நெற்றிக்கண் - ஜோதிர்லதா கிரிஜா

அன்று காலை எழுந்ததிலிருந்தே எந்தக் காரணமும் இல்லாமல் தாமரைக்குத் துரையின் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.  
நெற்றிக்கண் - ஜோதிர்லதா கிரிஜா

புதிய தொடர்:
அன்று காலை எழுந்ததிலிருந்தே எந்தக் காரணமும் இல்லாமல் தாமரைக்குத் துரையின் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது.  எவ்வளவோ யோசித்துப் பார்த்த பின்னரும் காரணம் எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை.  அவனை அவள் மறந்துவிட்டாள் என்று சொல்லிவிடமுடியாது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறப்பதாவது!  "இந்த விதி பெண்ணுக்கு மட்டும்தானா? ஆண்களும்தான் மறப்பதில்லை' என்று எண்ணி அவள் தனக்குள் பெருமூச்சுவிட்டுக்கொண்டாள்.

தனக்குத் திருமணமான நாளிலிருந்து தன் கணவனுக்குத் துரோகமான எந்தச் சிந்தனையிலும் தாமரை ஈடுபடுவதில்லைதான்.  துரோகச் சிந்தனை அவள் மனத்தில் எழுவதில்லையே தவிர,  அவனைப் பற்றி அவள் நினைப்பதே இல்லை என்று சொல்லிவிட முடியாது.   "அப்படி ஒரு பெண்ணோ அல்லது ஓர் ஆணோ சொன்னால், அது அப்பட்டமான பொய்யாகத்தான் இருக்க முடியும்! மறப்பது வேறு, அவ்வப்போது நினைப்பு வருவது வேறுதானே?' என்றும் அவள் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

அவள் கல்லூரியில் சேர்ந்தபோது, பேருந்துப் பயண நெருக்கடியிலும், பயணிகளின் சில்மிஷங்களிலும்  தம் மகள் சிக்கித் தவிக்ககூடாது எனும் எண்ணத்துடன்தான்   அவள் அப்பா சதாசிவம் பக்கத்து வீட்டு ராணி, எதிர்வீட்டு மஞ்சுளா, தம் மகள் தாமரை ஆகிய மூவருக்குமாக ஓர் ஆட்டோவை அமர்த்திக்கொடுத்தார்.  அவள் தோழிகளின் தகப்பன்மார்களும் சதாசிவத்தின் யோசனையை ஏற்றுக்கொண்டனர்.  ஆட்டோ ஓட்டுநர் துரையின் அறிமுகமும் அவனது காதல் வெளிப்பாடும் ஏற்படுவது அதனால்தான் சாத்தியம் ஆயிற்று.

மூவரும் சேர்ந்துதான் ஆட்டோவில் கிளம்புவார்கள். ஆனால், ராணியும், மஞ்சுளாவும் ஒரே கல்லூரியில் மாணவிகளாக இருக்க இவள் மட்டும் வேறொன்றில் கல்வி பயின்றுகொண்டிருந்தாள். எனவே, அவர்கள் முதலில் இறங்கிக் கொள்ளுவார்கள்.   தாமரை மட்டும் தினமும் கால் மணி நேரம் போல் ஆட்டோவில் தனியாகப் பயணிக்க வேண்டியது வந்தது. துரை அவள் மீது நாட்டம் கொண்டதற்கு அது மற்றுமொரு  காரணமாக இருந்திருக்கலாம் என்று தாமரை நினைத்துக்கொண்டதுண்டு. அப்படி ஒரு தனிமையான தருணம் நாள்தோறும் ஏற்பட்டே இருந்திராவிட்டாலும் கூட, அவன் தன்னைக் காதலித்துத்தான் இருந்திருப்பான் என்பதில் அவளுக்குத் துளியும் ஐயமே இல்லை.  

அவனும் +2 படித்திருந்தான். ஓகோ என்று சொல்லுமளவுக்கு அவன் மதிப்பெண்கள் பெற்றிராவிட்டாலும், அவனது சராசரி மதிப்பெண் 60 விழுக்காடு  என்பதை அவள் ஒரு நாள் தெரிந்துகொள்ள வாய்த்தது.

"துரை!  நீங்க ஏன் காலேஜ்ல  சேரல்லே?  இட ஒதுக்கீட்டு அடிப்படையில உங்களுக்கு சீட் கிடைச்சிருந்திருக்குமே!' என்று ஒரு நாள் அவள் வினவிய போது, அவன் துயரத்துடன் புன்னகை செய்தது அவளுக்கு நன்றாக  ஞாபகம் இருந்தது.  

