சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 7 - தா.நெடுஞ்செழியன்

பிளஸ் டூ வுக்குப் பிறகு அகில இந்திய அளவில் 80 - க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள் நடத்துகின்றன.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 7 - தா.நெடுஞ்செழியன்

மதிப்பெண்களைத் தாண்டி ஓர் உலகம் இருக்கிறது. 
பிளஸ் டூ வுக்குப் பிறகு அகில இந்திய அளவில் 80 - க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்விநிறுவனங்கள் நடத்துகின்றன. இவை அனைத்துமே இந்தியாவின் தலைசிறந்த கல்விநிறுவனங்கள். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படுபவை. இப்படிப்பட்ட கல்விநிறுவனங்கள் உள்ளன என்பது தெரியாமலேயே, அங்கு கற்றுத் தரப்படும் சிறந்த கல்வியைக் கற்காமலேயே எண்ணற்ற மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்துவிடுகின்றனர். இது மிக மிக வருந்தத்தக்க விஷயம். 
உயர் கல்வி பற்றிய விஷயங்கள் பெரும்பாலான பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரியவில்லை. எதிர்கால சந்ததியினருக்கும் தெரியவில்லை. இதை மாற்றியாக வேண்டும். கல்வி பற்றிய தகவல்களுக்கான தேடல்களை மாணவர்கள் அதிகப்படுத்த வேண்டும். பெற்றோர்களும் அதிகப்படுத்த வேண்டும். 
இன்றைய மாணவர்கள் உயர்கல்விக்கான வாய்ப்புகளைப் பற்றி அதிகமாக ஆராயாமல், அவர்களுடைய பார்வைக்கு எவையெல்லாம் தெரிய வருகிறதோ அவற்றைப் படித்துவிடுகிறார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதைவிடச் சிறந்த கல்வி பற்றிய தகவல்கள் தெரிய வரும்போது, "இவற்றையெல்லாம் படித்திருந்தால் - இந்தப் படிப்புகளை எல்லாம் முயற்சி செய்து பார்த்திருந்தால் -நான் பெரிய அளவுக்கு முன்னேறியிருப்பேனே' என்று எந்தவொரு மாணவரும் வருத்தப்படக் கூடாது. கல்வி பற்றிய சரியான தகவல்கள் தெரியாமல் எண்ணற்ற மாணவர்களின் திறமைகள் இவ்வாறு வீணடிக்கப்படக் கூடாது. 
உயர்கல்விக்கான வழிகாட்டும் கருத்தரங்கு ஒன்றை சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசினர் பார்வையற்றோர் பள்ளியில் நாங்கள் நடத்தியபோது, அதில் கண்பார்வையற்ற ராம்குமார் என்ற மாணவர் கலந்து கொண்டார். அவர் பிளஸ் டூ வில் 1200 - க்கு 724 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவர் ஆரணிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். எங்களுடைய ஆலோசனையின்படி பிளஸ் டூ விற்குப் பிறகு CLAT என்ற (Common Law Admission Test) என்ற சட்டப்படிப்புக்கான தேர்வு எழுதி, இந்தியாவிலேயே சிறந்த கல்விநிறுவனமாக உள்ள The National University of Advanced Legal Studies (NUALS) Cochin - என்ற கல்லூரியில் சேர்ந்து நன்றாகப் பயின்று எட்டு கிரேடுக்கு மேல் வாங்கி "நேஷனல் லா யுனிவர்சிட்டி ஆஃப் டெல்லி' (NLU) யில் கன்ஸ்டிடியூஷன் லா என்ற படிப்பில் சேர்ந்திருக்கிறார். 
இவருக்கு முன்பு இவரைப் போன்றே ஆலோசனை பெற்ற இன்னொரு மாணவர் சையது அன்சாரி. அவர் அருப்புக்கோட்டைக்கு அருகில் வீரசோழம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவரும் பிளஸ் டூ வில் 1200 -க்கு 824 மதிப்பெண்கள் வாங்கியவர். இவரும் The National University of Advanced Legal Studies (NUALS) Cochin - இல் சேர்ந்து அரியர்ஸ் ஒன்று கூட இல்லாமல், எட்டு கிரேடு வாங்கி நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடமும், நீதியரசர் கிருஷ்ணய்யரிடமும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார்.
அவருக்கு "யுனிவர்சிட்டி ஆஃப் நெதர்லாண்ட்ஸில்' மேற்படிப்பு படிக்க அட்மிஷன் கிடைத்தது. பண வசதி இல்லாததால் அவரால் அதில் சேர முடியவில்லை. ஆகவே இந்திய உச்சநீதிமன்றத்தில் உள்ள "இன்டியன் லா இன்ஸ்டிடியூட்’ (ILI - DELHI) - இல் பயின்று தற்போது திருச்சியில் உள்ள "நேஷனல் லா யுனிவர்சிட்டி'யில் ஒப்பந்த அடிப்படையில் பேராசிரியர் பணிபுரிகிறார். 
