கண்டதும் கேட்டதும் 13 - பி.லெனின்

நான் நடந்து வரும்போது அந்த இருட்டிலும் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
கண்டதும் கேட்டதும் 13 - பி.லெனின்

நான் நடந்து வரும்போது அந்த இருட்டிலும் ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவருக்கு சுமார் எண்பது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். என்னைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் பார்த்தேன்.

அவர் தன் இரண்டு கைகளால் என் இரண்டு கன்னங்களையும் வருடி, "ஏம்பா நீ பீம்பாய் பையன்தானே'' என்று கேட்டார். 

நானும், "ஆமாம்'' என்றேன்.  "அப்போ என் பார்வை இன்னும் கெடலே, நீ லெனின் கரெக்டா?''

அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

ஆனால் அவர் நான் நினைக்கும் நபர் தானா என்று சற்று சந்தேகம்.
"ஆமாம்...  நீங்கள் இன்னும் மாடர்ன் தியேட்டர்சில் தானே வேலை பார்க்கிறீர்கள்'' என்றேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, "லெனின் அது நான் இல்லே. என் தம்பி கே.என்.சுந்தரம். நாங்க ரெண்டு பேரும் டுவின்ஸ்.  பார்க்க ஒரே மாதிரிதான் இருப்போம். என் பேர் வைத்தியநாதன். ஏ.பி. நாகராஜன் ஸ்ரீவிஜயலட்சுமி பிக்ஸர்ஸ்ல பல வருஷமா புரொடக்ஷன் மேனேஜரா ஒர்க் பண்ணிகிட்டிருக்கேன்.  என் மூத்த சகோதரர் ஒருத்தர் பேர் கே.என்.ரத்தினம்.

ஒரு நாடக கம்பெனியை நடத்திக்கிட்டிருக்கார். அந்த கம்பெனிக்கு தேவி நாடக சபான்னு பேரு.  அந்த கம்பெனியில்தான் ஏ.பி.நாகராஜன் எழுதின  "நால்வர்', "அன்னை',  "பவானி',  "கொள்ளைக்காரன்'  போன்ற நாடகங்கள் எல்லாம் அரங்கேறிச்சு, அதற்கப்புறம் நால்வர் நாடகத்தை சினிமாவாகவும் எடுத்தாங்க! நல்ல சக்ஸஸ். அப்ப "நால்வர் நாகராஜன்'னுதான் அவரை எல்லோருமே சொல்லுவாங்க.

"நால்வர்'ல தர்மலிங்கம் பிள்ளைங்கிற ஒரு கேரக்டர். அவருக்கு நாலு புள்ளைங்க. மூத்தவன் மோகன் இன்ஸ்பெக்டர். இரண்டாவது மகன் வாசன். வக்கீல். மூணாவது மகன் ராஜன். ஒரு கம்யூனிஸ்ட். பொது உடமை கொள்கையை ஆதரிப்பவன். தொழிலாளர் தலைவன். நாலாவதா ஒரு பையன் பேரு பாலன். சுத்த யூஸ்லஸ். அவனால வீட்டுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படியெல்லாம் கேரக்டர்களை உருவாக்கி தனக்கே உரிய தமிழ்ல உரையாடலை எழுதி நாடக மேடையை அலங்கரிச்சவரு ஏ.பி.என். அந்த "நால்வர்' நாடகத்தை அப்புறமா எல்லா நாடக கம்பெனிகளும் போட்டிருக்காங்க. எங்களைப் பொருத்தவரைக்கும் ஏ.பி.என். ஒரு சகாப்தம் என்றார். 

நான் அவரைப் பார்த்து மிகவும் வியந்தேன். எண்பது வயதில் என்ன அபார ஞாபகசக்தி.

