இதோ ஓர் இளம் விஞ்ஞானி!

கணிப்பொறி நிறுவனமான இன்டெல் 2004-இல் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடத்திய சர்வதேச அளவிலான
இதோ ஓர் இளம் விஞ்ஞானி!

கணிப்பொறி நிறுவனமான இன்டெல் 2004-இல் அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடத்திய சர்வதேச அளவிலான அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி அது (ISEF). அதில் இடம்பெற்ற விண்வெளி அறிவியல், உயிரி வேதியியல் படைப்புகளில் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்யச் சென்ற நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து கண்காட்சிக்கு வந்திருந்த எல்லாரும் திகைத்தனர். ஏனெனில், அப்போது அவனுக்கு வயது 15 மட்டுமே. அந்த நடுவர் குழுவில் நாஸா விஞ்ஞானிகளுடன் அவன் இடம் பெற்றிருந்தான். 
பள்ளிப் படிப்பு கூட முடிக்காத அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை, இந்தியாவைச் சேர்ந்த பிரவீண்குமார் கோரகாவி தான். அவனை நடுவர் குழுவில் சேர்ப்பதற்கு வித்திட்டவை, இளம் வயதில் அவன் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்புகளே. அவன் உருவாக்கிய 40,000 ஆண்டு நாள்காட்டியும், குடிநீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பமும், உணவுப் பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பமும் அவனது கண்டுபிடிப்புகளில் சில. 
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக இருந்த ஹைதராபாத்தில், 1989 மே 24-இல், கோரகாவி- ராமலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகனாக பிரவீண்குமார் பிறந்தார். பிரவீணின் அண்ணன் பவன்குமார் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்.
பிரவீண்குமார் தனக்கு 13 வயதாக இருந்தபோது 3,000 ஆண்டுகளைக் கணக்கிடும் நாள்காட்டி ஒன்றை உருவாக்கினார். பொது யுகத்துக்கு முந்தைய 1,500 ஆண்டுகளில் தொடங்கி பொது யுகத்துக்குப் பிந்தைய 1,500 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்துக்கான நாள்காட்டி அது. அதன்மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியில் என்ன கிழமை இருந்தது என்பதை அறிய முடிந்தது. அதனை வடிவமைக்க 27 கணித சூத்திரங்களை பிரவீண் பயன்படுத்தினார். 
மிக விரைவில் அதனை மேலும் மேம்படுத்தி, சுமார் 40,000 (பொ.யு.மு. 20,000 முதல் பொ.யு.பி. 20,000 வரை) ஆண்டுகளுக்கான நாள்காட்டியாக வடிவமைத்தார் பிரவீண். இதற்காக "லிட்டில் மாஸ்டர்' என்ற பட்டமும் "பாலரத்னா' என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டன. 
அடுத்த ஆண்டே, 31,000 ஆண்டுகளுக்கான நாள்காட்டியை பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி முறையில் அவர் வடிவமைத்தார். அதனை ஆந்திர அரசு வெளியிட்டது. இந்த நாள்காட்டிகள் சிங்கப்பூரில் உள்ள அறிவியல் மையத்திலும், ஹைதராபாத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
அடுத்து, ஏவுகணையில் உந்துவிசை எரிபொருளாக சாதாரண மெழுகைப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தார் பிரவீண். அதனை, 2004-இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் (டிஆர்டிஓ) ஹைதராபாத்- இம்ராத் மையத்தில் செயல் விளக்கமும் செய்து காட்டினார். அப்போது நேரில் அதைப் பார்வையிட்ட அந்நிறுவனத்தின் தலைவரும் விஞ்ஞானியுமான வி.கே.சாரஸ்வத் பாராட்டினார். அதையடுத்து அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் "பாலஸ்ரீ' விருதை வழங்கினார். 
இந்நிலையில், ஊனமுற்றோருக்கான செயற்கைக்காலை குறைந்த செலவிலும், தொடைக்கு மேல் பொருத்தி மடக்கக் கூடிய விதமாகவும் தயாரித்தார் பிரவீண். அதன் எடை 1.5 கி.கி. மட்டுமே. அதனைப் பொருத்திக்கொண்டால் 20 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இந்தத் தொழில்நுட்பத்தை அவர் ஆந்திர அரசின் கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைத்தார். அம்மாநில அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதற்காக ஆந்திர மாநில அரசு "யுகாதி கெளரவ் புரஸ்கார்' விருதையும், இந்திய அரசு தேசிய அறிவியல் பதக்கத்தையும் (2004) பிரவீணுக்கு வழங்கின. 
