சிவகார்த்திகேயனுக்கு பிரச்னை கொடுத்தது யார்?

விஜய், அஜித்துக்கு அடுத்தபடியான மார்க்கெட்டில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். பெயரைச்....
சிவகார்த்திகேயனுக்கு பிரச்னை கொடுத்தது யார்?

விஜய், அஜித்துக்கு அடுத்தபடியான மார்க்கெட்டில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். பெயரைச் சொன்னால், ஏரியா அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடுகிற நிலைக்கு உயர்ந்து வந்திருக்கிறார் சினா கானா. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான "ரெமோ', குறிப்பிடத்தகுந்த வசூலை வாரி குவித்துள்ளது. இதன் வெற்றியில் பங்கெடுத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு, படத்தின் தயாரிப்பாளர் 24 ஏ எம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா ஏற்பாடு செய்திருந்தார். தமிழக அளவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த விநியோகஸ்தர்கள் முதலில் கௌரவிக்கப்பட்டார்கள். திருப்பூர் சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒவ்வொருவராக நன்றி தெரிவித்து பேசினர்.

படத்தில் பங்கெடுத்த கே.எஸ்.ரவிகுமார், சரண்யா பொன்வண்ணன், கீர்த்தி சுரேஷ், "யோகி' பாபு, சதீஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவு இயக்குநர் ரசூல்பூக்குட்டி உள்ளிடோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வந்தனர். இறுதியாக பேச வந்தார் சிவகார்த்திகேயன். மைக் பிடித்ததும், நா தழு தழுத்து கண் கலங்கினார். பிரம்மாண்ட வெற்றிகாகத்தான் கண் கலங்குகிறார் என மொத்த அரங்கமே அமைதியில் நிறைந்தது. ஆனால், அவரது கண்ணீருக்குள் இருக்கும் ரகசியத்தை உடைத்து வார்த்தைகள் வெளிப்பட்டன... ""ஒரு படத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, அதையே சுற்றி சுற்றி ஓடி வேலை செய்து, நானும் எங்கள் குழுவினரும் தவறு செய்யாத போதும், படம் வெளிவருமா என்ற சந்தேகம் இருந்தது. 18 மணி நேரம் வேலை, அதன் பிறகு குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராஜாவை அவர் குடும்பத்தோடு நான் பார்த்தது கூட இல்லை. என்னை நம்பி படம் தயாரிக்க வந்தார். நிறைய கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு அவர் வந்திருக்கிறார். சொந்தமாக கார் கூட இல்லாதவர். இந்தப் படம் ரிலீஸ் வரைக்கும் எவ்வளவோ பிரச்னையை கொடுத்தார்கள். யாரென்று அவர்களுக்கே தெரியும். ரசிகர்களுக்காக மட்டும்தான் படம் எடுக்க வந்திருக்கிறோம். வேறு யாருக்காகவும் இல்லை. எங்களை வேலை செய்ய விடுங்கள்.

யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு இது. எங்களுக்கு நீங்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம். ஆனால் வேலை செய்வதை தடுக்காதீர்கள். நான் யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்'' என்று பேசி முடித்தார் சிவகார்த்திகேயன்.

"ரெமோ' படத்துக்கு முன்பாக இரு பெரிய தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் தருவதாக கூறி, முன் தொகை பெற்றதாகவும், பின்னர் அதிலிருந்து விலகி "ரெமோ' படத்தில் ஒப்பந்தமானதாகவும் கூறப்படுகிறது. பெற்ற முன் தொகையை கொடுத்து விட்ட நிலையில், அந்த நிறுவனங்கள் "ரெமோ' படத்துக்கு பிரச்னைகள் உருவாக்கியதாக தெரிகிறது. மீண்டும் அந்த நபர்கள் தொல்லைக் கொடுத்தால், அவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும் சிவகார்த்திகேயன் தயாராக இருப்பதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com