வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வாங்கிய சென்னைப் பெண்!

வாள் வீச்சில் (ஃ பென்சிங் )  உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய  சென்னைப் பெண்  பவானி தேவி. 
வாள் வீச்சில் தங்கப் பதக்கம் வாங்கிய சென்னைப் பெண்!

வாள் வீச்சில் (ஃ பென்சிங் ) உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கிய சென்னைப் பெண் பவானி தேவி.

ஒரு சிறிய ஃ பிளாஷ் பேக். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2003 - இல் நடந்த சம்பவம். வட சென்னையின் ஒரு பள்ளியின் ஆறாம் வகுப்பறை. நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் மாணவிகள் எடுத்த மதிப்பெண்களை ஆசிரியர் பெயருடன் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தார். "நாம் ஃபெயில் ஆகியிருப்போம் என்று அந்தப் பெண்ணுக்குப் பயம். மெதுவாக வகுப்பறையிலிருந்து வெளியே வந்தார். படிப்பில் சுமார் ரகம். வெளியே பள்ளியில் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் "ஃ பென்சிங்' எனப்படும் கத்திச் சண்டை பயிற்சியில் தன் பெயரைப் பதிவு செய்தாள். படிப்பிலிருந்து கொஞ்சம் விலகி நிற்கலாமே? என்ற எண்ணம்தான் அந்தப் பெண்ணை ஃ பென்சிங் விளையாட்டில் சேரச் செய்தது. தொடர்ந்து வாள் வீச்சில் பயிற்சி செய்து இன்று உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். சென்ற மே மாதம் ஐஸ்லேண்டில் நடந்த ஃ பென்சிங் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனையான சாரா ஜேன் ஹாம்ப்சன் என்பவரை வென்று உலக சாதனையை ஏற்படுத்தியிருக்கிறார். வாள் வீச்சு சாதனையில் இந்தியாவிற்கு முதலிடம் வாங்கித் தந்திருக்கிறார், உலக தர வரிசையில் முப்பத்தாறாவது இடத்தில் இருக்கும் பவானி. முதல் ஐம்பது இடத்தில் பவானியைத் தவிர வேறு எந்த இந்திய வீராங்கனையும் இல்லை என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

"அப்பா அனந்த சுந்தரராமன் கோயில் குருக்கள். அம்மா ரமணி வீட்டுப் பொறுப்பை கவனித்துக் கொண்டார். பெற்றோர்தான் எனக்கு கிபென்சிங் பயிற்சி பெற உதவியாக இருந்தார்கள். நான்தான் கடைக்குட்டி. 2007 -இல் பயிற்சியாளர் லாகு எனது திறமையை அடையாளம் கண்டு கொண்டார். என்னை கேரளத்தின் தலசேரிக்கு கொண்டு சென்றார். இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சிப் பள்ளி அங்கு இருக்கிறது. லாகு சாரின் மாணவியிடம் நான் தோற்றாலும், எனது வாள் வீசும் திறமை அவருக்குப் பிடித்துப் போனது.

2007 -இல் பதினேழு வயதிற்கு கீழ் பிரிவில் தேசிய சாம்பியனாகி தங்கப் பதக்கம் பெற்றேன். இந்த விளையாட்டிற்கு ஆகும் செலவு அதிகம். என்னைபோன்று சாதாரண குடும்பத்திலிருந்து வருபவர்களால் தாங்க முடியாது.

அம்மாதான் பலரிடம் விஷயத்தைச் சொல்லி பணத்திற்கு ஏற்பாடு செய்தார். "Go Sports Foundation' என்ற நிறுவனம் எனக்கு பெரிதும் உதவியது. அந்த சமயத்தில் முன்னாள் தமிழக முதல்வர் அம்மாவின் உதவியும் கிடைத்தது, எனது வாழ்க்கையில் திருப்பத்தை உருவாக்கியது. அந்த சமயத்தில் அவர் முதல்வராக இல்லை. சீனியர் ஆசிய போட்டியில் கலந்து கொள்ள தென் கொரியா செல்ல வேண்டும். போக பணம் இல்லை. அம்மாவைச் சந்தித்து எனது நிலைமையை எடுத்துச் சொன்னேன். உடனே செக் எழுதித் தந்து என்னை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோச் நிகோலா எனக்கு சிறப்பான பயிற்சி வழங்கினார். 2009 - இல் சர்வதேச அரங்கில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. அதுதான் சர்வதேச அளவில் நான் வாங்கும் முதல் பதக்கம். தொடர்ந்து பதக்க அறுவடை நடந்தது. தங்கப் பதக்கம் மட்டும் கிடைக்கவில்லை. மீண்டும் அம்மா அவர்களை 2015 -இல் சந்தித்தேன். என்னை தமிழ்நாடு Mission Olympics Elite Athlete Scheme என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் உடனே உத்தரவிட்டார். இதனால் எனக்கு ஆண்டிற்கு இருபத்தைந்து லட்சம் உதவித் தொகை கிடைத்தது. அதனால் முறையான பயிற்சியும், வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் மறைவிற்குப் பின் இந்த உதவித்தொகை தொடர்ந்து கிடைத்தால் எனக்கு பயிற்சியைத் தொடர முடியும். எனது அடுத்த இலக்கு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான்'' என்கிறார் பவானி தேவி..
- கண்ணம்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com