பெண்ணென்று எண்ணி பிசகத் துணிவரோ!

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா... இலக்கியத் தமிழ் பயின்றவர்க்கு இது குறித்து தெரிந்திருக்கும்.
பெண்ணென்று எண்ணி பிசகத் துணிவரோ!

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா... இலக்கியத் தமிழ் பயின்றவர்க்கு இது குறித்து தெரிந்திருக்கும். கட்டிய கணவனை கவனித்துக் கொண்டிருந்ததால், தனக்கு பிச்சையிட தாமதித்து நிற்க வைத்த தமிழ்ப் பெண்ணை கோபக்கார முனிவர் ஒருவர் சாபமிட முனைகிறார். பார்ப்பதை பொசுக்கிவிடும் பலத்த கோபம் அவருடையது. தன்னை கோபத்துடன் நோக்கிய அந்த முனிவரைத்தான் நம் தமிழ்ப்பெண் கொக்கென்று நினைத்தாயோ என கேட்டு நகைக்கிறாள்.

இவர் மீது தெரியாது எச்சமிட்ட கொக்கினை, அது அறியாது செய்த அற்ப பிழைக்காக தன் பார்வையால் சற்று முன்னர் சாம்பலாக்கி விட்டிருந்தார். சாதாரண பின்புலம் கொண்ட சராசரி குடும்பப்பெண் ஏற்கெனவே நடந்ததை ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டு பயமின்றி அவரிடம் எதிர்க்கேள்வி விடுத்ததால் வியந்து நிற்கிறார் அந்த வினயமான முனிவர். கணவன்பால் அன்பு கொண்ட கற்புத் திறனாலும், உணர்ந்து தெளிந்திருந்த அறிவின் சக்தியாலும் எங்கோ நடந்ததை அறிந்து கொண்டதோடு இவள் பெண்தானே என எண்ணி எரித்துவிட முனைந்த முனிவரின் கோபத்தை முறித்துவிட்ட இப்பெண்ணே தைரியப் பெண்ணின் அடையாளமாகிறாள்.

பெண் என்றால் அவளுக்கு வெளியுலகம் தெரிவதில்லை நாட்டு நடப்புகளை அவள் கேட்டுப் பழக்கமில்லை என்ற கற்பித வரையறைகள் காலங்காலமாய் தொடர்கின்றன. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்றெண்ணித்தான் சந்தர்ப்பங்களை அவள் பக்கம் சாட விடுவதில்லை. சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் அனுபவம் பெறாத நிலையில் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் பெண்கள் இங்குண்டு. எளிதாக இவளை ஏமாற்றிவிடலாம் என அவநடத்தை கொண்டோர் அணுக நினைக்கிறார்கள். பரிவும் பாசமும் உள்ள பற்றாளர்களோ இவள் ஏமாந்து விடுவாளோ என்று மனம் பதைக்கிறார்கள்.

தன்னலத் திட்டங்கள் பல தீட்டிக் கொண்டு தமக்குரிய காரியம் சாதிக்க எண்ணி பொய்ச் செய்திகள் சொல்லி திசை திருப்பும் முயற்சிகள் பெண்களைச் சுற்றி சுழன்று கொண்டே இருக்கலாம். அறிவு எனப்படும் வாளினை ஏந்தி, ஞானம் என்றொரு கேடயம் தாங்கி ஏமாற்ற வரும் சக்திகளை எதிர்த்தே வீழ்த்த வேண்டும்.

இருபதுகளின் இடைக்காலத்தில் குறிக்கோளின் பாதையில் ஒருமித்த மனதுடன் பயணித்திருந்தேன். உள்நோக்கோடு வந்து, வலிய பேச்சு கொடுத்து திசை திருப்பும் வகையில் நிகழ்ந்ததொரு முயற்சியை முறியடித்த அனுபவம் எனக்கும் உண்டு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருடந்தோறும் நடத்தும் குரூப்}1 தேர்வுகளால் வருவாய் துறையின் துணை ஆட்சியாளர்களும், காவல் துறையின் துணை கண்காணிப்பாளர்களும், வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களும், கூட்டுறவுத் துறையின் துணை பதிவாளர்

களும், பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர்களும் தர வரிசையின்படி தேர்ந்தெடுக்கப்படுவர். அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கே துணை ஆட்சியராகப் பதவி கிட்டும். இதற்குதான் அனைவரிடமும் எதிர்பார்ப்பும் இருக்கும். தேர்வு பெறும் துணை ஆட்சியர்கள் பின்னர் ஒருநாளில் இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்) இணையவும் முடியும்.