பிறகு உணவு கெடாமல் பாதுகாக்கும் கருவியையும், குறைந்த செலவில் உப்புநீரை நன்னீராக மாற்றும் தொழில்நுட்பத்தையும் அவர் உருவாக்கினார். நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறியும் செயற்கைக்கோளை வடிவமைத்து அதனை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸôவிடம் வழங்கினார் பிரவீண். மேற்படி கண்டுபிடிப்புகளால் நாஸா விஞ்ஞானிகளின் பாராட்டையும் பெற்றார். 
இந்தக் கண்டுபிடிப்புகளால் அடைந்த புகழே அவர் இளம் வயதில் சர்வதேச அறிவியல் கண்காட்சியில் நடுவராகச் செயல்படும் தகுதியை அவருக்கு வழங்கின. அவர், இளம் விஞ்ஞானி, வேதிப் பொறியியலாளர், கண்டுபிடிப்பாளர், பலதுறை வல்லுநர், பிறவி மேதை, தொழில்நுட்ப ஆலோசகர் எனப் பல பரிமாணங்களை உடையவராகப் போற்றப்படுகிறார். 
பிறகு உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பயின்று வேதிப் பொறியியலில் பட்டம் பெற்ற பிரவீண், கல்லூரிக் காலத்திலும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். வேதியியல், வேதிப் பொறியியல், ஒளிப் பொறியியல், கணக்கு, இயற்பியல் உள்ளிட்ட துறைகளிலும் பயன்பாட்டு அறிவியலிலும் அவரது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. 
எத்தனாலில் இருந்து உயிரி எரிபொருளை புதிய முறையில் உற்பத்தி செய்யும் நவீனத் தொழில்நுட்பத்தை (Ligno cellulosic Bio Fuel Technology) அவர் 2009-இல் உருவாக்கினார். தொடர்ந்து, 2011-இல் இன்ஃபோசிஸ் நிறுவனம், ஆப்பிரிக்க கிளிமஞ்சாரோ பார்வையற்றோர் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து, பார்வையற்றோருக்கான மிக குறைந்த விலையிலான பிரெய்லி டைப்ரைட்டரை (Mechanical 
Braille Embosser) வடிவமைத்தார். 
பல வண்ண நகப்பூச்சுக் கருவி, சூரிய ஒளி நிறப்பிரிகையை இருகூறாக்கும் கருவி (2012), உணவு பாதுகாக்கும் பொருள் (VascaMode), திரவப் பொருள் பேக்கிங் தொழில்நுட்பம், மின் பல்துலக்கியில் பயன்படும் திரவப் பீய்ச்சு தொழில்நுட்பம், கசங்காத ஆடைக்கான துணி வடிவமைப்பு, 256 நிறங்களில் எழுதும் பேனா உள்பட பல புதிய கண்டுபிடிப்புகளை பிரவீண் உருவாக்கினார். 
விண்வெளியின் சிறுகோள் மண்டலத்தில் (Asteroid Zone) இரு புதிய கோள்களை தொலைநோக்கியால் கண்டறிந்து அது குறித்த அறிக்கையை மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்துக்கு பிரவீண் அனுப்பியுள்ளார். அதனை விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்கிறார்கள். 
2017 அக்டோபர் நிலவரப்படி, அவரது 27 கண்டுபிடிப்புகள் பல்வேறு அரசு சார்பு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவரது 38 ஆராய்ச்சி அறிக்கைகள் சர்வதேச விஞ்ஞான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. 30-க்கும் மேற்பட்ட சர்வதேச மாநாடுகளில் அவர் பங்கேற்றுள்ளார். 7 சர்வதேச அங்கீகாரங்கள், 13 தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், அரசு உதவித் தொகைகளை இந்தச் சிறுவயதில் பெற்றவராக பிரவீண் திகழ்கிறார். 
தற்போது ஹைதராபாதில் உள்ள இந்திய வேதிப் பொறியியல் இன்ஸ்டிட்யூட்டில் டாடா ஆராய்ச்சிக் கழக உதவியுடன், ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்ந்துவரும் பிரவீண், சூரிய ஒளி மின்னாற்றலை சேமிக்கும் கருவியை மேம்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதுவரை 45 கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தியுள்ளார். பிரவீண்குமார் கோரகாவிக்கு இப்போது வயது 28. நோபல் பரிசு பெறுவதும் அவரது மற்றோர் இலக்கு. 
-வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com