கனவுக்கன்னி 50 

1968 - ஆம் ஆண்டு திரையுலகில் "சப்னோன் கா சவுதாகர்' படத்தின் மூலம் "கனவுக்கன்னி' என்ற பட்டத்துடன் அறிமுகமான ஹேமாமாலினி தற்போது 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
கனவுக்கன்னி 50 

1968 - ஆம் ஆண்டு திரையுலகில் "சப்னோன் கா சவுதாகர்' படத்தின் மூலம் "கனவுக்கன்னி' என்ற பட்டத்துடன் அறிமுகமான ஹேமாமாலினி தற்போது 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். பரதநாட்டியம் தெரிந்த நடிகையாக அறிமுகமான ஹேமாமாலினி, ராஜ்கபூர், தேவ் ஆனந்த் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் 20 ஆண்டுகள் நடித்த பின்னர் ரிஷிகபூர், நஸ்ருதீன் ஷா போன்ற அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார். நடிகையாக மட்டுமன்றி தற்போது தயாரிப்பாளர், இயக்குநர், பாடகி, திரைப்பட அமைப்புகளின் தலைவர், லோக்சபா எம்.பி., அரசியல்வாதி என பல்வேறு துறைகளில் ஈடுபாடு காட்டினாலும், தொடர்ந்து நடனத்தை மட்டும் மறக்காமல் "ராமாயணம், துர்கா' என நாட்டிய நாடகங்களை இயக்கியும், நடத்தியும் வருகிறார். திரையுலக வாழ்க்கையைப் பற்றி ஹேமாமாலினியே பகிர்ந்து கொள்கிறார்:

"நடனத்திற்கு முகபாவம் மிகவும் அவசியமாகும். ஆனால் எப்படி நடிக்க வேண்டும் என்ற அடிப்படைப் பயிற்சியே இல்லாமல் நான் திரையுலகத்திற்கு வந்தது எதிர்பாராத சம்பவமாகும். என்னை முதன்முதலாக அறிமுகப்படுத்தியபோது, நான் திறமையாக நடிப்பேன் என்று தயாரிப்பாளர் அனந்தசாமியும், இயக்குநர் மகேஷ் கவுலும் நினைத்திருக்கலாம். அந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருப்பதாக நீங்கள் கருதினால் அந்தப் பெருமை இயக்குநரையே சேரும்.

அடுத்து நான்காண்டுகளில் நான் நடித்து வெளியான "வாரீஸ்', "தும்ஹசீன் மெயின் ஜவான்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றபோது, என்னால் நம்பவே முடியவில்லை. "கனவுக் கன்னி'   என்ற பட்டமும் அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். நடனத்தில் பயிற்சி பெற்றவள் என்பதால், நான் நடித்த படங்களில் கதாநாயகியை நாட்டியம் தெரிந்தவளாகவே உருவகப்படுத்தி, ஒரு நடனக் காட்சியை இடம்பெறச் செய்வதைக் கட்டாயமாக்கியிருந்தார்கள். "ஜஹான் பியார் மிலே'  படத்திற்குப் பின்னரே என்னுடைய கதாபாத்திரங்கள் வித்தியாசமாக அமையத் தொடங்கின.

முதன்முதலாக என்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் அனந்தசாமியுடன் எட்டாண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால், அவர் தேர்வு செய்யும் கதைகளில் மட்டுமே நான் நடித்து வந்ததோடு, என்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை அவர் பெற்று வந்தார். "ஷோலே' படத்தில் நடிக்கும் வரை தொடர்ந்து இந்த விதிமுறையை, என்னுடைய தாயார் தட்டிக் கேட்ட பின்னரே, அதற்குப் பிறகு என்னுடைய ஊதியத்தை நானே பெறத் தொடங்கினேன். "ஷோலே' வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்தாற்போல் பல வெற்றிப்படங்கள் மூலம் என்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு லேக் டாண்டன், அஸித் சென், சுபோத் முகர்ஜி, சுசில் மஜூம்தார், ரமேஷ் சிப்பி, குல்சார், விஜய் ஆனந்த் போன்ற இயக்குநர்களே காரணமாவர்.

நான் திரையுலகில் பிரவேசிப்பதற்கு முன் வைஜயந்தி மாலா, பத்மினிபோல் நடனத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென என்னுடைய தாய் ஜெயா சக்கரவர்த்திதான் அறிவுறுத்தினார். முதன்முதலாக தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடியபோது, நான் சினிமாவில் நடிக்க லாயக்கற்றவள் என திருப்பி அனுப்பப்பட்டேன். அப்போது என்னுடைய வயது 14.

80-ஆம் ஆண்டு வரை பல வெற்றிப்படங்களில் நடித்த நான், 90-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடைவெளியைச் சந்திக்க வேண்டியதாயிற்று. அதுவரை என்னுடன் ஜோடியாக நடித்த நடிகர்களும் வயது முதிர்வு காரணமாக திரையுலகிலிருந்து விலகத் தொடங்கினர். 1980-ஆம் ஆண்டுவரை என்னுடைய கணவர் தர்மேந்திராவுடன் இணைந்து 28 படங்களில் நடித்தது சாதனையாகும்.

முதன்முதலாக தர்மேந்திராவுடன் இணைந்து நடிக்க நான் ஒப்பந்தமானபோது, அவருடன் இருந்த சசிகபூருடன் சேர்ந்து இருவரும் என்னைப் பற்றி பஞ்சாபி மொழியில் விமர்சித்தது நன்றாக நினைவில் உள்ளது. அதன் பின்னர் 1970-ஆம் ஆண்டில் இருவருடனும் தனித்தனியாக இரண்டு படங்களில் நடித்தேன். நான் நடித்த காலத்தில் ஜீனத் அமன், பர்வின் பாபி, ரேகா போன்ற நடிகைகளும், தேவ் ஆனந்த், ஜிதேந்திரா, ராஜேஷ் கன்னா, சசிகபூர், சத்ருகன் சின்ஹா, அமிதாப் பச்சன், விநோத் கன்னா போன்ற நடிகர்களும் பிரபலமாக இருந்தனர்.

