கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்!

ரவா லட்டு, ரவா சீடை, பூந்தி லட்டு, அவல் பாயசம், கை முறுக்கு, தட்டை

ரவா லட்டு

தேவையானவை :
ரவை - 1 கிண்ணம்
நெய் - 5 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கிண்ணம்
ஏலக்காய் பொடி-  கால் தேக்கரண்டி
திராட்சை - 10
முந்திரி  - 10
பால் -  கால் டம்ளர்
செய்முறை :  வாணலியில் நெய்யை  ஊற்றி சூடானதும் அதில் முந்திரி திராட்சையைப் போட்டு வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.  அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்துகொள்ளவும். ரவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.  அடுத்து  ரவையுடன்  வறுத்த முந்திரி திராட்சை,  ஏலக்காய் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும். இந்த கலவையில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.  அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு ரெடி.

ரவா சீடை

தேவையானவை :
ரவை - 1/2 கிண்ணம்
பொட்டுக்கடலை - 2 1/2  தேக்கரண்டி
வெண்ணெய் - 2  தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகப் பொடி - 1/2  தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2  தேக்கரண்டி
எள் - 1  தேக்கரண்டி
துருவிய தேங்காய் - சிறிது (2 மேசைக்கரண்டி)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:  முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.  பின் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் ரவை, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் தூள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  அடுத்து அந்த மாவை சீடை       அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக ஒரு பேப்பரில் வைத்து 10 நிமிடம் அப்படியே வைக்கவும். அதே நேரத்தில் அடுப்பில்  வாணலியை வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.   அதில் உருட்டி வைத்துள்ள சீடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா சீடை ரெடி.

பூந்தி லட்டு

தேவையானவை :
கடலை மாவு - 2 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2  கிண்ணம்
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
டைமண்ட் கல்கண்டு - 25 கிராம்
ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
கிராம்பு - 8
பச்சை கற்பூரம் - சிறிய துண்டு
கேசரி பவுடர் - கால் தேக்கரண்டி
நெய் - 50 கிராம்
செய்முறை:  முந்திரிப் பருப்பு, திராட்சையை  நெய்யில் வறுக்கவும். கிராம்பைத் தூளாகப்  பொடி செய்யவும்.
கடலை மாவை பூந்தி மாவுப் பக்குவத்தில் நீர் சேர்த்து கரைக்கவும். எண்ணெய்யில் பூந்திகளாக அதிகம் சிவக்காமல் வேக வைத்தெடுக்கவும்.
சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். கொதித்து நுரை வருகையில் ஒரு கரண்டி பால் விட்டு ஓரங்களில் இருக்கும் அழுக்கை சுத்தமாக எடுத்து விடவும்.  பூந்திக்கு சொன்னது போல் கம்பிப் பதம் வரும் வரை காத்து இருக்காமல் சற்று முன்பாக இளம் கம்பிப்பாகு வரும் சமயம் ஏலக்காய் பொடியை பாலிலோ நீரிலோ கரைத்து ஊற்றவும். கேசரி பவுடர், கிராம்புத் தூள், பச்சைகற்பூரம் சேர்க்கவும்.  பாகில் தயாரித்து வைத்திருக்கும் பூந்திகளைக் கொட்டி கிளறிவிடவும். பதமாகக் கிளறி வறுத்த முந்திரிப் பருப்பு, திராட்சை, டைமண்ட் கல்கண்டு இவைகளையும் சேர்த்து கிளறி இறக்கவும். சற்று ஆறியதும் கையில் நெய் தடவிக் கொண்டு உருண்டைகள் பிடிக்கவும்.  பூந்தி லட்டு தயார்.

அவல் பாயசம்

தேவையானவை :
அவல் - 200 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
காய்ச்சிய பால் - 1/4 லிட்டர் 
அச்சு வெல்லம் - 400 கிராம் 
முந்திரிப்பருப்பு - 10
காய்ந்த திராட்சை - 10
நெய் - 50 கிராம்                                           
செய்முறை:  அவல்,  ஜவ்வரிசி இரண்டையும் நன்றாக கழுவி  தனித் தனியாக ஒரு தம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.   கடாயில் ஒரு மேஜைக்
கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பு, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும்.   ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடி கட்டி வைத்துக் கொள்ளவும்.  அதே வாயகன்ற பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் அதிலுள்ள தண்ணீரையும்  சேர்த்து 10 நிமிடம் வரை  வேக விடவும்.    ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் ஊற வைத்த அவலும் அதில் உள்ள தண்ணீரையும் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.  அவல் வெந்ததும் சர்க்கரைப் பாகை ஊற்றவும்.  பாகு சேர்த்து வரும் போது காய்ச்சிய பால், முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள், நெய் எல்லாவற்றையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.  சுவையான அவல் பாயசம் ரெடி.  

கை முறுக்கு
தேவையானவை:  
இட்லி அரிசி -  4 கிண்ணம்
 உளுந்தம்பருப்பு -  1/2 கிண்ணம்
 எள்ளு - 1 தேக்கரண்டி 
 வெண்ணெய் - 5 தேக்கரண்டி 
 எண்ணெய் -  தேவையான அளவு 
 பெருங்காயம் -  சிறிது 
 உப்பு -  தேவையான அளவு
 செய்முறை:   உளுந்தம் பருப்பை சிவக்க வறுத்து, மாவாக அரைத்து வைக்க வேண்டும்.    ஊறின அரிசியை  காய வைத்து  மிஷினில் கொடுத்து அரைத்து  கொள்ள வேண்டும்.  பின்னர்,  ஒரு பாத்திரத்தில், அரைத்து வைத்த  உளுத்தம்  மாவு, வெண்ணெய்,  உப்பு, பெருங்காயத் தூள், எள்ளு அனைத்தையும் நன்றாக ஒன்று சேர்த்து  பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.  பின்னர்,  கெட்டியாக கலந்த உளுந்த கலவையையும், அரிசி மாவையும் இணைத்து நல்ல கெட்டி பதம் வருமாறு  கலந்து கொள்ளவும்.  பின்னர்,  ஒரு பெரிய துணியை எடுத்து கொள்ள வேண்டும்.  அந்த துணியில் ஒரு  பாட்டில் மூடியை நடுவில் வைத்து அதனை சுற்றி மாவினை திருவி திருவி வட்டமிட்ட  பின் நடுவில் இருக்கும் மூடியை அகற்றிடவும்.  இதே போன்று  மற்ற இடத்திலும் மாவினை முறுக்கிற்கு சுற்ற வேண்டும்.   மறுபுறம்  வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  சுற்றி வைத்த முறுக்கு அச்சை அலங்காமல் எண்ணெய்யில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க  வேண்டும். சுவையான கை முறுக்கு தயார்.

தட்டை

தேவையானவை : 
அரிசி மாவு - 2  கிண்ணம்
உளுத்தம்  மாவு -  4  தேக்கரண்டி 
மிளகாய்த் தூள் - காரத்திற்கேற்ப 
கடலைப் பருப்பு - 4    தேக்கரண்டி 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு 
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி 
வெண்ணெய் - 5  தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:  முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.  பின்னர் அரிசி மாவு,  உளுத்தம் பருப்பு மாவு,  மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு  பாலிதீன் கவரில்  எண்ணெய் தடவி,  ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து  தட்டையாகத் தட்டிக் கொள்ள வேண்டும்.  பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும்,   அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக  பொரித்து எடுக்க வேண்டும்.  சுவையான தட்டை தயார்.
-தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com