"ஒரே நாள் இரவுல 4 மணி நேரம் நடக்கக்கூடிய  "அபிமன்யு சுந்தரி'  எனும் நாடகத்தை எழுதி முடிச்ச தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகளுக்கு அப்புறம் அதீத திறமையுள்ள ஒரு நாடக ஆசிரியர் திரைப்பட வசனகர்த்தா நடிகர், இயக்குநர் என பல்வேறு பரிமாணம் கொண்ட ஒருத்தரை சொல்லி முன்னிலைப்படுத்தணும்னா அது ஏ.பி.என். மட்டும்தான் அப்படீங்கறது எம்.ஜி.ஆர். வரைக்கும் ஒத்துக்கிட்ட ஒரு விஷயம். சாண்டில்யன் அவர்களோட, "மலைவாசல்'ங்கிற கதையை தில்லை தியேட்டர்ஸ், ஜி. சகுந்தலாவோட நாடக குழுவுக்காக அவர் நாடகமா எழுதினப்போ மக்கள் திலகம்தான் ஆர்.ஆர். சபாவில நடந்த அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்கினாரு.

தலைமை உரையில அவர் பேசும்போது  இந்த "மலைவாசல்' நாடகத்தை எல்லோரும் ரசிக்கும்படியும் புரியிற மாதிரியும் எழுதி நாடகமாக்கம் செய்ய ஒரு ஏ.பி.நாகராஜனைத் தவிர, வேறு யாருமே இல்லைன்னு உறுதியா சொல்லலாம்''  என்றார்.

அதில் அவர் ஒரு வசனம் எழுதியிருப்பார். நாணயங்களைக் கண்டுபிடித்த ஸ்கந்தகுப்த சக்ரவர்த்தியிடம் தளபதி அஜீத் சந்திரன் கேட்கிறான். "மகாராஜா நம்முடைய நாணயத்தின் அளவு முன்பைவிட குறைந்திருக்கிறதே?''

"ஆம் அஜீத் சந்திரா!  நாட்டில் நம்பிக்கையுள்ள நல்ல மனிதர்களின் நாணயம் எல்லாம் கெட்டுவிட்டது. அதனால் தற்போது நாணயத்தின் அளவு மட்டுமல்ல, அதன் மதிப்பையும்  குறைத்துவிட்டேன்''  என்கிறார் ஸ்கந்த குப்த சக்ரவர்த்தி.

ஏ.பி.என். "நால்வர்' நாடகம் எழுதின சமயம், ஒரு ஊர்ல அப்போ திரைப்படத்துல பிரபலமா இருந்த கதாநாயக நடிகர் கே.ஆர்.ராமசாமி ஒரு நாடகம் நடத்திக்கிட்டிருந்தார். அதே ஊர்ல ஏ.பி. என்னும் ஒரு நாயக  ட்ரூப் தொடங்கி நாடகம் நடத்த ஆரம்பிச்சாரு.

ஏ.பி. என்னுக்கு எப்பவுமே ஒரு நல்ல நம்பிக்கை உண்டு.  தான் எழுதற நாடகத்தையும் அதுல வர்ற என்னுடைய தமிழ் வசனங்களையும் ஜனங்க பாராட்டுவாங்கன்னு  சொல்லுவாரு.  அவ்வளவு கான்ஃபிடன்ஸ் தன் திறமையிலே. ஆனா நிலமை என்ன தெரியுமா? கே.ஆர். ராமசாமியோட நாடகத்தைப் பார்க்க அப்போ குறைஞ்சது ஆயிரம் பேர் வருவாங்க. ஆனா ஏ.பி.என் நாடகத்துக்கு கடற்கரையில காக்கா உக்கார்ற மாதிரி அஞ்சு பேரோ, பத்து பேரோ வந்து உக்காந்திருப்பாங்க.  ஏ.பி.என். "வேற ஏதாவது ஊர்ல போய் நாடகம் போடாம இங்க எனக்குப் போட்டியா எதுக்கு நாடகம் போடறார். எனக்கிருக்கிற புகழ் செல்வாக்கு அவருக்குப் புரியலையே. அவர் கஷ்டப்படறதைப் பாத்தா எனக்குத் தான் மனசு சங்கடமா இருக்கு'' என்றாராம் கே.ஆர்.ஆர்.

