தன்னிலை உயர்த்து! - 21

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதை இது. கடலை ஒட்டிய ஒரு கிராமம். அக்கிராமத்தின் கடற்பரப்பில் ஒரு கிணறு. அக்கிணற்றினுள் நிறைய தவளைகள் வசித்து வந்தன.
தன்னிலை உயர்த்து! - 21

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அருளிய கதை இது. கடலை ஒட்டிய ஒரு கிராமம். அக்கிராமத்தின் கடற்பரப்பில் ஒரு கிணறு. அக்கிணற்றினுள் நிறைய தவளைகள் வசித்து வந்தன. ஒரு நாள் கடலில் உருவான ராட்சத அலையில் சிக்கிய தவளை ஒன்று கிணற்றுக்குள் வந்து விழுந்தது. கிணற்றுத் தவளை ஒன்று கடல் தவளை அருகில் வந்தது. ""யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?'' என்றது. ""நான் கடலிருந்து  வருகிறேன்'' என்றது, கடல் தவளை. ""கடலா? அது என்ன ?''  என்ற கிணற்று தவளையின் கேள்விக்கு ""கடல் மிகப் பெரியது'' என்றது கடல் தவளை. கிணற்றுத் தவளை, ஒரு இரண்டு முறை தாவி, ""உனது கடல் இதை விடப் பெரிதா?''  என்றது. ""ஆம்! அது இதைவிடப் பலகோடி மடங்கு பெரியது'' என்றது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மீண்டும் ஒரு பத்து முறை தாவி, ""இப்பொழுது  சொல்! உண்மையிலேயே உனது கடல் இதைவிடப் பெரிதாக இருக்குமா?'' என்றது. ""ஆம்!''  என்று சொன்ன கடல் தவளை மீது கோபம் கொண்டது கிணற்றுத் தவளை. 

""நான் வாழ்கின்ற கிணற்றினை விட உனது கடல் பெரிதாக இருக்க முடியாது. நண்பர்களே!  இவனைக் கொன்று விடுங்கள்!'' என ஆணையிட பிற கிணற்றுத் தவளைகளின் தாக்குதலில்  கடல் தவளை கல்லறையானது.

தான் வாழ்கின்ற இடம், தனக்கென்று ஒரு பகுதியைத்  தெரிந்து வைத்துக் கொண்டு அது தான் உலகம் என்று  சொல்லிக் கொள்பவர்களுக்கு இக்கதை ஒரு சாட்டையடி.  " "இந்த உலகம் ஒரு புத்தகம், பயணிக்காதவர்கள் இப்புத்தகத்தின் ஒரே ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்'  என்கிறார் தத்துவ மேதை புனித அகஸ்டின்  அவர்கள். 

பயணம் மிக அவசியமானது. பயணம் என்றதும் அறியாமலேயே நமது மனது ஆனந்தமாடும்; உள்ளத்தில் ஒரு புதுவானம் விரிந்து காட்டும்; கனவில் காணாத நனவுகள் காட்சியுறும்; புதிய மொழிகள் காதினில் ரீங்காரமிட்டு நாவினில் தவழ்ந்து பழகும்; பழகாத பதார்த்தங்கள்  நேசம் கொள்ளும்.  நட்பின் கைகள் உலகெங்கும் வலுக்கும்.  புதுக் கலாசாரங்கள் கைகோர்க்கும். பழகிப் போன வாழ்கையை புதுப்பிக்கும்;  மொத்தத்தில் பயணங்கள் மனிதனின் மனதை வெள்ளையடித்துப் பளிச்சிடச் செய்யும்.   

பயணத்தின் ஆசைகள் தள்ளாத வயதிலும் தளிர்விடும். முதுமையை இளமைப் படுத்தும். முயற்சியை முன்னிறுத்தும். ஓர் எழுபத்தி நான்குவயது முதியவருக்கு  தனது இளைமைக்காலத்தில் ஒரு போர் விமானியாக வேண்டுமென்ற  ஆசை இருந்தது. அந்த ஆசை நிறைவேற்றப்படும் என்று விமானப்படையினர் தெரிவிக்க, மருத்துவ பரிசோதனையில் அவரது உடம்பு ஒரு பைலட்டின் உடல் வாகினைப் போல் இருப்பதாக சான்று கிடைத்தது. ஒலியினை விட இருமடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் தயாராய் இருந்தது. பைலட்டுடன் கோ- பைலட்டாக விமானி அணியும் ஜீ-சூட் அணிந்து அவர் பயணித்தார். 