நான் அரசியலுக்கு வருவதற்கு விநோத் கன்னாதான் காரணம். அவர் பா.ஜ வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்காகத் தேர்தல் பிரசாரம் செய்யும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். எனக்கு அரசியலைப் பற்றியோ, எப்படி பிரசாரம் செய்வது என்பது பற்றியோ ஏதும் தெரிந்திருக்கவில்லை.

என்னுடைய அம்மா சொல்வார் "புதிய வாய்ப்புகள் வந்தால் முயற்சி செய். பின்னர் உனக்குப் பிடிக்கவில்லை என்றால் திரும்பவும் செய்யாதே''. இதைத் தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்பு வந்தது. அப்போதும் அம்மாதான் சொன்னார். "வைஜயந்தி மாலாவை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலில் இறங்கு'' உண்மையில் அதுவரை இந்த உலகத்திற்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே இருந்தேன். சினிமா, நாட்டியம் என்று இருந்த எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. தலைவர்கள் பேசுவதைக் கவனிக்கத் தொடங்கினேன். நாளடைவில் நானே பேசுமளவிற்குத் தகுதி பெற்றேன்.

எந்தத் துறையாக இருந்தாலும் பெண்களை மிகவும் கேவலப்படுத்துவதை நான் அறிந்துள்ளேன். என்னைப் பொருத்தவரை அதையெல்லாம் சமாளித்து வந்துள்ளேன். நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பதால் எதை எப்படிச் செய்ய வேண்டுமென்பதை அறிந்திருக்கிறேன். உதாரணமாக என்னுடைய தொகுதியைப் பொருத்தவரை  "அதிகார வேட்கை' மிகுந்தவர் அதிகமென்பதால் யாருமே பொறுப்பேற்க விரும்புவதில்லை. துவக்கத்தில் இப்பிரச்னையை எப்படிக் கையாளுவது என்பதில் குழப்பமேற்பட்டது. பிறகு அப்படிப்பட்டவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதைப் புரிந்து கொண்டேன். இப்போது மக்கள் அணுகுமுறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை வலுப்பெற்றுள்ளது.

தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியாக நான் அவரை திருமணம் செய்து கொண்ட பின், அவரது முதல் குடும்ப விவகாரங்களில் நான் தலையிட்டதில்லை.

என்னுடைய பெண்கள் ஈஷா,  அஹானாவுக்கு அவர்களது தந்தை தர்மேந்திராவை மிகவும் பிடிக்கும். அவர்கள் சினிமா, நடனம் போன்றவைகளில் ஈடுபாடு காட்டாதது அவருக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய நாட்டியத்தைப் பொருத்தவரை அது தெய்வீகமான கலை என்றே கருதுகிறார். நான் எதைச் செய்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பார். ஆனால் நான் நடத்தும் ராமாயணம், துர்கா போன்ற நாட்டிய நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அதை மேடையில் பார்க்க அவர் விரும்பியதில்லை.

என்னுடைய வாழ்க்கையில் நான் தாய்மை அடைந்ததையும், குழந்தைகளை என் விருப்பப்படி வளர்த்ததையும் பெருமையாகக் கருதுகிறேன். நான் மும்பையில் இருக்கும்போதெல்லாம் குழந்தைகளை நானே பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருவேன். இதற்காகவே காலை 11.30 மணிக்கு முன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என்று கண்டிப்புடன் கூறியதுண்டு. பெரும்பாலான வெளிப்புறப் படப்பிடிப்பின்போதுகூட ஈஷாவும், அஹானாவும் என்னுடன் இருந்ததுண்டு.

"65 வயதிலும் இளமையாகத் தோற்றமளிக்கிறீர்களே எப்படி என்று' பலரும் என்னிடம் கேட்பதுண்டு. எனது சருமத்தில் தோன்றும் சுருக்கங்களை மறைக்க நான் விரும்பவில்லை. தினமும் 2 மணி நேரம் நடனமாடுகிறேன். உடல் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறேன். நேரம் தவறாமல் சரியான உணவை உட்கொள்கிறேன். தேவையில்லாமல் பார்ட்டிகளுக்குச் செல்வதோ, குடிப்பதோ கிடையாது. நேரத்திற்கு உறங்குகிறேன்''  என்கிறார் நிரந்தரக் கனவுக் கன்னி ஹேமா மாலினி.

அம்மா
என் அம்மா என்னைக் கண்டிப்புடன் வளர்த்ததைப்போல், நான் என் பெண்களிடம் கடுமையைக் காட்டியதில்லை. ஆறு வயதில் நான் நடனம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக என் அம்மா என்னை விடியற்காலையிலேயே எழுப்பி விடுவார். எனக்குத் திருமணமான பின்பு கூட அவர் என்னிடம் கண்டிப்பு காட்டியதுண்டு. ஒருமுறை பொறுக்க மாட்டாமல், "ஏன் எப்போது பார்த்தாலும் என்னிடம் கடுமையாகவும், கண்டிப்புடனும் நடந்து கொள்கிறாய்?' என்று கேட்டேன். அன்றிலிருந்து அவர் என்னிடம் கடுமை காட்டுவதை விட்டுவிட்டார். அவரது மறைவை பெரும் இழப்பாகவே கருதுகிறேன்.

- பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com