பெண்மைக்கு வலிமை நேர்மையேயாம்...

"கெடுக்காத எண்ணங்களோடு நெஞ்சில் நேர்மையும், பொய்யற்ற வார்த்தைகளோடு சொல்லில் நேர்மையும், நேர்கொண்ட மனதோடு செயலில் நேர்மையும்,
பெண்மைக்கு வலிமை நேர்மையேயாம்...

"கெடுக்காத எண்ணங்களோடு நெஞ்சில் நேர்மையும், பொய்யற்ற வார்த்தைகளோடு சொல்லில் நேர்மையும், நேர்கொண்ட மனதோடு செயலில் நேர்மையும், அறம் உடைய இல்வாழ்வோடு உடலில் நேர்மையும், கருத்து வெளிப்பாட்டில் களங்கமிலா நேர்மையும், தான் கொண்ட கொள்கையாக ஆகிவரின் பெண்மைக்கு அதுவே பெரும் சக்தியாகும்."
 உள்ளத்தால், உடலால், சொல்லால், செயலால், எண்ணத்தால், எழுத்தால், தன்னலமற்ற பணியால் வாய்மையோடு இருப்பதே நேர்மை எனப்படுவதாகும். பெண்ணுடலில் இயற்கை வைக்கும் வலிமை பின்னம், நேர்மையின் சக்தியால் நிரவல் பெறுகிறது. பெண்மையும் நேர்மையும் பின்னலிட்டுக் கொண்டால், தலைமுறையும் சமூகமும் தலை வணங்கி தொழுகிறது.

காஷ்மீரத்து குல்மார்க்கில் பார்த்த ஒரு நிகழ்வு. மலைகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தி காற்றூடே பறக்கும் கயிற்று வழி வாகனத்திற்காக அனுமதிச் சீட்டுகள் பெற்று காத்துக் கொண்டிருந்தோம். ஆயிரம் பேர் நின்றிருக்க வரிசை நீண்டிருந்தது. இரண்டு மணிக்கும் மேலாகும் என அனுமானம் சொன்னது. வரிசையின் மத்தியில் நாங்கள் நின்றிருந்தபோது எங்களுக்குப் பின்னால் தொலைவில் இரு குழந்தைகளோடு, வண்ணமிகு ஆடையில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். குழந்தைகளும் முதியவர்களும் வசதியாக அமர்ந்துகொள்ள வளமாக இருக்கைகள் போடப்பட்டிருந்தன. நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அப்பெண் வரிசையில் முன்னேற, குள்ளநரித்தனமான ஒரு யுக்தியைக் கையாண்டார். ஐந்து வயது நிரம்பிய தன்னுடைய இளைய மகனை எங்கள் அருகிலிருந்த இருக்கைக்கு வந்து அமர வைத்தார். அப்படியே அருகில் வரிசையோடு இணைந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து தன் மகனை மீண்டும் எழுப்பி சற்று தொலைவில் இருந்த இருக்கையில் அமர வைத்து அருகிலேயே மூத்த மகனுடன் நின்று கொண்டார். இப்படியே அடுத்தடுத்து முன்னேறிச் சென்று எங்களுக்கு முன்னதாகவே கயிற்றுக் காரில் ஏறிச்சென்றுவிட்டார். என் பிள்ளைகளுக்கு இதைப் பார்த்து ஒரே ஆச்சரியம். ஒரு தாய் செய்யும் முன்னுதாரணம் அல்ல இது என்றேன். புத்திசாலிப் பெண்ணாக தன்னை காட்டிக் கொண்டாலும், நேர்மையின்றி நடந்து கொண்டது எல்லோர்க்கும் தெரிந்தது. இந்த நேர்மையற்ற தன்மையைத்தான் அவர் குழந்தைகளும் பழகும். நேர்மையைப் படிப்பிக்கும் நிலையில் உள்ள தாயே, நேர்மைக்கு எதிராக எட்டடி பாய்கையில் அவளது பிள்ளைகள் நிச்சயம் பதினாறடி பாயும்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும்போதே ஒரு சில குழந்தைகள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சக குழந்தைகளிடமிருந்து பேனா, பென்சில், இரப்பர் போன்ற பொருட்களை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்று விடுவதுண்டு. என் குழந்தைகளுக்கு இதற்கும் சேர்த்து நான் வாங்குவதுண்டு. இதனைக் கண்ணுறும் அந்த குழந்தையின் தாயார், அதனை திருப்பிக் கொடுக்க நிர்ப்பந்தித்து திருத்த வேண்டும். விலை அதிகமில்லாத மிகச்சிறிய பொருள்தானே என்று அந்த நேர்மையின்மையின் துளிர்ப்பைப் பாராது விடுகையில், அக்குழந்தையுள் அத்துர்குணம் அங்கீகாரம் பெற்று அடுத்ததான கட்டத்திற்கு நகர்த்தி விட்டுவிடும். உளமொத்த நேர்மையோடு தானும் நடந்து கொண்டு உயர்வு தரும் நேர்மையை தன் குழந்தைகளுக்கும் ஊட்டுவதில் அன்னையர்க்கே இங்கு அதிகமான பங்கு.

