பயோ பிளாஸ்டிக் பை!

பிளாஸ்டிக் பைகளைக் கரைத்து குடித்துவிடலாம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். நிலத்திலேயே பிளாஸ்டிக் பைகள் அழிவதற்கு 200 ஆண்டுகள் ஆகும்போது,  எப்படி இது சாத்தியம்?
பயோ பிளாஸ்டிக் பை!

பிளாஸ்டிக் பைகளைக் கரைத்து குடித்துவிடலாம் என்றால் யாரும் நம்பமாட்டார்கள். நிலத்திலேயே பிளாஸ்டிக் பைகள் அழிவதற்கு 200 ஆண்டுகள் ஆகும்போது,  எப்படி இது சாத்தியம்?

ஆம், வெதுவெதுப்பான தண்ணீரில் உடனடியாகவும், நிலத்திலோ, கடலிலோ சில மாதங்களிலோ கரையும் புதுவிதமான பயோ பிளாஸ்டிக் பைகளை இந்தோனேசியா நாட்டின் பாலியைச் சேர்ந்த இளம் பட்டதாரி கேவின் குமாலா உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்த பயோ பிளாஸ்டிக் பைகளை தண்ணீரில் கரைத்துக் குடித்தாலும் அது உடலுக்கு கேடு விளைவிப்பதில்லை. அப்படி என்ன தான்  அதிசயம் உள்ளது இதில்?

இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் மரவள்ளி, மக்காசோளம், சோயா ஆகிவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நச்சுப்பொருள்கள் இல்லாததால், இதனைக் கரைத்து குடித்தாலும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. பயோ பிளாஸ்டிக் பைகள் சில நாள்களிலேயே மண்ணிலோ, நீரிலோ கரைந்து போய்விடுகின்றன. ஆகையால், இதற்கு 100 சதவீதம் மக்கும் தன்மை  கொண்ட பிளாஸ்டிக் எனப் பெயர் சூட்டி இந்தோனேசியாவில் விளம்பரப்படுத்தப்படுகிறது.

அழகான கடற்கரை நகரமான பாலியைச் சேர்ந்த உயிரியல் பட்டதாரியான கேவின் குமாலா, மழை நேரத்தின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக் ரெயின் கோர்ட் அணிந்து செல்வதைப் பார்த்த பின்பு, பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகச் சொல்கிறார்.

கேவின் குமாலா தனது நண்பருடன் சேர்ந்து பயோ பிளாஸ்டிக் பையை உருவாக்கும் தொழிற்சாலையையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார். இந்தோனேசியாவில் மரவள்ளிக்கிழங்கின் விளைச்சல் அதிகம் என்பதால்  பயோ பிளாஸ்டிக் பைகளின் உற்பத்தியும் நாளோன்றுக்கு 4 டன் வரை எட்டியுள்ளது.

இவை அந்நாட்டில் உள்ள ஹோட்டல், கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாதாரண பிளாஸ்டிக் பைகளை விட, இந்த பயோ பிளாஸ்டிக் பைகளைத் தயாரிக்க இரண்டு மடங்கு செலவாகிறது. எனினும், சுற்றுச்சூழல் மாசைக் கவனத்தில் கொண்டு பயோ பிளாஸ்டிக் பைகளையே பாலி நகர வாசிகள் பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் 2018-இல் பிளாஸ்டிக் பைகள் இல்லாத பாலியை உருவாக்கிவிடலாம் என்று கேவின் குமாலா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அதுமட்டுமின்றி, உலகின் பெரிய 40 நிறுவனங்கள் பயோ பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த குமாலாவின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. 

2050-ஆம் ஆண்டில் கடலில் இருக்கும் மீன்களின் எடையை விட பிளாஸ்டிக் கழிவுகளின் எடை அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை ஒழித்துக் கட்ட  அதற்கு மாற்றுப் பொருள் தேவைப்படுகிறது.  அதில் ஒன்றுதான் இந்த  பயோ பிளாஸ்டிக்.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com