குடிமகனின் தார்மீக கோபம்!

குடிமகனின் தார்மீக கோபம்!

"ஹாலிவுட்டின் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், கிறிஸ்டோபர் நோலன் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

"ஹாலிவுட்டின் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், கிறிஸ்டோபர் நோலன் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள், படங்களில் ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் உளவியல் ரீதியாக நகர்த்துவார்கள். சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு கேரக்டர், ஓர் இடத்தில் பதட்டமாகி, வாழ்வதற்காக ஓட ஆரம்பிக்கும். இந்தப் படத்திலும் அப்படி நிறைய இடங்கள் இருக்கும். கமர்ஷியல் விஷயங்களையும் கச்சிதமா "மிக்ஸ்' செய்திருக்கிறேன். என்ன நடக்கும் என்கிற பதற்றமும், த்ரில்லர் படங்களுக்கே உண்டான வேகமும் இருக்கும்.'' நம்பிக்கையாக பேசுகிறார் இயக்குநர் ராஜபாண்டி. "என்னமோ நடக்குது' படத்தின் மூலம் திருத்தமான கதைச் சொல்லி அதிர வைத்தவர். அடுத்து "அச்சமின்றி' மூலம் கவனம் தொட வருகிறார். 

"அச்சமின்றி' இன்றைய சமூக நிலைக்குத் தேவையான வார்த்தை.... கதை எப்படியிருக்கும்....?


த்ரில்லர் படம் என்பதால், தலைப்பு இன்னும் பலமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கு பொருத்தமான தலைப்புதான் "அச்சமின்றி.' அனுதினமும் லட்சம் மனித முகங்களையாவது கடந்து போகிறோம். இருந்தாலும் ஒவ்வொருத்தரும் தனி மனிதர்தான். பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்று கூடத் தெரியாத வாழ்க்கை. ஆனால் இங்கே யாரும் தனி மனிதர் இல்லை. ஒவ்வொருவரை சுற்றியும் ஒரு வலை இருக்கிறது. கல்வி, அரசியல், தீவிரவாதம், மதம், ஜாதி இப்படி ஏக வலைகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. இதுதான் இந்த படத்தின் லைன். கதை பேசும் பொறுப்புணர்ச்சி ரொம்பவே முக்கியமானது. ஆனால், அது பிரசாரமாக இல்லாமல் பின்னப்பட்டிருப்பதுதான் இதன் ப்ளஸ். படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது, இது ரொம்பவே முக்கியமான படம் என நினைப்பீர்கள். அந்த அளவுக்கு திரைக்கதையின் சாராம்சங்கள் உங்களை கவர்ந்திழுக்கும். 

கதையின் பேசு பொருள் என்ன...?


எழுத்தோ, சினிமாவோ எதுவாக இருந்தாலும் அதை அனுபவிக்கிறவனின் மூளைக்குள் தீக்குச்சி கொளுத்த வேண்டும் என எப்போதோ படித்த வரிகள்தான், நான் ஒவ்வொரு சினிமா செய்யும் போதும் உத்வேகம் தருகிறது. அந்த விதத்தில் என் முதல் படமான "என்னமோ நடக்குது' பல அதிர்வுகளை உண்டாக்கியது. பல இடங்களிலும் நல்ல வரவேற்புகள். அந்த உற்சாகத்தில் அடுத்து நான் செய்கிற படம்தான் இது. விஜய்வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே இந்த மூன்று பேரைச் சுற்றிதான் கதை. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தேடல். தனித்தனி வாழ்க்கை. ஒரு சூழலில் இந்த மூவரையும் ஒரு கும்பல் துரத்த ஆரம்பிக்கிறது. ஏன் என்றே தெரியாமல் ஓடுகிற மூவரும் சந்திக்கிற போதுதான், அந்த துரத்துலுக்கான காரண காரியம் தெரியவருகிறது. அந்த பின்னணியில் உள்ள அரசியல் சதிகளையும், ஊழல்களையும் கடந்து அவர்கள் வெளியே வந்தார்களா என்பதே திரைக்கதை. இந்திய கல்வி முறையின் மீது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற  தார்மீக கோபம்தான் இதன் இன்னொரு முகம். அது எடுத்து வைக்கிற அம்சங்கள் ஒவ்வொன்றும் எல்லோருக்கும் புதிதாக இருக்கும். அவைகள் என்னவென்று இப்போது சொன்னால் சுவாரஸ்யம் குறைந்து போய் விடும்.


விஜய் வசந்த் கூட தொடர்ந்து இரண்டாவது படம்...?   


"என்னமோ நடக்குது' படம் முடிந்ததும், ஒரு மலையாள படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்றுஅதை தமிழில் இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. ஒருநாள் திடீர் சந்திப்பில், விஜய் வசந்திடம் இந்தப் படத்தின் கதையைச் சொன்னேன். சில நிமிடங்களிலேயே இந்த கதை அவருக்கு பிடித்து விட்டது. இந்தக் கதையை நேரடியாகச்  சொன்னால், பாடம் எடுக்கிற மாதிரி ஆகி விடும். 


நீங்கள் கமர்ஷியலாக மாற்றினால் கேட்கவே நன்றாக இருக்கும் என்று சொன்னார். இப்போதைய சினிமா நிலைக்கு அதுவும் முக்கியம்தானே. அதையும் உணர்ந்து கமர்ஷியல், காதல் என சில அம்சங்களை உள்ளே வைத்தேன். அப்படி உரு பெற்றதுதான் இந்தக் கதை. விஜய் வசந்த்க்காக மட்டுமே கதை எழுதாமல், எனக்கென இருக்கும் சில பொறுப்புகளை உணர்ந்தும் இதை எழுதியிருக்கிறேன். 


சமுத்திரக்கனி இப்போதெல்லாம் அவ்வளவு எளிதாக படங்களை ஒப்புக் கொள்வதில்லை... கதை, கேரக்டர் எல்லாவற்றிலும் அவர் தீர்க்கமாக இருக்க வேண்டிய நேரம் இது...? 


ஆமாம், அதை உணர்ந்தே இருக்கிறேன். சமுத்திரக்கனிக்கு என்னுடைய "என்னமோ நடக்குது' படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த அவர், என்னை அப்படி பாராட்டினார். "இது போல் தீர்க்கமான, தெளிவான திரைக்கதை எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் வரும்'' என பாராட்டி இருந்தார். அவரின் பாராட்டும், அக்கறையும் பிடித்திருந்தது. இயக்குநர், நடிகர் என்பதை தாண்டி அவருக்குள் இருக்கும் பொறுப்புணர்வும் கவர்ந்திருந்தது. அதனால், இந்தக் கதை எழுதும் போதே, அவரை மனதில் ஏற்றிக் கொண்டேன். அதே போல் சிருஷ்டி டாங்கே, கருணாஸ், ராதாரவி என நம்பிக்கையான கலைஞர்களின் பங்களிப்பு இதற்கு பெரும் பலம். இசைக்கு பிரேம்ஜி அமரன். விளையாட்டு பிள்ளை என்றாலும், கவனிக்கிற மாதிரி இசை கொடுத்துள்ளார். யுகபாரதியின் வரிகளில் வந்துள்ள பாடல்கள் இந்தப் படத்துக்கு முதல் உற்சாகம். 


- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com