கடவுள் அமைத்த மேடையில் காலச்சக்கரம் சுழன்றது. ஏ.பி.என். நாடகத்திற்கு  மக்களின் பேராதரவு கிடைத்தது.  கே.ஆர்.ஆர். நாடகத்திற்கு வரும் கூட்டம் குறையத் தொடங்கி ஏ.பி.என். நாடகத்திற்கு வரும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.அதற்கு காரணம் அவரது ஆன்மிகப் பற்று. புராண நாடகங்கள் அதுசமயம் மக்களின் பேராதரவைப் பெற்றது. ஏ.பி.என்., கே.எஸ்.கோபால கிருஷ்ணன், நாடக கதாசிரியர் இரா. பழனிச்சாமி போன்றவர்கள் இதிகாசங்களின் அத்தாரிட்டி என்றுதான் சொல்ல வேண்டும்.

அப்போதுதான் கே. சோமு டைரக்ஷனில் ஒரு புராணப்படம் தொடங்கப்பட்டது. அதுதான் "சம்பூர்ண ராமாயணம்'. ஏ.பி.நாகராஜன்தான் கதை வசனம். என்.டி.ராமாராவ் ராமராகவும், பத்மினி சீதையாகவும், சிவாஜி கணேசன் பரதனாகவும் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில்தான் டி.கே.பகவதி அண்ணாச்சி இலங்கேஸ்வரனாக நடித்தார். அவர் சிவலிங்கத்தின் முன் அமர்ந்து சி.எஸ். ஜெயராமனின் பின்னணிக் குரலில் பாடிய பாடல் -
இன்று போய் நாளை வாராய் - என
எனையொரு மனிதனும் புகலுவதோ!
மண்மகள் முகம் கண்டேன் - மனம்
கலங்கிடும் நிலை இன்று ஏன் 
கொடுத்தாய் - ஈசா!
எண்திசை வென்றேனே! - அன்று
இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே!

இந்தப் பாடலை என் சிறு வயதில் இருந்து இப்பொழுதுவரை சி.எஸ். ஜெயராமன் குரலிலேயே பாடிக் கொண்டு வருகிறேன். இப்பாடலை பாடுவதிலேயே என் குரல் எந்தப் பாடலும் பாடுவதற்கு ஏற்றதாய் வளம் பெறுகிறது. இந்தப் பாடலுடன் மற்றும் எல்லாப் பாடலையும் எழுதியவர் All Times  மருதகாசி என்ற எ. மருதகாசி.

ஏ.பி.என். இதிகாசங்களை ஆய்வு செஞ்சிகிட்டிருந்தாரு. ஏ.பி.என்., கே.எஸ். கோபால கிருஷ்ணன், இரா. பழனிச்சாமி போன்றவர்கள் நாடக ஸ்கிரிப்ட் எல்லாம் வைக்கும் ஒரு பெட்டிக்கு அத்தாரிட்டியாகத் திகழ்ந்ததால் அவர்களுக்கு, "புத்தகப் பொட்டி', என்ற ஒரு பட்டப் பெயரும் உண்டு. அந்தப் புத்தகப் பெட்டிதான் ஏ.பி.என். வாழ்க்கைக்கே அஸ்திவாரமாக அமைந்தது. "நவராத்திரி' படத்திற்குப் பிறகு கூட அவர் பல விஷயங்களை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தது. அந்தப் புத்தகப் பெட்டியில் அவருக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் "சிவலீலா' எனும் ஆன்மிகப் புத்தகம். அதைத்தான் ஏ.பி.என். உருப்போட்டு, உருப்போட்டு "திருவிளையாடல்' எனும் திரைப்படம் ஆக்கினார். அதிலிருந்துதான் அவர் பொருளாதாரரீதியாகவும் உயர்ந்து நின்றார்.