உடலால் நேர்மை எனும் உன்னதப் பண்பு, உடையவரின் நம்பிக்கையையும் உடன் சார்ந்ததாகும். பிறனில் விழையாமை எனும் ஒரு தலைப்பில் அடுத்தவரது மனைவியின் மீது ஆசைப்படுவது பிணத்துக்கு சமானம் என்கிறார் திருவள்ளுவர். ஆணுக்கு வாய்த்திடும் அனைத்தும் இங்கே பெண்ணுக்கும் வாய்க்க வேண்டுமென குரலிடும்போது, ஆணுக்கு சொல்லப்படும் அறிவுரைகள் யாவுமே பெண்ணுக்கும் உரியதாகும் என்றே கொள்க. இங்கு வள்ளுவம் சொல்லும் இல் எனும் சொல் பதம், இல்லாள் என்று பொருள் கொள்வதோடு, இல்லத் தலைவன் என்பதையும் குறிப்பதேயாகும்.

அண்மைக் காலங்களில் பத்திரிகைகளில் பன்மை மகளிர் குறித்து படிக்க நேர்கிறோம். ஒருத்திக்கு ஒருவன் என்ற புனிதத்தைத் தாண்டி, குடும்பங்களைக் கெடுக்கும் இப்பன்மை மகளிர், உடலால் நேர்மையற்ற இழிநிலையாளர். கட்டிய கணவன் கூடவே இருக்கையில் கண்ணுறும் ஆடவரைக் காமுறும் இவர்கள் குடும்பம் எனும் தெய்வீக அமைப்பைக் குலைப்பவர் ஆவர். நிலையற்ற மனதோடு நீசமும் கொண்டு, நேர்மையற்ற உடலையும் தாங்கித் திரிவர். இவர் நஞ்சு கலந்து அமைந்திருக்கும் பாலை ஒப்பர். அது திரிந்து பிரிந்து தன் குறையைக் காட்டி, தனை மட்டுமல்லாது தன் குடும்பத்தையும் சிதைக்கும். ஒப்பனைகள் பல செய்து ஒய்யார மொழி பேசினும், ஒழுக்கமற்ற இவர் வாழ்வு முடை நாற்றமெடுக்கும். நம் கண்களே இதை நுகர்ந்து நம்மை விலக்கி வைக்கும். மனம் கொண்டு கரம் பிடித்த வாழ்க்கை துணை நலத்துக்கு, ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும் வாய்மை வழுவாது உண்மையாய் இருப்பது உடலால் அமையப்பெறும் நேர்மையாகும்.

இது மறுமணம் செய்யும் உரிமைக்கு மாற்றுக் கருத்தல்ல. விதவைப் பெண்களும், விவாகரத்து பெற்றோரும் விருப்பமிருந்தால் மறுமணப்பது வரவேற்கத் தகுந்ததே. ஆனால், மண ஒப்பந்தத்தின் உள்ளிருந்தே பிற குடும்பத்தை சிதைப்பது உடல் குறித்த நேர்மையின்மையின் உக்கிர வெளிப்பாடு.

ஒரு கூட்டத்தில் எனக்கு அடுத்தாற்போல் ஒருவர் அமர்ந்து இருந்தார். கூட்டம் தொடங்கும் முன்னர் அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. கைபேசியின் சப்த அளவு அதிகமாக இருந்ததால் ஒரு பெண் பேசியது அப்படியே வெளியில் கேட்டது. இந்த நபருக்கு நல்லதொரு குடும்பமும் உண்டு. எதிர் முனையில் பேசிய பெண் கொஞ்சு மொழியில் தன்னுடன் சாப்பிட வரும்படி வற்புறுத்துகிறார்.