ஒரு "பக்' "பக் " இதயத்தோடு இந்திய தேசமே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க, ஒரு முப்பத்தாறு நிமிடங்கள் அதிவேகப் பயணத்தை அசாத்தியமாய் முடித்துக் கொண்டு, ஒரு குழந்தையின் மகிழ்வோடு கீழே இறங்கினார்.  வெற்றியோடு புன்னகைத்தார். அவர் தான் 2006 -ஆம் ஆண்டு ஜீன் மாதம் 8 ம் தேதி விண்ணில் பறந்த நம் மண்ணின் ஒப்பற்ற ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.அவரது பயணக் கனவு நனவானது. அவரது வாழ்வும் நம்பிக்கையின் வடிவானது. பயணம் அவருக்கு பரிசாய் அமைந்தது.

பயணித்துப் பாதை மாறினால் மூடர். பயணித்துப் பார்வை அகன்றால் மனிதன். பயணித்துப் புதுப்பாதை உருவாக்குபவனே சிறந்த தலைவன். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915- ஆம் ஆண்டில் இந்தியா திரும்பிய காந்தி அவர்கள், சுதந்திரப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  அப்பயணத்தின் மூலம் சுதந்திரத்தினைப் பற்றி படித்தவர்களும், பணக்காரர்களும் பேசிக் கொள்கிறார்களே தவிர, பாமர மக்கள் அறியவில்லை  என்பதை உணர்ந்தார். சுதந்திரக் கனலை பட்டி தொட்டியெங்கும் பாய்ச்சிடத் துணிந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில்  இந்தியாவில் அதிக சுற்றுப் பயணம் மேற்கொண்ட தலைவர் காந்தியே ஆவார். பயணத்தின் பாதைகள் ஒன்றாக இருப்பினும் பயணிகளின் பார்வை வேறுபடவில்லையெனில் அது இருண்ட பயணமே.  1921 -இல் இரண்டாவது முறையாக  மதுரைக்குப் பயணித்த போது மகாத்மா அரையாடைகளில் தொழிலாளிகள் வயல்களில் உழுவதைக் கண்டார். அவர்களைக் கண்டு தன் மேலாடையைத் துறந்தார். தொழிலாளர்களின் தோழனானார். பயணத்தில் பார்வை வேறுபடுகின்றபோது, புதியசிந்தனை உருவாகும்.  அச்சிந்தனைகளே புதிய பாதையை வகுக்கும். 

நூறு புத்தகங்களைப் படிப்பதைவிட ஓரு பயணம் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். சீன நாட்டில் கடல் கடந்து செல்லக் கூடாது என்றும் நாடு விட்டு நாடு செல்வது பாவம் என்ற எண்ணம் இருந்தது. ஆனாலும் ஒரு 32 வயது நிரம்பிய இளைஞனுக்கு இந்திய தேசத்தைப் பற்றியும், இம் மண்ணில் வாழ்ந்த புத்தரைப் பற்றியும் தெரிந்து  கொள்ள உள்ளூர ஆசை . அவரது பயண ஆசை ஆண்டாண்டு காலமாக இருந்த மூடச்சங்கிலியை உடைத்தெறிந்தது. பயணித்தார் அவ்விளைஞர். கடுங்குளிர்  பனிமலை   அவரைத் தோளில் தாங்கியது. காடுகள் பசுமைக் கம்பளம் விரித்து வரவேற்றன. நதிகளோ படகானது.

பயணத்து மகிழ்ச்சியில் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் அனுபவங்களாயின. காண்பவையெல்லாம் பாடமாயின.  நிறைய கற்றுக் கொண்டார். புத்த மடாலயங்கள் அவருக்கு புனித யாத்திரை தலங்களாகின. புத்தத் துறவிகளோடு  நிறைய அளவளாவினார். புது சிந்தனைகளைச் சேகரித்தார். பக்கங்களில் எழுத்தாணியால் நிறைத்தார்.  அவரது பயணக் குறிப்புகள்   இந்திய வரலாற்றின் ஒரு பொக்கிஷமானது. 

தனது இந்தியப் பயணத்தினை முடித்துக்கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்பினார்.  அன்று சாபமிட்டவர்கள் அனைவரும் பட்டுக் கம்பளம் விரித்துக் காத்திருந்தனர்.  ""யுவான் சுவாங் வாழ்க!''  என்ற பாராட்டு விண்ணைப் பிளந்தது.  யுவான் சுவாங்கின்  பயணம் இந்திய-சீன வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே பரிணமிக்கிறது.

