சரக்கோட்பாட்டியல் நிபுணர்!

அணுவின் உள்கட்டமைப்பை ஆராயும் துறையான குவான்டம் இயங்கியல் (Quantum Mechanics) பல பிரிவுகளை உடையது. துகள் இயற்பியலும் (Particle Physics), சரக் கோட்பாடும் (String Theory) அவற்றில் முக்கியமானவை. 
சரக்கோட்பாட்டியல் நிபுணர்!

அணுவின் உள்கட்டமைப்பை ஆராயும் துறையான குவான்டம் இயங்கியல் (Quantum Mechanics) பல பிரிவுகளை உடையது. துகள் இயற்பியலும் (Particle Physics), சரக் கோட்பாடும் (String Theory) அவற்றில் முக்கியமானவை. 
இவ்விரண்டும் தனித்தனியே ஆராயப்படுபவை என்றாலும், இந்த இரண்டு கோட்பாடுகளும் சந்திக்கும் மையப்புள்ளியாக, இரண்டும் ஒத்துப்போகும் ஆய்வு விளக்கமாக கட்டமைப்பு சரக்கோட்பாடு (Topological String Theory) கருதப்படுகிறது. 
இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இந்திய விஞ்ஞானி ராஜேஷ் கோபகுமார். கணிதமும் இயற்பியலும் இணைந்த கலவையான இத்துறையில், உலக அளவில் மதிக்கப்படும் ஆராய்ச்சியாளராக ராஜேஷ் விளங்குகிறார்.
1967, டிச. 14-இல் கொல்கத்தாவில் பிறந்தார் ராஜேஷ். அவரது பெற்றோர் கோபகுமார்- ஜெயஸ்ரீ ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே படிப்பில் முதன்மை பெற்றவராக ராஜேஷ் மிளிர்ந்தார். 1987-இல் நடைபெற்ற ஜே.இ.இ. ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற ராஜேஷ் கான்பூர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தார்.
அங்கு இயற்பியலில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. பட்டம் (1992) பெற்ற அவர், இடைக்காலத்தில், 1991 கோடைக்காலத்தில், டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் வருகை ஆய்வு மாணவராகச் செயல்பட்டார். 
பட்ட மேற்படிப்பை அடுத்து, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். அங்கு அவருக்கு ஆய்வு நெறியாளராக, நோபல் பரிசு பெற்ற சரக்கோட்பாட்டியல் விஞ்ஞானியான டேவிட் ஜே.கிராஸ் வழிகாட்டினார். அங்கு ‘The Master field in Large N Gauge Theories’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1997-இல் பிஹெச்.டி. பட்டம் பெற்றார்.
அதையடுத்து, 1997-1998-இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திலும் முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வு மேற்கொண்டார். 1998 முதல் 2001 வரை, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் ஆய்வு மேற்கொண்டார். 
2001-இல் இந்தியா திரும்பிய ராஜேஷ், அலகாபாத்தில் உள்ள ஹரிஷ்-சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில் இணைப் பேராசிரியராக இணைந்தார். 2004-இல் பேராசிரியரான அவர், மார்ச் 2015-இல் ஹெச் படித்தரப் பேராசிரியராக உயர்ந்தார்.
இதனிடையே, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகை ஆய்வாளராகவும் (2001- 2004), இணைப்புப் பேராசிரியராக கான்பூர் ஐ.ஐ.டி.யிலும் (2003 -2006), மும்பை டி.ஐ.எஃப்.ஆரிலும் (2004- 2009) பணிபுரிந்தார். தவிர, ஐ.சி.டி.எஸ்- டி.ஐ.எஃப்.ஆரில் இணைப்புப் பேராசிரியராகவும் (2010- 2013), முதுநிலை ஆய்வாளராகவும் (2013- 2015) அவர் பணியாற்றினார்.
பெங்களூருவில் இயங்கும் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் துணை அமைப்பான சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தில் (ICTS-TIFR) 2015 ஏப்ரலில் முதுநிலை பேராசிரியராக இணைந்த ராஜேஷ், தற்போது அங்கு மைய இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். தவிர, பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் மதிப்புறு பேராசிரியராகவும் (2016- 2018) அவர் உள்ளார்.
அறிவியல் ஆய்வுப் பணிகள்:
சரக்கோட்பாட்டியல் விஞ்ஞானியாக பல முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் ராஜேஷ் கோபகுமார். அவரது ஆரம்பகட்ட ஆய்வுகள், என்- பெரு வரையறை கோட்பாடு (Large N Gauge Theories) தொடர்பாக டேவிட் கிராஸுடன் சேர்ந்து மேற்கொண்டதாகும். ஆண்ட்ரூ ஸ்ட்ரோமிங்கர், ஷிராஸ் மின்வாலா ஆகியோருடன் இணைந்து அவர் மேற்கொண்ட பரிமாற்றமில்லாத அளவை கோட்பாடு ஆய்வும் (Non Commutative Gauge Theory) முக்கியமானது.
