எதிர்காலம்... அணு அறிவியல் படிப்புக்கு!

மாறி வரும் பருவநிலை காரணமாக இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் குறையும் சூழல் உள்ளது. சூரியஒளி மின்சார உற்பத்தியும் போதுமானதாகஇல்லை
எதிர்காலம்... அணு அறிவியல் படிப்புக்கு!

மாறி வரும் பருவநிலை காரணமாக இயற்கை வளங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரம் குறையும் சூழல் உள்ளது. சூரியஒளி மின்சார உற்பத்தியும் போதுமானதாகஇல்லை. இவை உலக நாடுகளை அணுமின் உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்கிறது. அதேநேரத்தில், அணுமின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பயமும் உள்ளது. பாதிப்புகள் இல்லாத அளவிற்கு தற்போது நவீன முறையில் பலகட்ட பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இப்போது 11 இடங்களில் உள்ள 22 அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் மேலும் பல அணுமின் உலைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
கடந்த 2017, ஏப்ரல் மாதம் முடிய சர்வதேச அளவில் 30 நாடுகளில் 449 அணுமின் உலைகள் இயங்கி வருகின்றன. 
இதையொட்டி, சர்வதேச அளவில் அணு ஆராய்ச்சி மற்றும் கல்வி முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியாவில், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், அணு ஆராய்ச்சி மையங்கள், முன்னணி பல்கலைக்கழகங்கள் அணுப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை அளித்து வருகின்றன.
Nuclear Engineering & Technology என்ற இந்த துறையில், அணுப்பிளவு பொருட்கள் மற்றும் பிளவு அமைப்பு, அணுப்பிளவு அமைப்பின் உள்வினை மற்றும் பராமரிப்பு, அணு உலைகள், அணுசக்தி கூடம், அணு போர்க்கருவிகள், அணு இணைவு, மருத்துவப் பயன்பாடு, அணு பாதுகாப்பு, கதிரியக்கம், வெப்பம் மற்றும் வெப்ப இயக்கவியல் போக்குவரத்து, அணு எரிபொருள், அணு கழிவு அகற்றம், அணு பெருக்கம், சுற்றுச்சூழல் கதிரியக்க பாதிப்புகள் குறித்த விரிவான கல்வி மற்றும் ஆய்வுகள் இருக்கும்.
இதன் இளநிலை படிப்பு 4 ஆண்டுகளைக் கொண்டது. இதில் சேர பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலப் பாடங்களைக் கொண்ட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும். முதுநிலை பாடத்திட்டத்தில் சேர Graduate Aptitude Test in Engineering 
(GATE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
நம் நாட்டில், பண்டிட் தீன்தயால் பெட்ரோலியம் பல்கலைக்கழகம்-குஜராத், ஐஐடி-மும்பை, கான்பூர், பாபா அணு ஆராய்ச்சி மையம், ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவனம்-மும்பை, GH Raisoni பொறியியல் கல்லூரி-நாக்பூர், காந்திநகர் அணுசக்தி பள்ளி-குஜராத், அமிட்டி அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்- நொய்டா, தமிழகத்தில் ஐஐடி-மெட்ராஸ், சாஸ்த்ரா, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட முக்கிய கல்வி நிறுவனங்களில் Nuclear Engineering & Technology பாடங்கள் உள்ளன.
அணு அறிவியல் படித்த இளநிலை பொறியாளர்களுக்கு இந்தியாவில் உணவு, உறைவிடம், வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு தொடக்கநிலை ஊதியமாக ரூ. 45 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. உயர்கல்வி, அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5.5 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண்டு ஊதியமாக ரூ. 55 லட்சம் தொடங்கி, ரூ. 1 கோடிக்கும் அதிகமாக பணிநிலைகளைப் பொருத்து வழங்கப்படுகிறது.
அண்மையில் சென்னையில் பேட்டியளித்த ரஷ்ய துணைத் தூதர் மிக்கைல் கார்ப்படோவ், வருங்காலத்தில் இந்தியாவில் அணு தொழில்நுட்ப நிபுணர்கள் அதிகம் தேவைப்படுவார்கள் என்றும், ரஷ்ய-இந்திய அணு ஒத்துழைப்பு திட்டத்தின் 30ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள், ரஷ்யாவில் உள்ள தேசிய அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் இலவசமாகப் படிக்க உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை ரஷ்ய அரசு கொண்டுவந்துள்ளதாகவும், எழுத்துத் தேர்வு, பொருளாதார நிலை அடிப்படையில் இந்த 5 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறியுள்ளதை அணு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ரஷ்யாவின் தேசிய அணு ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில், 4 ஆண்டுகள் இளநிலைப் பட்டம், 5.5 ஆண்டுகள் நிபுணர் பட்டம், 2 ஆண்டுகள் முதுநிலைப் பட்டம், 4 ஆண்டுகள் முதுநிலை பயிற்சி திட்டம் போன்றவற்றில் பல பிரிவுகளில் அணு அறிவியல் படிப்புகள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இந்த படிப்புகளைப் படித்து, வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com