வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 152: ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 152: ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள். அப்போது புரொபஸர் செகாவின் சிறுகதையான The Lady with the Dog தமிழாக்கப்பட்ட போது ஒரு தமாஷ் நடந்தது தெரியுமா? எனக் கேட்கிறார்.

கணேஷ்: என்ன சார் அது?
புரொபஸர்: The Lady with the Dog என்பது உலகின் தலைசிறந்த காதல் கதைகளில் ஒன்றாக நம்பப்படுவது.
கணேஷ்: ரோமியோ ஜூலியட் மாதிரியா சார்?
புரொபஸர்: ரோமியோ ஜூலியட் இளம் காதலர்களின் கதை. குடும்பப் பிரச்சனை எப்படி காதலர்களைப் பிரிக்கிறது எனப் பேசும் கதை. ஆனால் The Lady with the Dog ஏற்கெனவே திருமணமான ஓர் ஆணும் பெண்ணும் எதேச்சையாய் பரஸ்பரம் சந்தித்து காதல் கொள்ளுவதையும், அந்த உறவு எப்படி அவர்களது வாழ்க்கைப் பார்வையை முழுக்க மாற்றி அமைக்கிறது எனச் சொல்லும் கதை. 
கணேஷ்: முறைபிறழ்ந்த உறவு?
புரொபஸர்: Yes adultery. ஆனால் இக்கதையை அப்படி சிறுமைப்படுத்துதல் ஆகாது. உன்னதமான காதல் கதை இது.
செகரெட்டரி அப்போது அங்கு வருகிறார்.
செகரெட்டரி: டாக்டர் வர தாமதமாகும். நீங்க எல்லாரும் வேண்டுமென்றால் நூலகத்தில் காத்திருக்கலாம். அங்கே உங்களுக்கு சிற்றுண்டியும் தேநீரும் காத்திருக்கிறது.
கணேஷ் (புரொபஸரிடம்): என்ன சார், மருத்துவமனையில் நூலகமா? விருந்தோம்பலா? 
புரொபஸர்: சேஷாச்சலம் அப்படித் தான்! Uncanny fellow!
(எல்லாரும் நூலகம் செல்கிறார்கள். அங்கே வரிசை வரிசையான புத்தக அலமாரிகள் தாண்டி, சிறு மேஜை நாற்காலிகள் ஜோடி ஜோடியாய் இடப்பட்டுள்ளன. அவற்றில் தேநீரும் பிஸ்கட்டும் வைக்கப்பட்டுள்ளன.)
கணேஷ்: அதென்ன சார் uncanny?
புரொபஸர்: விநோதமான இயல்பு கொண்டவர்கள் - நம்மை சதா திகைக்கவும் குழப்பவும் வைக்கும்படி செயல்படுபவர்கள். Not the run-of-the-mill type.
கணேஷ்: Run-of-the-mill என்றால் "வழக்கமான' என்று அர்த்தமா?
புரொபஸர்: இல்லை - இதன் பொருள் ordinary. அதாவது சராசரியான டாக்டர்கள் மாதிரி அல்ல இவர். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கலின் விளைவாக மலிவான பொருட்களை உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் தோன்றின. இந்த பொருட்களை run of the mill என்பார்கள்.
கணேஷ்: சைனா மேக் சாமான் போல.
புரொபஸர்: ஆமா. பிளாஸ்டிக் அரிசி என்று ஒன்று கொஞ்ச நாள் முன்னால் பீதியை கிளப்பிற்றே அது போல. பார்க்க அரிசி போல இருக்கும், ஆனால் சாப்பிட்டால் வெறும் பிளாஸ்டிக்.
(அவர்களுக்கு அருகில் அமர்ந்துள்ள மீசைக்காரர் தான் அணிந்துள்ள அங்கியின் பாக்கெட்டில் இருந்து ஒரு மைனாவை வெளியே எடுக்கிறார்.)
மைனா: நான் எவ்வளவு நேரமா கூப்பிடறேன். என்ன தூங்கீட்டியா you dopey man?
மீசைக்காரர் புன்னகைத்து விட்டு, பிஸ்கட்டை எடுத்து சிறு துண்டுகளாய் உடைத்து அதற்கு ஊட்டுகிறார்.
கணேஷ்: என்ன சார் ஒரு மைனா போய் இப்படி மிரட்டுது?
மைனா: Shut up!
புரொபஸர்: நீ அது கிட்ட வம்புக்கு ஏன் போகிறே? 
கணேஷ்: Dopey என்றால் டோப் அடிக்கிறதா?
புரொபஸர்: இல்லடா. தூக்க கலக்கமா இருக்கிறது. Groggy!
கணேஷ்: சார் இந்த அடெல்டரி என்பதை நான் வேறு அர்த்தத்திலும் கேள்விப்பட்டிருக்கேன்.
புரொபஸர்: ஆமா அது adulteration. அதாவது கலப்படம். Adulterare எனும் லத்தீன் சொல்லில் இருந்து இது தோன்றியது. Ad + alterare. Ad என்றால் லத்தீனில் to என்று பொருள். Alterare என்றால் ஊகிக்க முடிகிறதா?
கணேஷ்: Alter என்ற சொல்லை நினைவுபடுத்துகிறது சார். அதாவது "மாற்றுவது'
புரொபஸர்: ஆமாம். பாலில் தண்ணீர் கலந்து அது தண்ணீர்ப் பாலாக மாற்றினால் அது adulteration. பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்தாலும் அது adulteration தான். 
கணேஷ்: அப்போ adultery?
புரொபஸர்: அதே மூலசொல்லில் இருந்து தான் இச்சொல்லும் வந்தது. எப்படி பாலில் நீர் கலக்கிறதோ அதே போல திருமணமான ஓர் ஆள் தகாத உறவில் ஈடுபட்டு தன் நிலையை சீரழிப்பதனால் அது adultery ஆகிறது.
கணேஷ்: சார் அந்த The Lady with the Dog சமாச்சாரம்?
புரொபஸர்: ஓ... ஆமா. அதை "நாயுடன் கூடிய சீமாட்டி' என மொழியாக்கினார்கள். Do you get the joke?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com