இவர்கள் இருவருமே சென்னை பூந்தமல்லியில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். இந்த இருவரிடமும் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. கண்பார்வை இல்லை என்பதைத் தடையாக இருவருமே கருதவில்லை. கண்பார்வையில்லாவிட்டாலும் எங்களால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருவரும் யோசித்தார்கள். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இருவரிடம் வலுவாக இருந்தது. 
கண்பார்வை இல்லாவிட்டால் புத்தகங்களைப் படிப்பதே சிரமம். அதற்கே பிறர் உதவி தேவைப்படும். கம்ப்யூட்டர் மூலம் படிப்பதற்கும் பிறர் உதவியும் பயிற்சியும் தேவை. ஆனால் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவர்களுக்கு இருந்ததால், அவர்களுடைய உடற்குறையையும் மீறி அவர்களால் படிக்க முடிந்தது. நமக்குப் பார்க்கும் திறன் இருப்பதால் பார்த்த எல்லாவற்றிலும் உள்ள குறைகள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி, அவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உடனே எதையும் நிராகரித்து விடுகிறோம். இதனால் ஆக்கப்பூர்வமாக எதையும் நம்மால் சிந்தித்துச் செயல்படமுடிவதில்லை. சாதிக்க முடிவதில்லை. 
ஆனால் அவர்கள் இருவரும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்லூரிப் படிப்பை ஆங்கில வழியில் பயில முடியுமா என்று அச்சப்படவில்லை. அதைக் கஷ்டம் என்று நினைக்கவில்லை. கண்பார்வையில்லாவிட்டாலும் "தங்களிடம் உள்ள திறமைகளைப் பயன்படுத்தி தங்களால் முன்னேற முடியும்; சாதிக்க முடியும்' என்று நம்பினார்கள். ஆக்கப்பூர்வமாக எதையும் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் விடாமுயற்சி செய்து வெற்றியடைந்தார்கள். 
ஒரு விஷயத்தில் உள்ள கஷ்டங்களை மட்டும் யோசிக்காமல், அந்த கஷ்டங்களுக்கான தீர்வுகளையும் யோசித்துச் செயல்பட்டார்கள். உதாரணமாக பார்வைத் திறன் அற்றவர்கள் சாலையில் நடந்து செல்லும்போது சாலையைக் கடப்பதற்கு பிறர் உதவியை நாடாமல், தாமாகவே கையில் உள்ள ஸ்டிக்கின் உதவியுடன் சாலையைக் கடப்பதை நம்மால் பார்க்க முடியும். 
இவர்களைப் போன்று எண்ணற்ற மாணவர்களுக்கு தமிழ்நாட்டைத் தாண்டி - அகில இந்திய அளவில் - ஏன் உலக அளவில் - சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வேண்டும். 
பொறியியல், மருத்துவம் தவிர எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. போட்டிகள் அதிகம் நிறைந்த - 10 லட்சம், 15 லட்சம் பேர் போட்டி போடக் கூடிய பொறியியல், மருத்துவப் படிப்புகளில் போட்டியிட்டு தோல்வி அடைவதைவிட, போட்டிகள் குறைந்த அளவில் உள்ள - 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளக் கூடிய போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி அடைவது எளிது. 
பெற்றோர்கள் தற்போது முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மாணவர்கள் மீது தவறுகள் கிடையாது. பாடத்திட்டத்தின் மீதும் பிரச்னைகள் கிடையாது. இந்தப் பாடத்திட்டங்களை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சொல்லிக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அதனால் ஒரு மாணவருக்கு ஒரு சப்ஜெக்ட் பிடிக்கவில்லை என்றால், அந்த சப்ஜெக்ட்டை நன்றாகச் சொல்லித் தரக்கூடிய ஆசிரியரிடம் அந்த மாணவர் பயிலவில்லை என்றுதான் அர்த்தமேயொழிய அந்த மாணவருக்குக் கணிதம் வரவில்லை; அறிவியல் வரவில்லை என்று நாம் அவர்களைச் சொல்லக் கூடாது. அதற்கான அடுத்த சிறந்த ஆசிரியரை - அந்த ஆசிரியர் அவர் வகுப்பில் உடன் பயிலும் மாணவராகவோ, வேறொரு பள்ளியில் படிக்கும் மாணவராகவோ இருக்கலாம். வேறொரு பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியராக இருக்கலாம் - அவரைக் கண்டுபிடித்து, அவர் வாயிலாக அந்த சப்ஜெக்டைப் புரிந்து கொள்ளக் கூடிய சூழலை பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும். 
மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் வலியுறுத்த வேண்டும். புரிந்து படித்தால் மட்டுமே எதிர்காலத்தில் எந்தவொரு விஷயத்தையும் படித்த கல்வியைப் பயன்படுத்தி நன்கு ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியும். எந்தவொரு சவாலையும் எளிதில் புரிந்து கொண்டு அதைச் சமாளித்து வெற்றியடைய முடியும். 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com