முதனிலை, முதன்மைத் தேர்வுகளை வெற்றியோடு முடித்து நேர்முகத் தேர்வுக்காக சென்னைக்கு வந்திருந்தேன். இது நடந்தது 1991-ம் ஆண்டு. தாயாரும் உடன் பிறந்தோரும் கூட இருந்தனர். தேர்வாணைய வாசலில் காத்துக் கொண்டிருந்தோம். குடும்பத்தினர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க, நான் கடைசி நேர தயாரிப்புகளில் கவனம் கொண்டிருந்தேன்.

அப்போது 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் அங்கு வந்தார். எனது பெயரைச் சொல்லி இங்கு இருக்கிறாரா என கேட்டார். இதனை கவனித்த எங்களின் தாயார் என்னை அவருக்கு அறிமுகம் செய்தார். பெரியவருக்கு நானும் வணக்கம் வைத்த பின், அவரே என்னிடம் பேச்சு கொடுத்தார். துணை ஆட்சியர் பதவிகள் மிகச் சிலவே இருப்பதாகவும் சாதாரண மக்களுக்கு அது கிடைக்காது என்றும் நேர்முகத் தேர்வு முடியும்போது பதவி குறித்த விருப்பத்தைக் கேட்பார்கள் என்றும் காவல் துறை பதவிகள் பதினெட்டு இருப்பதால் அதற்கு என் விருப்பத்தை தெரிவிக்க வேண்டுமென்றும் மிகவும் கனிவோடு ஆனால் வலிந்து வற்புறுத்தினார். எனது தந்தையார் என்னிடம் ஏற்கெனவே இது குறித்து மிக திட்டவட்டமாகச் சொல்லி அனுப்பியிருந்தார். துணை ஆட்சியர் பணிக்கே நான் விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்று மிகத் தெளிவான அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

என்னை இதற்கு முன்பாக பார்த்திராத பெரியவர் என் மீது இப்படி ஏன் பரிவு காட்ட வேண்டும் என இயல்பானதொரு ஐயம் எழுந்தது. தேடி வந்து சொல்வதில் கெட்ட எண்ணம் இல்லையெனினும் நல்ல எண்ணம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. தேவையில்லாது கொடுத்த அழுத்தம் எனை மேலும் ஜாக்கிரதையாக்கியது. எனது தாயையும் அவர் வற்புறுத்த முயன்றபோது, அவரின் கண்களை நோக்கி நிதானமாகச் சொன்னேன் எனக்கு எது நல்லது, எது தேவையில்லை என்று என் தகப்பனாருக்கு தெரியும். இருபத்தைந்து வருடம் எனைப் பெற்று வளர்த்த என் தகப்பனார் சொல்லியதை நான் கேட்க வேண்டுமா இரண்டு நிமிடம் முன்னரே அறிமுகமான நீங்கள் சொல்வதை நான் கேட்க வேண்டுமா இந்த கேள்வியை என்னிடம் அவர் எதிர்பார்க்கவில்லை. கொக்கென்று நினைத்தாயோ என்று கேட்டுவிட்டது போல் சட்டென்று அங்கிருந்து கிளம்பி விட்டார்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, துணை ஆட்சியர் பதவியே முதல் விருப்பம் என்றேன். மதிப்பெண்கள் அதிகம் பெற்றிருந்த காரணத்தால் துணை ஆட்சியராகவே தேர்வு பெற்று இன்று ஐ.ஏ.எஸ்-ஆக உயர்ந்திருக்கிறேன். கல்வியால் விளைந்த சமூக அறிவும், தந்தையாரின் அனுபவ ஆற்றுப்படுத்தலும் திசை திருப்பும் வகையிலான முயற்சியை வென்று குறிக்கோளை நோக்கி கொண்டு செலுத்தியது.