அதற்கு முன்பு வி.கே.ஆர், ஏ.பி.என். இருவரும் பார்ட்னராகச் சேர்ந்து "வடிவுக்கு வளைகாப்பு' என்ற படத்தைத் தயாரித்தார்கள். அதுகூட கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த ஸ்தாபனத்திற்கு பெயர் ஸ்ரீலெட்சுமி பிக்ஸர்ஸ். அக் கம்பெனி பனகல் பார்க் அருகில் இருந்தது. அதன் அருகில்தான் கோவிந்து தெருவும் இருக்கிறது. அங்கு NO 15A  என்ற முகவரியில்தான் அந்தக் காலத்தில் பல கலைஞர்களும் குடியிருந்தார்கள். பாடகி (Play Back Singer) திருமதி. முத்துலட்சுமி, திருச்சி தியாகராஜன், தயிர் வடை தேசிகன் போன்றவர்கள்.

"சார் நீங்க உங்க பிரதர் கே.என்.ரத்தினம் ஒரு நாடகக் கம்பெனியோட முதலாளி. ஏ.பி.என். அவர் கம்பெனிக்கு நாடகம் நிறைய எழுதியிருக்கான்னு சொன்னாங்க. அப்ப உங்க சகோதரர் ரத்தினம் ஒரு சாதனையாளர்தானே? ‘' என்று கே.என். வைத்தியநாதன் அவரிடம் கேட்டேன்.

"எஸ், கரெக்ட் அக்கால நாடகக் கம்பெனிகளுக்கு எல்லாம் பாய்ஸ் கம்பெனின்னு ஒரு அடைமொழிப் பெயரும் உண்டு. நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட கலைஞர்களுக்கு குரு சங்கரதாஸ் சுவாமிகள். பொழுதுபோக்குக்காக நடிக்கிற அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு குரு பம்மல் சம்பந்த முதலியார். இவர் அந்தக் காலத்துலேயே பி.ஏ. பட்டம் பெற்றவர். இது மாதிரி ஜாம்பவான்கள் எல்லாம் வலம் வந்த அக்காலத்திலேயே ஏ.பி.நாகராஜனும் இருந்திருக்கிறார். டி.கே.சண்முகம் அவர்களுடைய நாடகக் குழுவிலும் ஒரு நடிகனாகத் தன்னைப் பதிவு பண்ணிக்கிட்டவரு. நிஜ வாழ்க்கையிலும் ஏ.பி.என். எல்லாம் தெரிந்த ஒரு நக்கீரர்தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்''.

"சார், எனக்கு கொஞ்சம் கேப் கொடுத்தால் நானும் பேசுவேனே'' என்றதும், "பேசு லெனின் நீதானே, இப்ப இளைஞன் - நல்லா பேசு. உன் பேச்சைக் கேட்க நானும் ஆர்வமா இருக்கேன்'' என்றார்.

"இல்ல உங்களைப் பத்தி இப்ப நான் புரிஞ்சிக்கிட்டேன். உங்க பிரதர் கே.என்.சுந்தரம் எனக்கு ரொம்ப நாளா நண்பர். மாடர்ன் தியேட்டர்சில் நான் அவரை நிறைய தடவை மீட் பண்ணியிருக்கேன். அவர் கே.எஸ்.ஜி  கிட்டயும் கொஞ்ச நாளைக்கு ஒர்க் பண்ணி இருக்கார். நீங்க உங்க மூத்த சகோதரர் கே.என்.ரத்தினம் அவர்களைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சி "லைன்'  மாறி வேற விஷயத்துக்குப் போயிட்டீங்க. நான் நேரடியாக பார்த்து தெளிந்தது சிறிதளவேதான். நீங்க அவர் தம்பி. அவரைப்பற்றி சொல்லுங்க. நான் கேட்டுக்கறேன். அதோடுகூட அவருடைய சாதனைகளைப் பற்றி சொல்ல முடியுமா?'' என்று கேட்டேன். 
(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com