போட்டியிடுங்கள்... இயந்திரங்களுடன்!

இயந்திரமயமான இந்த உலகில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட பொருட்கள் எல்லாம் தற்போது அத்தியாவசியமானதாகிவிட்டன.
போட்டியிடுங்கள்... இயந்திரங்களுடன்!

இயந்திரமயமான இந்த உலகில் ஆடம்பரமாகக் கருதப்பட்ட பொருட்கள் எல்லாம் தற்போது அத்தியாவசியமானதாகிவிட்டன. நாம் நமது தேவைகளை சுருக்கிக் கொள்ள தெரியாமல் இயந்திரம் போல் ஓடத் தொடங்கி இருக்கிறோம். இந்நிலையில் தான் உலக பொருளாதார அமைப்பு நமக்கு ஓர் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரும் 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் 210 மில்லியன் அதாவது, 2 கோடியே 10 லட்சம் பேர் தங்கள் வேலையை, தொழிலை மாற்றிக் கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளது. தற்போதைய உலகம் மனித உழைப்பிற்கு இடையூறு விளைவிப்பதன் உச்சகட்டத்தில் இருப்பதாகவும் இதன் மூலம் 4- வது தொழிற் புரட்சி உருவாகும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிதான் எதிர்காலம் என கருதியதால் நாம் புதிய வளர்ச்சிப் பாதையை எட்டினோம். இதன் காரணமாக தானியங்கி கார்கள், ரோபோக்கள் என மனிதர்கள் செய்த பல பணி இடங்களில் இயந்திரங்கள் நுழைந்தது. ஒரு மனிதன் செய்த பணிகளை விட பலமடங்கு வேகமாகவும், துல்லியமாகவும், தளர்வின்றியும் இயந்திரங்கள் அந்த பணியை செய்வதால் அலுவலக வருகைப்பதிவேட்டில் தொடங்கி மனிதர்கள் செய்து வந்த பல்வேறு பணிகளை இயந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப் பறித்தன.

இதனால் வரும் 2030-ஆம் ஆண்டில் உலக அளவில் 8 கோடி பேர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் சார்பில் ஐ.டி தொழிற்துறையின் திறன்கள் பற்றி ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் உலகளாவிய திறன் இடைவெளிகளை எதிர்கொள்ளுதல் மற்றும் டிஜிட்டல் முன்னேற்றங்கள் காரணமாக ஏற்படும் வேலை சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. 

இதில் ஐப பிரிவில் 10 லட்சம் ஊழியர்களின் பணி பற்றி மறுபரிசீலனை செய்யும் முன்முயற்சியில் ஈடுபட்ட டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணி வகித்தன. இதுபோன்று பெரும்பாலான நிறுவனங்களில் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும் நாம் இதை கொஞ்சம் மாற்றி யோசித்தால் தனிமனிதனுக்கு பாதிப்பில்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தமுடியும்.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வேலையிழக்கும் சூழ்நிலையை எதிர்கொள்ள நமது திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும். செய்யும் பணி தொடர்பாக எந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டுமோ, அந்தத் திறமையை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். உதாரணமாக ஐடி பணியாளர்கள், அவர்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ள Cloud computing architecture - ஐ கற்றுக் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்விமுறையையும் மாற்றி அமைக்க வேண்டும். இன்றைய பாடத்திட்டமானது மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்துவதாகவும், தொழில் சார்ந்த கல்வியை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும். 

இயந்திரமயமாக்கல் வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சூழலில், அதற்கெதிரான படைப்பாற்றலை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் முன்னோக்கி யோசிக்கக்கூடிய திறன், புதுமையான அணுகுமுறைகளைக் கையாள்தல், மாற்றங்களை ஏற்றுக்கொள்தல், தடைகளைத் தகர்க்க வழிகாட்டுதல், சக ஊழியர்களுடன் இணக்கமான உறவு கொள்தல் போன்றவற்றை இயந்திரங்களால் ஒரு நாளும் செய்ய முடியாது.

இவற்றை மனதில் கொண்டு வருங்கால தலைமுறையினர் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சக மனிதர்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு தன்னை நிலை நிறுத்திய காலம் போய் இயந்திரங்களுடன் போட்டி போட்டு தன்னை, தன் திறனை நிரூபிக்க வேண்டிய பரிதாபத்தில் மனிதன் இருப்பதை என்னவென்று சொல்வது?

- திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com