"என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணணும்னு எங்கம்மா ஒத்தைக் கால்ல நிக்கிறாங்க. அதான் ஆட்டோ ஓட்ட வந்துட்டேன்.  எங்கப்பாவும் ஆட்டோதான் ஓட்டிக்கிட்டு இருந்தாரு. இப்ப அவரு இல்ல. நான் ப்ளஸ் டூ முடிச்சதும் என்னோட ரிசல்ட் வாரதுக்குள்ளாறவே அவரு போய்ட்டாரு.  வாயைக் கட்டி வயித்தைக் கட்டி முப்பதாயிரம் வரைக்கும் எப்படியோ சேத்துட்டேன். எந்தங்கச்சியை எட்டாம் வகுப்போட நிப்பாட்டிட்டாங்க.  படிக்கட்டும்னு எம்புட்டோ சொல்லிப் பாத்தேன். 

யாரும் எம்பேச்சைக் கேக்கல்லே.  ஒரு மாப்பிள்ளைப் பையன் நேத்துதான் வந்து பாத்துட்டுப் போனான்.  வரதட்சிணையே இருபதாயிரம்  வேணுமாம். 

பத்துப்பவுனுக்கு நகையாம். எங்கள மாதிரி ஆளுங்க எங்கிட்டுப் போறது? மனுசங்களுக்குப் பேராசை தாஸ்தியாயிடிச்சு.  வரதட்சிணைப் பிரச்சினை நிறையவே குறைஞ்சிடுச்சுன்னு பத்திரிகைக்காரங்க எழுதறாங்க.  ஆனா எங்கள மாதிரி ஏழைங்க மத்தியில அது தலை விரிச்சு ஆடிக்கிட்டுத்தான் இருக்குது. புருசனுக்கும் பெத்தவங்களுக்கும் நடுவில மாட்டிக்கிட்டு எத்தினி பொண்ணுங்க தூக்குல தொங்குதுங்க!'' என்று அவன் சற்றே நீளமாய்ப் பதில் சொன்னது இன்றளவும் அவளுக்கு ஞாபகம் இருந்தது.

தான் +2 படித்துத் தேறியவன் என்று அவன் தானாக அவளிடம் தெரிவிக்கவோ, பெருமை அடித்துக்கொள்ளவே இல்லை.  அது கூட அவளுக்குத் தற்செயலாய்த்தான் தெரிய வந்தது. தமிழ் அறியாத ஒரு வடக்கத்திக்காரரிடமிருந்து ஆங்கிலத்தில் தட்டெழுதியிருந்த ஒரு கடிதத்தை வாங்கிப் படித்துவிட்டு அவன் அவருக்கு ஓர் இடத்துக்குப் போகும் வழியை விளக்கமாய்ச் சொல்லிக்கொண்டிருந்த போது அவள் அவனது சரளமான ஆங்கிலத்தைச் செவிமடுக்க  வாய்த்தது.

ஆட்டோவில் ஏறி அமர்ந்தவாறே, "என்ன, துரை! நீங்க இங்லீஷ்ல இவ்வளவு சரளமாப் பேசறீங்க? எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?'' என்று அவள் வினவிய கணத்தில்தான் அவன் தான் +2 வரை ஆங்கில வழியில் படித்தவன் என்பதை அவளுக்குச் சொன்னான். அவள் கேட்ட பின்னரே தன் சராசரி மதிப்பெண் 60 என்பதையும் கூறினான்.

"அறுபதுங்கிறது ஒண்ணும் குறைஞ்ச மார்க் இல்லே, துரை! பார்ட் டைமா ஏதாச்சும் மேற்கொண்டு படிச்சுக்கிட்டே ஒரு  நிலையான வேலையைத் தேடிக்குங்க. எதுக்கு ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்றீங்க?'' என்று அவள் சொன்னதும், "ஆட்டோ ஓட்றது கவுரவக் குறைச்சல்றீங்களா?'' என்று அவன் சற்றே மனத்தாங்கலுடன் வினவியதும் அவள் பதறித்தான் போனாள்.

"சேச்சே!  நான் அந்த அர்த்தத்துல சொல்லல்லீங்க. அதுல நிலையான வருவாய் வராதில்லே?  அதுக்குச் சொன்னேன்!'' என்று அவள் விளக்கியதும்,  "உங்கள மாதிரி செல்வாக்கு உள்ளவங்க சிபாரிசு செஞ்சா, ஒருக்கா ஒரு நிலையான வேலை எனக்குக் கிடைக்கலாங்க'' என்றான் துரை.

"பாக்கலாங்க. என் காலேஜ் படிப்பு முடிய இன்னும் அஞ்சாறு மாசந்தான் இருக்கு.  இடையிலே நான் தெரிஞ்சவங்க கிட்ட விசாரிக்கிறேன். எதுக்கும் உங்க சர்ட்டிஃபிகேட்ஸ் ஜெராக்ஸை எங்கிட்ட குடுத்து வையுங்க,'' எண்றாள் அவள்.