இவரோ கூட்டம் இருக்கிறதென்று செல்ல மறுக்கிறார். மயக்கும் அப்பெண்ணின் குழைவுப் பேச்சு குடும்பங்களைக் கெடுக்கும் தந்திர நச்சு. தன் மனைவியை சாப்பிட அனுப்பியுள்ளார் என்று பலமுறை சொல்லியும், அப்பெண் விடாமல் தொடர்ந்து நச்சரிக்கிறார். அப்பெண்ணைத் தவிர்க்க அவருக்கு அக்கூட்டம் உதவியது. தெரிந்தே ஏமாறும் அந்த அலுவலரிடம் இதைக் கேட்டுவிட்டதைக் காட்டிக் கொள்ளாமல் நாசூக்காக, செல்பேசியின் சப்த அளவை குறைக்கச் சொன்னேன். எனக்கு இவரைவிட அப்பெண் மீது அதிக கோபம் வந்தது. இப்படியும் இங்கு சில பேர் கிளம்பி இருக்கிறார்கள். கடைசிவரை வராதென தெரிந்தும் கபடமாடுகிறார்கள். கிடைத்தவரை லாபம் என்று கணக்கிடுகிறார்கள்.
 அடுத்தவரிடம் உள்ள கைபேசியை நாம் எடுத்துக் கொள்வதில்லை. அவரிடம் உள்ள தங்க நகையைக் கவர்ந்து கொள்வதில்லை. பிறர் பொருளை எடுத்துக் கொள்வது திருட்டு என்றால் அவர்க்குரிய வாழ்வைக் கவர்வதும் திருட்டு போல்தான். உடையவள் என்றொருத்தி ஒருபுறம் நம்பி இருக்க அதை வேறொருத்தி பங்கிட நினைப்பது கயமையின் உச்சம். இது உடல் சார்ந்த நேர்மையற்ற சமூக எச்சம்.

கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவது சொல்லில் நேர்மை. பொய் சொல்லாது இருப்பதுவும் வாக்கினில் நேர்மை. அடுத்தவர் குறித்து அயராது அவதூறு குறித்து, அலர்வாய் பெண்டிராய் அடையாளம் கொண்டு நல்லனவற்றைப் பேசாதிருந்து தீயன மொழிதல் சொல்லால் தவறி நிற்கும் நேர்மையின்மையாம்.
 இன்னுமொரு நேர்மைத் திறன் இங்கே உண்டு. அதுவே செய்யும் பணிகளில் நேர்மையாய் இருப்பது. ஏற்றிருக்கும் பதவியின் அதிகாரத்தைக் கொண்டு தான் ஆற்ற வேண்டிய பணிகளுக்காக கையூட்டு பெறுவது, அலுவலக நேர்மையின்மையின் கொடுமை பரிமானம். கடமையாய் செய்ய வேண்டிய காரியங்களுக்கு கையேந்தி நிற்பது பிச்சைக்கு சமானம். பெண்கள் இப்பெரும் பாவத்தில் ஈடுபட்டிருப்பின், அது தன் கையெழுத்தை விற்பதற்கு ஒப்பாவதோடு, சுயமரியாதையையும் விற்பதற்கு நிகராகிவிடும். பெண் என்றால் நிச்சயம் நேர்மையுமிருக்கும் என்று எதிர்பார்க்கும் சமூகத்தை இப்பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.

எழுத்திலும் நேர்மை என்பது சால முக்கியம். பழிசார் எழுத்தின் மூலம் பிறர் நலம் கெடுப்பது, பெயரிடாத கடுதாசி எழுதி வக்கிரம் உதிர்ப்பது, ஆபாச மொழி வடித்து சமூகத்தைக் கெடுப்பது, இவை யாவும் நேர்மையற்ற எழுத்துக்களின் கோர வடிவங்களே. இதை பெண்கள் விலக்கினால் பெண்மை பெருமை கொள்ளும்.

கெடுக்காத எண்ணங்களோடு நெஞ்சில் நேர்மையும், பொய்யற்ற வார்த்தைகளோடு சொல்லில் நேர்மையும், நேர்கொண்ட மனதோடு செயலில் நேர்மையும், அறம் உடைய இல்வாழ்வோடு உடலில் நேர்மையும், கருத்து வெளிப்பாட்டில் களங்கமிலா நேர்மையும், தான் கொண்ட கொள்கையாக ஆகிவரின் பெண்மைக்கு அதுவே பெரும் சக்தியாகும். நேர்மை கொண்ட பெண்ணொருவர் மாவலிமை கொண்டவராம். நேர்மையே பழகிக்கொண்டு நித்தமும் நிகழ் வாழ்வில், தீரமிக்க பெண்களாய் திகழ்ந்தே மகிழ்ந்திடுவோம்.
 படம்: ப. ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com