ஹன்சா மேத்தா: முதல் பெண் துணைவேந்தர்

பரோடா திவான் பதவி வகித்த மனுபாய் மேத்தாவின் மகளாக 3.7.1897-இல் குஜராத்தில் சூரத் நகரில் பிறந்தார் ஹன்சா. 
ஹன்சா மேத்தா: முதல் பெண் துணைவேந்தர்

சாதனைப் பெண்மணிகள்-2 

இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சாதனைபுரிந்த மகளிர் பலர் உள்ளனர். 

அவர்களை அறிமுகம் செய்யும் தொடர் இது:
சுதந்திர இந்தியாவில் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்த முதல் பெண்மணி, சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பம்பாய் சட்ட மன்ற மேலவையின் முதல் பெண் உறுப்பினர், எழுத்தாளர், பேச்சாளர் என்னும் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஹன்சா மேத்தா. அவரின் வாழ்க்கையில் சில மறக்கமுடியாத பக்கங்கள்:

பரோடா திவான் பதவி வகித்த மனுபாய் மேத்தாவின் மகளாக 3.7.1897-இல் குஜராத்தில் சூரத் நகரில் பிறந்தார் ஹன்சா. 

பரோடாவில் பள்ளிக்கல்வியும் கல்லூரிப் படிப்பும் முடித்துவிட்டு, 1919-இல் ஜர்னலிசம் பயில லண்டன் சென்றார். அப்போது, லண்டனில் இருந்த கவிக்குயில் சரோஜினி நாயுடு, ராஜகுமாரி அமிர்த்கௌர் ஆகியோருடன் பழகும் வாய்ப்பை பெற்றார். அவர்களின் நட்பே ஹன்சாவின் நெஞ்சில் விடுதலைப் போராட்ட உணர்வை யூட்டியது. 

1920-இல் ஜெனிவா மாநாட்டில் பங்கேற்றார். அன்று முதல் மண் விடுதலை மற்றும் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார். சாதி ஒழிப்பு மற்றும் கலப்புத் திருமணத்திற்காக குரல்கொடுத்தார். சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக பலமுறை சிறைவாசம் அனுபவித்தார். 

பரோடா மாகாண தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜீவராஜ் மேத்தாவை 1924-இல் மணந்தார் ஹன்சா. 1931-ஆம் ஆண்டில் பம்பாய் சட்டமன்ற மேலவையின் முதல் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15.8.1947-இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் நேருவின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது, ஹன்சா மேத்தா "இந்தியப் பெண்கள் சார்பாக நம் தேசியக்கொடியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்''  என்று வீரமுழக்கமிட்டார். 

1949-இல் பரோடாவில் தொடங்கப்பட்ட மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பெற்றார். இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையை ஹன்சா மேத்தா பெற்றார். 

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட ஹன்சா 1958-ஆம் ஆண்டுவரை அப்பதவியில் நீடித்தார். பல்கலைக்கழகத்தில் ஹோம் சயின்ஸ் பாடப் பிரிவை முதலில் தொடங்கியது ஹன்சா மேத்தா துணைவேந்தராக இருந்தபோதுதான். 

குஜராத் இலக்கியத்தில் முதல் நாவலை எழுதியவர் ஹன்சாவின் தாத்தா துல்ஜாஷங்கர் மேத்தா என்பது குறிப்பிடத்தக்கது. தாத்தாவைப் போன்றே இலக்கிய ஈடுபாடு நிரம்பியவராகத் திகழ்ந்தார். பல நூல்களை இயற்றிய ஹன்சா மேத்தா 4.4.1995-இல் தமது 98ஆம் வயதில் மும்பையில் காலமானார். 
-ரவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com