மாறிவரும் விவசாயத் தொழில்நுட்பம்!

மாறிவரும் விவசாயத் தொழில்நுட்பம்!

ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் எல்லாத்துறைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இளைஞர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் எல்லாத்துறைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.  அவற்றைப் பற்றி இளைஞர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  தெரிந்து கொள்ளவில்லை என்றால்,  அத்தொழில் நுட்பங்கள் சார்ந்த எதையும் நாம் பயன்படுத்த முடியாது என்பதோடு,  அது தொடர்பான வேலை வாய்ப்புகளையும் நாம் பெற முடியாது.   இளைஞர்களாகிய நாம் எதிலும் அப்டேட்  ஆக இருக்க வேண்டியது அவசியம்.  இதோ விவசாயத்துறையில் கலக்கியுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தெரிந்து கொள்வோம்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் இந்தோ-இஸ்ரேல் தொழில்நுட்ப கூட்டு முயற்சியுடன் காய்கறி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பசுமைக் குடில், நிழல் வலைக்குடில், நிலப் போர்வை தொழில்நுட்பம் மூலம் காய்கறி சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வீரிய ஒட்டுரக நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் 3ஆயிரம் சதுர மீட்டரில் உயர்தொழில்நுட்ப பசுமைக் குடில் ரூ.1.74 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொழில்நுட்பம், ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் தான் தமிழகத்திலேயே முதன்முறையாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன், பசுமைக் குடிலின் தட்பவெப்ப நிலை குறிப்பிட்ட அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் 3 ஆயிரம் சதுர மீட்டரில் 12 லட்சம் நாற்றுகளை சீரான வளர்ச்சியுடன் உருவாக்க முடியும் என்பதோடு, தானியங்கி முறையில் நீர்த் தெளிப்பான் உள்ளிட்ட கருவிகள் செயல்படுவதும் இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு  அம்சம்.

இதுகுறித்து ரெட்டியார்சத்திரம்  காய்கறி மகத்துவ மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கோ.ஸ்ரீநிவாசன் மற்றும் தனியார் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர் கோபாலகிருஷ்ண நாயர் ஆகியோர் கூறியதாவது: 

""தரமான விதைகளைப்  பயன்படுத்தினாலும், நிலத்தில் தூவி நாற்றுகள் உற்பத்தி செய்யும் போதும், அதனைப் பறித்து வேறு இடங்களில் நடவு செய்யும்போதும் பலவிதமான இழப்புகள் ஏற்படுகின்றன. விதைகள் சரியாக முளைக்காமல் போய்விடலாம்.  நாற்றுகளைப் பறிக்கும்போது   வீணாகலாம். ஆனால்  குழித்தட்டு முறையில், நாற்றுகள் உற்பத்தி  செய்வதன் மூலம்  அந்த இழப்புகளைத்  தவிர்க்க முடியும். அதோடு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் நாற்றுகளைப் பராமரிக்கும்போது, அதன் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தரமானதாகவும் இருக்கும். அந்த வகையில், உயர்தொழில்நுட்ப பசுமைக் குடிலின் வெப்ப நிலை தக்காளி நாற்றுகளுக்கு 30  டிகிரி செல்சியசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடிலின்  வெப்ப நிலை 30 டிகிரியைவிட உயரும்போது, இங்கு பொருத்தப்பட்டுள்ள மின் விசிறிகளும், செல்லுலோஸ் பேடுகளும் தானாகவே  இயங்கி, தட்பவெப்ப நிலையை நிர்ணயிக்கப்பட்ட அளவில் தொடர்ந்து பராமரிக்கும். அதேபோல் குழித்தட்டுகளில், இயந்திரம் மூலமே விதைகள் போடப்படும். அந்த குழித்தட்டுகளில் பூம் இரிகேஷன் முறையில், ரிமோட் மூலம் எளிதாக  நீர் தெளிக்கப்படுகிறது. அதே தண்ணீரில் நாற்றுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துகளையும் கரைசலாக சேர்த்து பயன்படுத்தலாம்.

இத்தொழில்நுட்பத்தின் மூலம், 40ஆயிரம் குழித்தட்டு நாற்று களுக்கு, 78 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தி 3 நிமிடங்களில்  தண்ணீர்  ஊற்ற முடியும். அதேநேரத்தில், சரியான விகிதத்தில் அனைத்து நாற்றுகளுக்கும் தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்யலாம். 

இயந்திரம் மூலம் விதை ஊன்றும் போது, 10 பேர்  செய்ய வேண்டிய பணிகளை 3 பேரை மட்டும் வைத்து எளிதாக முடித்துவிடலாம். சமீப காலமாக, தோட்டக்கலை பயிர்களுக்கான காய்கறி, பழங்கள், மலர்ச் செடிகள், தோட்டங்களைக் கடந்து வீடுகளிலும் சிறிய அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால் நாற்று விற்பனை நிலையங்களும் அதிகரித்துள்ளன. 

தோட்டக்கலை  பட்டதாரிகள் மற்றும்  நாற்று உற்பத்தியாளர்களுக்கு இந்த தொழில்நுட்பம், எதிர்காலத்தில்  கட்டாயத் தேவையாக அமையும். தேவைக்கு ஏற்ப குறைந்த பரப்பளவிலும் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்'' என்றார்.

விரைவில் தோட்டக்கலை பட்டயப்  படிப்பு


ரெட்டியார்சத்திரம் மகத்துவ மையத்தில் தோட்டக்கலைத்துறையில் பட்டயப் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2ஆண்டு பட்டயப் படிப்புக்கு, 10ஆம்  வகுப்பு தகுதியின் அடிப்படையில் ஆண்டுதோறும் 50 மாணவர்களுக்கு சேர்க்கை  நடைபெறும். தோட்டக்கலையில் பட்டயம் பெறும் இளைஞர்கள், அரசு துறையில்  உதவித் தோட்டக்கலைத்துறை அலுவலராக பணிபுரியக் கூடிய வாய்ப்புள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்களிலும்  அதிக வேலைவாய்ப்புள்ளதாக தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com