அவனும் மறுநாளே அவற்றை அவளிடம் கொடுத்தான்.  அவள் அவற்றுக்கு மேலும் சில நகல்களை எடுத்து வைத்துக்கொண்டாள்.  ஒன்றைத் தன் அப்பாவிடமும் கொடுத்தாள். ஒரு பெரிய ஏற்றுமதி-இறக்குமதித் தொழிலகத்தில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்த அவள் அப்பா ஐந்திலக்கச் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அவரால் ஏதாவது செய்ய முடியும் என்று அவள் நம்பினாள்.

அவளது நம்பிக்கை பொய்க்கவில்லை.  அவள் கல்லூரிப்படிப்பை நிறுத்திய மறு மாதமே, துரைக்குத் தம் அலுவலகத்திலேயே ஓர் எழுத்தர் வேலைக்குச் சதாசிவத்தால் ஏற்பாடு செய்யமுடிந்தது.

அதன் பிறகு, ஒரு மாதத்துக்குள் அவனால் தன் தங்கையின் திருமணத்தையும் முடித்துவிட முடிந்தது. காரணம் அந்தப் பையனுக்கு அவன் தங்கையின் மீது வந்த காதல்தான். "வரதட்சிணை ஒரு ரூபாய் கூட வேண்டாம்'' என்று சொல்லிவிட்டானாம். நொண்டிச்சாக்குகள் சொல்லி அவனது நியாயமான போக்கை மறுதலிப்பதற்கு அந்த இளைஞனுக்குப் பெற்றோர் இல்லாதது வாய்ப்பாய்ப் போனது என்றும்,  தன்னை வளர்த்த மாமனை அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை''  என்றும் சொல்லி அவன் அவளுக்குத் திருமண அழைப்பிதழை அவளை நேரில் பார்த்துக்கொடுத்த போது, சிரித்துக்கொண்டே தெரிவித்தான்.

தன் அப்பாவுக்கு ஏற்கெனவே அவன் அழைப்பிதழ் கொடுத்திருந்தது பற்றி அறிந்திருந்த அவள் தனக்கென்றும் எதற்காக மற்றொன்றைத் தரவேண்டும், அது ஒன்றே போதுமே என்ற போது,

"நீங்க எனக்கு ஸ்பெஷல்ங்க!'' என்று சற்றே அடங்கிய குரலில் கூறிவிட்டுத் தனது கோதுமை நிற முகம் சிவப்பேற அவன் அவளைப் பார்த்த போது, அவளுள் ஒரு நெருடல் விளைந்தது. அந்த அவனது கூற்றில் வேறுபாடான எதையோ  அவள் உணர்ந்து தானும் சிவந்தாள்.  அவனது தயக்கமான குரலை விடவும், தானும் வெட்கமுற்றதுதான் அவளை அதிகமாய் வியப்புறச் செய்தது. அவனது நெடிய, ஆழமான பார்வையை அவளால் ஒரு கணத்துக்கு மேல் எதிர்கொள்ள முடியாது போயிற்று.  அதற்கு முன்னால் அவளை அவன் அவளது இதயத்தை ஊடுருவுகிறாப்போல் அப்படி ஒரு பார்வை பர்த்ததில்லை. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து வந்திருந்தவன். அவளுள் சன்னமாக ஓர் அதிர்ச்சி பரவியது. அவனது பேச்சின் உட்கிடை தன் மீது அவனுக்கு இருந்த காதலைத் திட்டவட்டமாய் உணர்த்தியதாய் மிகத் தெளிவாய்ப் புரிந்துகொண்டதில் அவளது அதிர்ச்சி அதிகமாயிற்று. அவள் தனது எதிரொலியையும் எண்ணித் தனக்குள் திகைத்துத் திடுக்கிட்டுப் போனாள்.  அவனது அந்தக் கூற்றுக்கு என்ன பதிலைச் சொல்லுவது என்று கணம் போல் அவளுக்குத் தடுமாற்றமாக இருந்த போதிலும், எதையாவது சொல்லித்தானே ஆகவேண்டும் என்று எண்ணி, "என்ன சொல்றீங்க, துரை? "ஸ்பெஷல்''னா?' என்று தலையைக் குனிந்துகொண்டே வினவினாள்.

அவளது முகத்துச் சிவப்பு, தலையின் குனிவு ஆகியவற்றால் அவன் துணிவடைந்திருந்திருக்க வேண்டும்.

அப்போது அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. அந்த நிலையாலும் துணிவுற்ற அவன், ஒரு திடீர் உந்துதலில், "நான் உங்களை ரொம்பவே நேசிக்கிறேன், தாமரை!   என் நிலையினால்,  உங்கப்பா சம்மதிக்கவே மாட்டாருதான். ஆனா உங்களுக்கு விருப்பம்னா, நாம போராடி ஜெயிக்க முடியும்.  யோசிச்சு வையுங்க. தாமரை!'' என்று கரகரப்பான தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுக் கணமும் தாமதியாமல் விரைந்து சென்றுவிட்டான்.

