணிக்கும் வெளிநாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்போது வளர்ந்த நாடுகள் அனைத்திலும் ட்ரக் ஓட்டுநர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.  நம் ஊரில் கனரக வாகனம் என்றால், பேருந்து, லாரி, ட்ரக், ட்ரெய்லர் போன்றவற்றைக் குறிப்பிடுவோம்.  ஆனால், இவையெல்லாம் உண்மையில் கனரக வாகனங்கள் அல்ல.

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படும் சரக்குப் போக்குவரத்துக்கான ட்ரக், ட்ரெய்லர் தான் உண்மையான கனரக வாகனங்கள். இந்த வாகனங்களை இயக்க  துணிச்சலும், நல்ல பயிற்சியும் வேண்டும். 

அமெரிக்காவின் தொழிலாளர் புள்ளியியல் அமைப்பின் தகவல்படி, ட்ரக் ஓட்டுநர் பணி மிக வேகமாக வளர்ந்துவரும் வேலைவாய்ப்பாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் புதிய வேலைவாய்ப்புகள் இதில் உருவாகி வருகின்றன. அமெரிக்கன் ட்ரக்கிங் அசோசியேசன் கூறுவதைப்போல, 70 சதவீத உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து ட்ரக் மூலமாகவே நடைபெறுகிறது.

அமெரிக்காவில்  தற்போது அங்கு 48,000 ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சூழ்நிலையே உள்ளது.  2025-இல் 1.70 லட்சம் ட்ரக் ஓட்டுநர்கள் தேவைப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பற்றாக்குறை ஓட்டுநர்களின் தேவையையும் அவர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து நிறுவனமான சிஆர்எஸ்டி- தனது நிறுவனத்தில் சேரும் புதிய ட்ரக்  ஓட்டுநர்களுக்கு 15 சதவீதம் அதிக ஊதியம் வழங்குகிறது. 

அமெரிக்காவைப் பொறுத்தவரை அனைத்து ஓட்டுநர்களும் அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் மாகாண அரசுகளின் போக்குவரத்துவிதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.  குறிப்பாக, மாகாண அரசுகளின் சட்ட விதிகள், மத்திய அரசின் சட்ட விதிகளைக் காட்டிலும் கடுமையானதாக இருக்கும். ட்ரக் ஓட்டுநர்களைப் பொறுத்தவரை தாங்கள் வசிக்கும் மாகாண அரசுகளின் ஓட்டுநர் உரிமங்கள் பெற்றவராக இருப்பதோடு, எந்தவிதமான விதிமீறல், குற்றப் பின்னணி இல்லாதவர்களாகவும் இருந்தால் மட்டுமே நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.

ட்ரக் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் 26 ஆயிரம் பவுண்ட் எடைகளை ஏற்றிச் செல்லும் வகையில் வணிக ஓட்டுநர் உரிமத்தை அவர்கள் வசிக்கும் மாகாண அரசிடமிருந்து பெற்றிருக்க வேண்டும். அதேபோல, ஓட்டுநர்கள் அவர்கள் கையாளும் ட்ரக் அளவுக்கு ஏற்பவும், அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லும் அளவுக்கு ஏற்பவும் வணிக ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். அதேசமயம், சாதாரண ட்ரக், வேன் ஓட்டுநர்கள் வழக்கமான உரிமம் பெற்றாலே போதுமானது.

வணிக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் போக்குவரத்து, சட்ட விதிகள் குறித்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு வணிகரீதியிலான ட்ரக்கை பாதுகாப்பாக இயக்கிக் காட்டி தேர்ச்சி பெற வேண்டும். அந்த நாட்டின் தேசிய தகவல் மையத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களின் சாலை விதிமீறல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.

தேவையேற்படும்போது, ஓட்டுநர்களின் உரிமம் ரத்துசெய்யப்பட்டது, திரும்பப் பெறப்பட்டது குறித்த தகவல்களை மாகாண அரசுகள் மத்திய தகவல் தொகுப்பிலிருந்து பெற்று சரி பார்க்கும். மத்திய மோட்டார் சரக்கு போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு ஓட்டுநர்களின் குறைந்தபட்ச வயது 21 எனவும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் விதிகளை வைத்துள்ளது.

எனினும், பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் 22 வயதுடையவர்களையே  வணிக ஓட்டுநர் பணிகளில் அமர்த்துகின்றன.  அதோடு, இந்தப் பணிக்கு உயர்நிலைப் பள்ளி  படிப்பை முடித்திருக்க வேண்டும். நிறுவனங்கள், திறமையான ஓட்டுநர்கள் என கருதுவோருக்கு உடனடி வேலைவாய்ப்பும், பொருளாதார ஊக்குவிப்பும் அளிக்கின்றன.

அதேபோல, ட்ரக் ஓட்டுநர் வேலைக்கும், வணிக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் உதவும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் அங்கு உள்ளன. உயர்நிலை வகுப்பு தொழிற்பாடத் திட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் தானியங்கி இயந்திரப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வணிக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு 6 வகையான ஓட்டுநர் பணிகள் சர்வதேச அளவில் உள்ளன. மேற்கத்திய மற்றும் வளர்ந்த நாடுகளில் இதுபோன்ற ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் தொடங்கி, பணிக்கு ஏற்ப ரூ. 50 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவில், கனரக வாகன ஓட்டுநர்களுக்கு பெரும்பாலும் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் தொடங்கி ரூ. 3.5 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. ஒரு சில நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மிகச் சில நிறுவனங்கள் மட்டும் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை ஊதியம் வழங்குகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com