இரானிய விஞ்ஞானி கம்ரன் வாஃபாவுடன் இணைந்து ராஜேஷ் மேற்கொண்ட கட்டமைப்பு சரக் கோட்பாட்டு ஆய்வுகள், அவருக்கு சர்வதேசப் புகழைத் தந்தன. அதன் விளைவாகக் கண்டறியப்பட்ட புதிய கருத்துருக்கள், கோபகுமார்- வாஃபா இருமை (Gopakumar- Vafa Duality), கோபகுமார்- வாஃபா மாற்றமிலிகள் (Gopakumar- Vafa Invariants) என்றே அழைக்கப்படுகின்றன.
அடுத்து குவான்டம் இயங்கியலின் ஒரு பிரிவான ஏடிஎஸ்/சிஎஃப்டி பொருத்தம் தொடர்பாகவும், அணுத்துகளின் குறைந்தபட்ச முப்பரிமாண வடிவமைப்பு தொடர்பாகவும் ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானியான மத்தியாஸ் காபர்டீலுடன் இணைந்து உயர் சுழற்சி கோட்பாடு தொடர்பாக அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தவிர உறுதியான புலக் கோட்பாட்டுக்குத் தீர்வு காணும் உலைவற்ற கணித முறை (Conformal Bootstrap) தொடர்பாகவும் ராஜேஷின் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 
ராஜேஷ் கோபகுமார் பல்வேறு தேசிய, சர்வதேச ஆய்வு அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார். பல கல்வி நிறுவனங்களிலும் அவரது பங்களிப்பு கல்வியாளராகத் தொடர்கிறது. சர்வதேச அளவில் சரக்கோட்பாடு தொடர்பாக விளக்கம் அளிக்க அழைக்கப்படும் சொற்பொழிவாளராக அவர் விளங்குகிறார்.
மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அகாதெமி (டி.டபிள்யூ.ஏ.எஸ்.) சார்பில் உலக இளம் விஞ்ஞானிகள் அகாதெமி (Global Young Academy) அமைக்கப்பட்டபோது அதன் நிறுவன உறுப்பினராக ராஜேஷ் இருந்தார். இந்திய அறிவியல் அகாதெமி, இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, டி.டபிள்யூ.ஏ.எஸ். ஆகியவற்றில் கூட்டு ஆய்வாளராக அவர் உள்ளார். 
1985-இல் தேசிய தனித்திறன் தேர்வில் விருது பெற்ற ராஜேஷ், 1992-இல் கான்பூர் ஐ.ஐ.டி.யில் சிறந்த மாணவர் விருது பெற்றார். அப்போது தொடங்கிய அவரது விருதுப் பயணம் இன்றும் தொடர்கிறது. உலக அளவில் பல்வேறு விருதுகளையும், கெüரவங்களையும் அவர் பெற்று வருகிறார்.
2004-இல் பி.எம்.பிர்லா விருது பெற்றார் ராஜேஷ். 2006-இல் இத்தாலியில் உள்ள சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் ஆய்வு மையம் ராஜேஷுக்கு ஐ.சி.டி.பி.- ஜி.சி.விக் விருது வழங்கி கெளரவித்தது. 2009-இல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது அறிவியல்- தொழிலக ஆராய்ச்சிக் கூட்டமைப்பால் வழங்கப்பட்டது. 
டி.டபிள்யூ.ஏ.எஸ்.ஸின் இயல் அறிவியல் விருது (2013), ஜி.டி.பிர்லா விருது (2013), இந்திய அரசின் ஜெகதீஷ் சந்திர போஸ் கூட்டு ஆய்வாளர் கெளரவம் (2015- 2020) ஆகியவற்றையும் ராஜேஷ் கோபகுமார் பெற்றுள்ளார்.
அணுவின் கட்டமைப்பை வரையறுக்க உலக விஞ்ஞானிகள் பலரும் பல வழிகளில் முயன்று வருகின்றனர். அதன்மூலமாக உலகின் தோற்றக் காரணத்தை அறிய விஞ்ஞான உலகம் போராடுகிறது. இந்நிலையில் இந்தியரான ராஜேஷ் கோபகுமார், குவான்டம் ஈர்ப்பு விசை தொடர்பான சரக் கோட்பாட்டியல் வாயிலாக தனது பணியைத் தொடர்கிறார். 
- வ.மு.முரளி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com