மன நோய் இளைஞர்களிடம் அதிகம் ஏற்படுகிறது! மன நல நிபுணர் எஸ்.வந்தனா

"மனநலப் பிரச்னை வெளியே தெரிவதில்லை. அது கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருக்கிறது.
மன நோய் இளைஞர்களிடம் அதிகம் ஏற்படுகிறது! மன நல நிபுணர் எஸ்.வந்தனா

'மக்களில் நான்குபேரில் ஒருவருக்கு மனநலப் பிரச்னை உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், மன நல மருத்துவம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் மனநலத்திற்காக சிகிச்சைகள் பெறுவது, உரிய பலனை அளிப்பதில்லை'' என்கிறார் எஸ்.வந்தனா, இவர் சென்னை புரசைவாக்கத்தில் "வி.கோப்' (V.COPE) என்னும் மனநல ஆலோசனை மையம் நடத்திவருகிறார். மனநல பாதிப்புகள் பற்றியும், மனநல சிகிச்சைகள் குறித்தும் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து...
 
"மனநலப் பிரச்னை வெளியே தெரிவதில்லை. அது கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருக்கிறது. மனநலப் பிரச்னை உள்ளவர்கள் சோகமாகவும், யாரிடமும் பேச விருப்பம் இல்லாமலும், தனிமையிலும் இருப்பார்கள். இவர்களுக்குத் தக்க சமயத்தில் கவுன்சிலிங் கொடுத்து, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். அவ்வாறு கவனிக்கத் தவறினால், அவர்களின் மனரீதியான, உடல்ரீதியான பிரச்னைகள் அதிகமாகி தற்கொலைகள் நிகழ்ந்துவிடுகின்றன.

இன்றைய சூழலில் மனச்சோர்வு என்பது பள்ளிக்குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை யாவருக்கும் ஏற்படுகிறது. அதனால்தான், பள்ளிகள், கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் அனைவருக்கும் அவசியம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் கல்வித்துறைகள் அறிவித்திருக்கிறது.

பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்ல... குடும்பத் தலைவராக இருப்பவர்கள், தொழில் முனைவோர், தொழில் புரிவோர், ஆண்-பெண் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் மனநலம் பேணும் சிகிச்சை இன்று தேவைப்படுகிறது. காரணம், ஒருவருக்கு ஏற்படும் மனநலப் பிரச்னை, அவரை மட்டுமே பாதிப்பதில்லை. அவரைச் சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கிறது. கணவனுக்கு ஏற்படும் மனப்பிரச்னை மனைவியை பாதிக்கிறது, குழந்தைகளை பாதிக்கிறது, இதனால் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பாதிக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் இடையே உறவு விரிசல் ஏற்படுத்துகிறது. இதை யாரும் கூர்ந்து கவனிப்பதில்லை.

சிலர் திருமணம் செய்து குறுகிய காலத்திற்குள் விவாகரத்து கேட்பது என்பது இன்றைக்குப் பெருகிப்போயிருப்பதற்குக் காரணம், சுலபமாக லேசாக்கி விடக்கூடிய மனப் பிரச்னைகளை, அழுத்தம் கொடுத்து தீவிரப்படுத்திக்கொள்ளும் பிடிவாத மனப்பான்மைதான். இவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள்...விவாகரத்து என்பது கேட்டவுடனே கிடைத்துவிடக்கூடிய ஒன்றல்ல, அதற்கென்று கவுன்சிலிங் முறைகள் உள்ளன. சிலர், விவாகரத்து கிடைக்கத் தாமதம் ஏற்படும்போது, கவுன்சிலிங் மூலம் சேர்ந்துவாழ்வதும் நிகழ்ந்திருக்கிறது.

முக்கியமான விஷயம்... எதற்கு கவுன்சிலிங் பெறவேண்டும்... எதற்கு சிகிச்சை பெறவேண்டும் என்ற விழிப்புணர்வு வேண்டும். மனநல மருத்துவத்தில் 4 பிரிவுகள் உள்ளது. அவை: சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட், கவுன்சிலர்ஸ், சோஷியல் ஒர்க்கர்ஸ். சைக்கியாட்ரிஸ்ட் என்பவர் மனநல மருத்துவர். இவர், எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, எம்.டி. இன் சைக்கியாட்ரி அல்லது டிப்ளமோ இன் சைக்கியாட்ரி படித்துவிட்டு சைக்கியாட்ரி ஸ்பெஷலிஸ்ட் ஆகப் பணிபுரிபவர்.

சைக்காலஜிஸ்ட் என்பவர் மனநல ஆலோசகர். இவர், பி.எஸ்.ஸி., எம்.எஸ்.ஸி சைக்காலஜி படித்துவிட்டு, மேற்படிப்பாக எம்.பில்., பி.எச்.டி., புரபஷனல் சைக்காலஜி, கிளினிக்கல் சைக்காலஜி போன்ற படிப்புகளை முடித்துவிட்டு மனநல மருத்துவம் புரிபவர் மனநல நிபுணர் அல்லது மன நல ஆலோசகர் என அழைக்கப்படுபவர். கவுன்சிலர்ஸ் என்பவர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் சைக்காலஜி பாடம் படித்துவிட்டு மன நல ஆலோசனைகள் வழங்குகிறார்கள்.

சோஷியல் ஒர்க்கர்ஸ் என்பவர்கள், தனிப்பட்ட ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ மன நலப் பிரச்னை ஏற்படும்போது, அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து, மன நோயைப் பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்கிறார்கள்.

உதாரணமாக, ஒரு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டருடன் பிசியோதெரபிஸ்ட் இணைந்து பணிபுரிகிறார்கள் அல்லவா அதுபோன்று சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரும், சைக்காலஜிஸ்ட் நிபுணரும், கவுன்சிலர்ஸ் மற்றும் சோஷியல் ஒர்க்கர்ஸ் அனைவரும் ஒரு குழுவினராக இணைந்து நோயாளிகளைக் குணப்படுத்தும் பணிகளைச் செய்கிறார்கள்.

மனநல ஆலோசகர்கள், கவுன்சிலிங், சைக்கலாஜிக்கல் தெரபி சிகிச்சை, சைக்கலாஜிக்கல் டெஸ்டிங், ஐ.க்யூ டெஸ்டிங் போன்ற சிகிச்சைகள் மூலம் நோயாளிகளைக் குணப்படுத்துகிறார்கள். இந்த வித்தியாசங்களைப் புரிந்துகொண்டு யாரும் சிகிச்சை பெறுவதில்லை. இதனால், முறையான சைக்கலாஜிக்கல் துறையில் இல்லாத வேறு துறையைச் சேர்ந்தவர்களும் மனநல சிகிச்சை தருபவர்களாக உலாவருகின்றனர். தவறான சிகிச்சை பெறுவதால் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிறதேயொழிய குறைகிறதாகத் தெரியவில்லை.

2020 ஆம் ஆண்டில் மனநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதிலும் குறிப்பாக இளைஞர்களிடம் இந்தப் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறிவருகிறது. இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக வரும் அக்டோபர் 10ஆம் தேதியன்று உலக மனநல நாளை முன்னிட்டு மனநல விழிப்புணர்வுப் பேரணி, இலவச சிகிச்சை முகாம் ஆகியவற்றை சென்னையிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் நடத்தவிருக்கிறோம்' என்றார் வந்தனா.
 - ரவிவர்மா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com