தாமரை, திக்பிரமை பிடித்துப் போனவள் போல் சிறிது நேரம் நின்றபின், கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவள் கால்களும், அந்தத் திருமண அழைப்பிதழைப் பற்றியிருந்த அவள் விரல்களும் அதிர்ந்துகொண்டிருந்தன. அவள் அம்மா பக்கத்து வீட்டு அம்மாளுடன் கடைத்தெருவுக்குச் சென்றிருந்தாள். தான் தனிமையில் இருந்த அந்தப் பொழுது தன்னையும் அலசிக்கொள்ள அவளுக்கு உடனே உதவியது.

தன்னையும் அறியாது துரை மீது தனக்குக்  காதல் உணர்வு இருந்ததா? என்கிற கேள்வி அவளுள் கிளம்பிய போது, அப்படி யொன்றும் இருந்ததில்லை என்றே அவளுக்குத் தோன்றியது. எனினும் நன்னடத்தையுள்ள அவன் மீது தனக்கு மிகவும் மரியாதை உண்டு என்பதில் அவளுக்குத் துளி ஐயமும்  இல்லை.

இப்படி ஓர் எண்ணம் தோன்றியதும், அவள் தன்னையும் அறியாது அவனது தோற்றம் பற்றி நினைத்துப் பார்த்தாள்.  மாநிறத்தவனாக இருந்த போதிலும், அவன் மிகவும் அழகானவன்.  அதிலும் கூரிய மூக்கின் கீழிருந்த அந்த அடர்த்தியான மீசையும், பெரிய கண்களும், பளிச்சென்ற பார்வையும் அவனது அழகை அதிகமாக்கின.

அந்தக் கருகரு மீசையும், கருமையான புருவங்களுமே அவன் விழிகளைப் பளிச்சென்று ஒளிவிடச் செய்ததாகவும் அவளுக்குத் தோன்றியது.

ஆட்டோவில் பயணிக்கையில் எதற்காகவேனும் அவளுடன் பேச நேரின் அவன் விழிகள் அவள் முகம் விட்டு நீங்கியதே இல்லை என்கிற கண்ணியமும் முதன்முறையாக அவளுக்கு ஞாபகம் வந்தது. 

இப்படிப்பட்ட ஓர் இளைஞனைக் காதலிப்பது கடினமே அன்று என்று அப்போது அவள் நினைத்தாள்.  காதல் தோன்றாமல் இருப்பதும், அவன் அதை வெளிப்படுத்தும் போது அதை ஏற்காமல் இருப்பதும்தான் கடினமானவை என்றும் அவள் நினைத்துக்கொண்டாள்.  காதல் என்பது, பெண்ணைப் பொருத்தவரையில், அதை வெளிப்படுத்தும் ஆண்மீது பெரும்பாலும் உடனே ஏற்பட்டுவிடுகிற ஒன்றுதான்.  முன் பின் அறியாத ஒருவனுக்கு வாழ்க்கைப்படுவதை விடவும், தன் மீது அன்பு கொண்டுள்ளதாய்ச் சொல்லும் ஒருவனை ஏற்பதே அறிவுடைமை என்பது பெண்ணின் கணிப்பாக இருக்கக்கூடும்.  ஒருவேளை, "இந்த ஆள் வேண்டாம்' என்று ஒருவனை நிராகரிப்பதற்கான மோசமான காரணங்கள் இருந்தாலன்றி, எந்தப் பெண்ணுமே, பொதுவாக, தன் காதலைக் கண்ணியமாய் வெளிப்படுத்தும் ஓர் ஆணைத் தட்டிக்கழிப்பதில்லைதான்.

தானும் அன்று அந்த நிலையில்தான் இருந்தாள் என்று பழையனவற்றை அசை போட்ட இந்தக் கணத்தில் தாமரைக்குத் தோன்றியது.

"ஏய்! தாமரை! என்ன யோசனை? எத்தினி வாட்டி கூப்பிடுறது? எதுக்கு இம்புட்டுக் கத்திரிக்காய் அரிஞ்சிருக்குறே?'' என்ற மாமியாரின் இரைந்த குரல் தன் காதருகே ஒலிக்க, அவள் ஒரு திடுக்கிடலுடன் தலை திருப்பினாள்.  அவள் மாமியார் சொர்ணம்  கிணற்றடிக்குச் சென்று தான் களைந்த அரிசிப்பாத்திரத்துடன் அடுக்களைக்குள் நுழைந்துகொண்டிருந்தாள்.

தாமரையின் எண்ணங்கள் தற்காலிகமாய்க் கலைந்து  அப்போதைக்கு நின்றும் போயின.
 -  தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com