பயனுள்ளதாக இருப்பதுவே பயணம்.  பொழுது போக்குப் பயணம், கால விரயம். இலட்சியத்தை நோக்கிய பயணம் வாழ்வின் அர்த்தமாகும்.  அறிந்து கொள்ள  பயணிப்பதுவே  அற்புதங்களை உருவாக்கும்.  

1890 ஆம் ஆண்டில் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான நரேந்திரர் ஒரு நீண்ட சுற்றுப் பயணம் தொடங்கினார்.  அவரது பயணத்தில் இந்தியாவில் ஏழைகளின் குடிசைகளிலும், மன்னரின்  அரண்மனைகளிலும் தங்கினார்.

அப்பொழுதுதான்  அவருக்கு  இந்திய  தேசத்தின் கலாச்சாரம் கைவசமானது. "ஒரு சிறந்த கல்வியை பயணத்தின் மூலம் தான் கற்றுக் கொண்டேன்' என்ற அமெரிக்க நாட்டு பத்திரிகையாளர் லிசா லிங்கின் வரிகளுக்கேற்ப அன்றைய பாரத மண்ணினை பாழ்படுத்திய சாதி  கொடுங்கோலையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும்  கவனித்தார்.  இந்திய தேசத்தைப் புனரமைக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.

அப்பயணத்தில் அவரது மனதில் ஏற்படுத்திய  மாற்றங்கள்தான் நரேந்திரன் என்னும் சீடரை "விவேகானந்தர்' என்னும் வீரத்துறவியாக்கியது.  எனவே, உண்மையான பயணங்கள் புதிய இடங்களைப் பார்ப்பது அல்ல.  அது புதிய பார்வையை ஒரு மனிதனுக்குள் உருவாக்குவதோடு, பயணிப்பவரையே அறிந்து கொள்ள  வைக்கும் ஒர் அற்புதப் பரிசாகும். 

 ""முடிவில்லாத பயணங்களையே விரும்புகிறேன்'' என்றார் அறிவியல் உலகின் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 

அன்றாட வாழ்க்கைக்காகவே பயணித்த ஓர் இளைஞன் ஒரு ஞானியைக் கண்டான்.  அவரிடம் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி கேட்டான்.  அவர் அவனுக்கு ஒரு பாதையைக் காட்டினார். அப்பாதையில் பயணித்தான். அங்கே ஒரு வெள்ளிச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. அதன் மூலம் அவனது குடிசை வீடு காங்கிரீட்  ஆனது.  நடைப்பயணம் மாறி இருசக்கரமானது.

நாட்கள் நகர்ந்தன. அவன் வாழ்வை மேலும் மேம்படுத்த ஆசைப்பட்டான். மீண்டும் ஞானியிடம் வந்தான்.  ஒரு புதிய பாதையைக் காட்டினார், ஞானி. இளைஞன் பயணித்தான். அங்கே ஒரு தங்கச் சுரங்கத்தில் பணி செய்தான். வாழ்க்கை மாளிகையாய் உயர்ந்து, காரிலே பயணம் செய்தான்.  ஒரு நாள் மனதினுள் ஒரு கேள்வி எழ, ஞானியைச் சந்தித்தான். 

""சுவாமி! எனது வாழ்க்கையை உயர்த்த புதிய பாதைகளைக் காட்டிய நீங்கள், உங்களது வாழ்க்கைக்கென்று ஏதும் செய்யாமல் இங்கேயே அமர்ந்திருந்திருக்கிறீர்களே? என்றார். ஞானி  மௌனம் கலைந்து, ""புறவாழ்க்கையை மேம்படுத்த தங்கச் சுரங்கத்தை நோக்கிப் பயணிக்கலாம். அக வாழ்க்கையை மேம்படுத்த மனச் சுரங்கத்தை நோக்கியே பயணிக்க வேண்டும்.   அதனை நோக்கியே  நான் பயணிக்கிறேன்''  என்றார். வெளிப்புறப் பயணங்களும் அகம் நோக்கிய பயணங்களும் இணைந்தே ஒரு மனிதனை நீட்சியடையச் செய்கின்றன என்பதை உணர்ந்தார் இளைஞர்.

எல்லாப் பயணங்களும் பயணியே அறியாத ஒரு ரகசியமான  இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன' என்ற யூதத் தத்துவ ஞானி மார்ட்டின் பூபரின் வரிகளுக்கேற்ப பயணங்கள் புதிரான விடையைத் தரும்.

பயணம் புரிந்தால் உலகம் புரியும்!
பயணத்தின் முடிவில் வாழ்க்கை தெரியும்!

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com