இனிக்க இனிக்கப் பேசினால் நம்பிவிடுவது, நம் ஊர்தான், நமக்கு தெரிந்தவர்தான் என ஏற்றுக் கொள்வது இதுபோன்ற சமரசங்களால்தான் ஏமாற்றுக்காரர்கள் தங்கள் வித்தைகளைக் கடை விரித்து காத்திருக்கிறார்கள். பொருளைக் கவர்வதற்கு ஒரு தந்திரம், மனதைக் கவர மற்றொரு தந்திரம், நமக்கென்று கிடைப்பதை கெடுத்து விடவும் தந்திரம் என சிக்க வைக்கும் சூட்சுமங்கள் இங்கு அதிகம்.

பொருள் கவரும் முயற்சிகளில் இரு பாலரும் ஈடுபடலாம் மனம் கவரும் தந்திரங்களை மாற்று பாலினத்தவர் முன் வைக்கலாம். தந்திரங்கள் பலித்து பொருள் இழப்பு நிகழ்ந்தால் மனம் வலிப்பதோடு தனையும் சபிக்கும் வஞ்சக சொற்களில் மனதைப் பறிகொடுத்தால் வாழ்க்கையே வீணாகி சோகத்தில் ஆழ்த்திவிடும்.

தேனொழுகப் பேசி திட்டமிட்டு வஞ்சித்து, காரியம் முடிந்தவுடன் கை கழுவும் காமுகர்களை இளம் பெண்கள் கவனமாக அடையாளம் காண வேண்டும். எச்சரிக்கை உணர்வு ஒன்று இருந்து கொண்டே இருக்க வேண்டும். நாளையும் இவ்வுறவு இப்படியே இருக்கும் என்றெண்ணி அவசர முடிவெடுத்து அவதிப்படுவது பெற்ற கல்விக்கும் பெற்றவர்களின் நம்பிக்கைக்கும் வெகு தொலைவிலானதொரு இடத்தில் கொண்டு வைக்கும்.

பொருளில் ஏமாறுவதில் பெண்களுக்கே முன்னிலை. மெருகிட்டு புதிதாக்கி தருகிறேன் என்பவர்களிடமும், ஆபரணங்களைக் கொடுங்கள் நானே பொதிந்து தருகிறேன் என நயமாகப் பேசி மயக்குபவர்களிடமும் நகைகளைப் பறிகொடுத்து ஏமாந்தவர்களைப் பார்க்கிறோம். ஒன்றுக்கு விலை கொடுத்தால் இன்னொன்று இலவசம் இப்பொருள் வாங்கினால் அப்பொருள் இலவசம் என கவர்ந்திழுக்கும் வாசகங்களுக்குள் பொதிந்து நிற்கும் உண்மை வேறு.

மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் ஏமாற்றுகளும் பெண்களை நோக்கியே குறி வைக்கப்படுகின்றன. மதத்தை முன்வைத்து தீயன நடந்தாலும் அதை உணராது அறிவு மழுக்கம் பெறுகிறது. மெல்லிய உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் பெண்களே இத்தாக்குதல்களுக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.

எளிதான இலக்காக இருப்போர் பெண்களே என்றிருக்கும் எண்ணத்தை நம் திண்ணத்தால் மாற்றலாம். உணர்ந்த அறிவால் விளைந்த மதியால் கெடுமதியாளர்களின் சூழ்ச்சி அறியலாம் பெண்ணென்றால் ஏமாற்றலாம் என முன் வலிந்து வருவோரை நம் புத்தியின் கூர்மையால் இனம் கண்டு விலகலாம். பாதகம் கொண்டு பிசக முனைவோரை மோதி மிதித்து முகத்தில் உமிழலாம்.

- பா.ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com